Published : 31 Dec 2017 10:52 AM
Last Updated : 31 Dec 2017 10:52 AM

ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசல்: டிராவில் முடிந்தது மெல்போர்ன் டெஸ்ட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4-வது ஆட்டமான பாக்ஸிங் டே போட்டியை ஆஸ்திரேலிய அணி டிராவில் முடித்தது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தார்.

மெல்போர்னில் நடைபெற்ற இந்த டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 327 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 144.1 ஓவர்களில் 491 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அலாஸ்டர் குக் 244 ரன்கள் விளாசினார்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்கள் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து 164 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 43.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. பான்கிராஃப்ட் 27, உஸ்மான் கவாஜா 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். டேவிட் வார்னர் 40, ஸ்மித் 25 ரன்களுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

வழக்கத்துக்கு மாறாக மிக நிதானமாக விளையாடிய வார்னர் 227 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்தார். 301 நிமிடங்கள் களத்தில் நின்ற வார்னர், ஸ்மித்துடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஷான் மார்ஷ் 4 ரன்களில் ஸ்டூவர்ட் பிராடு பந்தில் வெளியேறினார். இதன் பின்னர் களம் புகுந்த மிட்செல் மார்ஷ், ஸ்மித்துடன் இணைத்து தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார். ஸ்மித் 259 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் தனது 23-வது சதத்தை அடித்தார். ஆஸ்திரேலிய அணி 124.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை டிராவில் முடித்துக் கொள்ள இரு அணியின் கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஸ்மித் 275 பந்துகளில் 102 ரன்களும், மிட்செல் மார்ஷ் 166 பந்துகளில் 29 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக அலாஸ்டர் குக் தேர்வானார். பாக்ஸிங் டே டெஸ்ட்டில் கடந்த 20 ஆண்டுகளில் டிராவில் முடிந்த 2-வது ஆட்டம் இதுவாகும். 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் 3 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ஏற்கெனவே தொடரை கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி டெஸ்ட் வரும் 4-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x