Published : 31 Dec 2017 10:52 AM
Last Updated : 31 Dec 2017 10:52 AM

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்தார் குர்பானி: முன்னிலையை நோக்கி நகர்கிறது விதர்பா அணி

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விதர்பா அணியின் வேகப்பந்து வீச்சார் ராஜ்னிஷ் குர்பானி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

இந்தூரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டெல்லி அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 88 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்கள் சேர்த்தது. 99 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த போதிலும் துருவ் ஷோரேவின் சதத்தாலும், ஹிமாத் சிங்கின் அரை சதத்தாலும் (66) டெல்லி அணி சரிவில் இருந்து மீண்டிருந்தது. ஷோரே 123 ரன்களுடனும், விகாஷ் மிஸ்ரா 5 ரன்களுடனும் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். விதர்பா அணியின் வேகப்பந்து வீச்சாளரான குர்பானி 101-வது ஓவரின் கடைசி இரு பந்துகளிலும், 103-வது ஓவரின் முதல் பந்திலும் விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

அவரது பந்து வீச்சில் விகாஷ் மிஸ்ரா (7), ஷைனி (0), ஷோரே (145) ஆகியோர் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர். இதன் மூலம் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார் குர்பானி. இதற்கு முன்னர் கடந்த 1972-73ம் ஆண்டு மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் பி.கல்யாண சுந்தரம் ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார். கடைசி விக்கெட்டான கேஜ்ரோலியாவையும் (0) வெளியேற்றினார் குர்பானி. முடிவில் டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 102.5 ஓவர்களில் 295 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. குர்பானி 59 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்கள் கைப்பற்றினார்.

இதையடுத்து பேட் செய்த விதர்பா அணி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 67 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர்களான ஃபைஸ் பாஸல், சஞ்ஜெய் ஆகியோர் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியை சீரான இடைவெளியில் ஆகாஷ் சுதன் ஆட்டமிழக்க செய்தார். அவரது பந்து வீச்சில் ஃபைஸ் பாஸல் 67, சஞ்ஜெய் 31 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய கணேஷ் சதீஷ் 12 ரன்களில் ஷைனி பந்திலும், அபூர் வாங்கடே 28 ரன்களில் கேஜ்ரோலியா பந்திலும் ஆட்டமிழந்தனர். மூத்த வீரரான வாசிம் ஜாபர் 61, அக்சய் வக்ரே 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 89 ரன்கள் பின்தங்கிய நிலையில் விதர்பா அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x