Published : 10 Aug 2023 08:11 AM
Last Updated : 10 Aug 2023 08:11 AM
கயானா: 2 தோல்விகள் அல்லது வெற்றிகள் எதையும் மாற்றிவிடாது. எங்களிடம் நீண்ட கால திட்டங்கள் உள்ளன என இந்திய கிரிக்கெட் டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொட ரில் முதல் இரு ஆட்டங்களிலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை உயிர்ப்பிப்புடன் வைத்தது.
அந்த ஆட்டத்தில் 160 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1, ஷுப்மன் கில் 6 ரன்களில் நடையை கட்டினர். இதன் பின்னர் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா கூட்டணி அதிரடியாக விளையாடி வெற்றியை வசப்படுத்தியது. சூர்யகுமார் யாதவ் 44 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் விளாசிய நிலையில் அல்சாரி ஜோசப் பந்தில் ஆட்டமிழந்தார்.
திலக் வர்மா 37 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 49 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 20 ரன்களும் சேர்த்துஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வானார். தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-1 என முன்னிலை வகிக்கும் நிலையில் 4-வது டி 20 ஆட்டம் 11-ம் தேதி அமெரிக்காவின் லாடர்ஹில் நகரில் நடைபெறுகிறது.
நீண்டகால திட்டங்கள்: 3-வது டி 20 ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது:
இந்த வெற்றி எங்களுக்கு முக்கியமானது. தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் எந்த வகையில் முக்கியமானதாக இருக்கும் என்று நாங்கள் விவாதித்திருந்தோம். இருப்பினும் 2 தோல்விகள் அல்லது வெற்றிகள் எதையும் மாற்றிவிடாது. எங்களிடம் நீண்டகால திட்டங்கள் உள்ளன.நாங்கள் திறனை வெளிப்படுத்துவது முக்கியம். சுழற்பந்து வீச்சாளர்கள் குறித்து எந்ததிட்டமும் இல்லை. நிக்கோலஸ் பூரன் பிற்பாதியில் களமிறங்கியதால் முன்னதாகவே சுழற்பந்து வீச்சை பயன்படுத்தினோம்.
அக்சர் படேல் கடந்த ஆட்டத்தில் பந்துவீசவில்லை. எனினும் இந்த ஆட்டத்தில் சிறப்பாக வீசினார். இவ்வாறு ஹர்திக் பாண்டியா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT