Last Updated : 10 Aug, 2023 06:13 AM

4  

Published : 10 Aug 2023 06:13 AM
Last Updated : 10 Aug 2023 06:13 AM

ஜிடிபி உண்மையைச் சொல்கிறதா?

பொருளாதாரத்தில் உலகின் முன்னணி நாடுகளான அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, 2.7 டிரில்லியன் டாலர் மதிப்புடன் ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ள செய்தி சில மாதங்களுக்கு முன்னர் உற்சாகமாகப் பேசப்பட்டது. ஒரு நாட்டின் வளர்ச்சி அல்லது முன்னேற்றத்தைக் குறிக்கும் ஒற்றை வளர்ச்சிக் குறியீடாக, உலகளாவிய அளவில் ஜிடிபி என்கிற கருத்தாக்கம் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு நாட்டில், ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்தப் பண்டங்கள், பணிகள் ஆகியவற்றின் மதிப்பை, ‘ஜிடிபி’ எனச் சுருக்கமாக வழங்கப்படும் ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி’ குறிக்கிறது. ஆனால், ஜிடிபி என்னும் வளர்ச்சிக் குறியீடு மிகவும் மேம்போக்கானது; வளர்ச்சி என்ற சொல்லுக்குத் தவறான புரிதல்களை உருவாக்குவது என்றும் வாதிடப்படுகிறது. இதன் பின்னணி என்ன?

மக்களுக்கு என்ன பயன்? - ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் உற்பத்தி, பகிர்வு, நுகர்வு ஆகிய மூன்றும் சம அளவு முக்கியமானவை. ஆனால், ஜிடிபி கருத்தாக்கம், உற்பத்தியை மட்டுமே கணக்கில் கொள்கிறது. பகிர்வையும் நுகர்வையும் முற்றாகப் புறந்தள்ளிவிடுகிறது; ஒரு நாட்டின் உற்பத்தி மதிப்பு, அதாவது சந்தை மதிப்பு எவ்வளவு கூடுகிறது என்று மதிப்பிடுகிறதே தவிர, அந்த உற்பத்தி மதிப்பு வளர்ச்சி விகிதம், அந்நாட்டு மக்கள் வாழ்க்கைத் தரத்தின் மீது ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதைக் கணக்கிடுவதில்லை.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துகொண்டே இருப்பதுபோல் தோற்றம் தரும். ஆனால், அந்த நாட்டில் வாழும் மக்கள் எந்த முன்னேற்றத்தையும் உணர இயலாது. பொருளாதாரம் வளர்ந்துகொண்டே இருப்பதுபோல் தோன்றும். ஆனால், அந்நாடு திடீரெனப் பொருளாதார வீழ்ச்சியைச் சந்திக்கும். ஆக, ஜிடிபி குறியீட்டை வைத்துப் பொருளாதார ஏற்ற இறக்கங்களைக்கூடக் கணிக்க முடியாது.

2008இல் ஏற்பட்ட உலக அளவிலான நிதி நெருக்கடியை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியவில்லை. இது தவிர வறுமை, வேலையின்மை, பாலினச் சமத்துவமின்மை விகிதம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் என எவற்றையும் ஜிடிபியை மட்டும் வைத்துக்கொண்டு தெரிந்துகொள்ள இயலாது. நிலைத்த வளர்ச்சி இலக்குகள் என 17 இலக்குகளை ஐ.நா. அவை வரையறுத்துள்ளது.

ஜிடிபி வளர்ச்சிப் போக்கு இதனை நிறைவேற்றுவதற்கு உறுதுணையான குறியீடாக இருக்காது எனப்படுகிறது. எனவே, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு என்னும் வளர்ச்சிக் குறியீடு, எந்த விதத்திலும் உண்மையான வளர்ச்சியைப் பிரதிபலிப்பதில்லை எனத் தீர்க்கமாக வாதிடப்படுகிறது. சரி, நாட்டின் வளர்ச்சியை அளவீடு செய்ய மாற்று அளவீடுகள் இல்லையா?

மனிதவளக் குறியீடு: நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சியை, மக்களின் வாழ்நிலையை, வாழ்க்கைத் தரத்தை, வெளிக்காட்டும் சில அளவீடுகள் உள்ளன. அவற்றில் ஒன்று வெகுவாக அறியப்பட்ட ‘மனித மேம்பாட்டுக் குறியீடு’ [Human Development Index (HDI)]. கல்வி, ஆரோக்கியம், மனித சராசரி ஆயுள்காலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்படும் குறியீடு இது.

வெறும் உற்பத்தி மதிப்பை மட்டும் கணக்கில் கொள்ளாமல், வாழ்க்கைத் தரக் குறியீடுகளின் அடிப்படையில் இந்தக் குறியீட்டு எண் தயார் செய்யப்படுவதால், உண்மையான வளர்ச்சியை மதிப்பீடு செய்ய ஜிடிபி-யைவிடச் சிறந்த கருவி இது. இதுவும்கூட உண்மையான வளர்ச்சியை முழுவதுமாக அளந்து பார்க்கத்தக்க சிறந்த கருவியல்ல என்று விமர்சனம் இருக்கிறது. ஆனாலும், ஜிடிபி கணக்கீட்டைவிடவும் ஒப்பீட்டளவில் சிறந்த மதிப்பீடு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

உலக நாடுகளின் கவனத்துக்கு: பரவலாக அறியப்படாத வேறு சில சிறந்த வளர்ச்சிக் குறியீடுகளும் உண்டு. அத்தகைய கணக்கீட்டுக்கான தரவுகள் எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரி சேகரிக்கப்படுவதில்லை. ‘மகிழ்ச்சிக்கான புவிக்கோளக் குறியீடு’ (Happy Planet Index) ஒன்று கணக்கிடப்படுகிறது. சராசரி வாழ்நாள், வாழ்க்கை திருப்தி, சூழலியல் சீர்கேடு ஆகியவற்றை உட்படுத்தி இந்தக் குறியீடு தயாரிக்கப்படுகிறது.

இந்தக் குறியீட்டை அளவுகோலாகக் கொண்டால், முன்னேற்றப் பாதையில் கோஸ்டரிகா நாடுகூட அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பணக்கார நாடுகளை முந்திவிடுகிறது. வாழ்க்கைத் தரம், ஏற்றத்தாழ்வுகள், குன்றாத வளர்ச்சி, சூழலியல் பாதிப்புகள் ஆகியவற்றை முன்வைத்து மதிப்பீடுகளை உருவாக்கலாம்.

ஆனால், அவ்வாறான மதிப்பீடுகளை எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரி கணக்கிடுவது சற்றுக் கடினம். பொத்தாம் பொதுவானதாகவும் தோன்றலாம். ஆனால், நிச்சயமாக ஜிடிபி குறியீட்டைவிட மேம்பட்ட வளர்ச்சிக் குறியீடாக இதைப் பயன்படுத்த முடியும். இத்தகைய மதிப்பீடுகள் சாத்தியம் இல்லை என்று ஒதுக்கித் தள்ளாமல், அவற்றைச் செம்மைப்படுத்தி உலக நாடுகள் ஒரு தரமான மதிப்பீட்டு உத்தியைத் தயாரிக்க முன்வர வேண்டும்.

இன்னும் சில கணக்கீடுகள்: சமூகத்தின் பெரும் பகுதி மக்கள் உழைப்பு சக்தியை நல்கி, அதன் பலனைப் பெற்றே வாழக்கூடியவர்களாக உள்ளனர். அத்தகைய சமூகத்தில் உழைப்புச் சந்தையை அடிப்படையாகக் கொண்டு ஒரு குறியீட்டை உருவாக்கலாம். தொழிலாளர்களின் சராசரிக் கூலியை, வேலைவாய்ப்பு விகிதத்தால் பெருக்கி, இந்தக் குறியீடு உருவாக்கப்படுகிறது. ஜிடிபி கணக்கீட்டைக் காட்டிலும் உண்மையான வளர்ச்சியைப் புரிந்துகொள்ள இந்தக் குறியீடு உதவும்.

இத்தகைய கணக்கீடு வேறு ஓர் உண்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த இரண்டு வகைக் குறியீடுகளும் நேரெதிர் திசையில் பயணிக்கக்கூடியவை. அதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்லும் அதேவேளை, உழைப்புச் சந்தைக் குறியீடு குறைந்துகொண்டே செல்கிறது.

ஒரு நாட்டில் வாழும் மக்களுக்குக் கிடைக்கும் சத்தான உணவு அடிப்படையில், குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது, அந்த நாட்டில் வாழும் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணக் கிடைக்கும் சத்தான உணவையும் பொறுத்ததே. இந்த மதிப்பீடு வளர்ச்சியை அளவிடும் சிறந்த கருவியே.

காலநிலை மாற்றம் எல்லா துறைகளின் மீதும் பெரும் தாக்கம் செலுத்திவருவதால், சூழலியல் சார்ந்த மதிப்பீட்டு உத்திகள் தரமான வாழ்க்கையை அறிந்துகொள்ள உதவும். கரியமில வாயு உமிழ்வில் தனி மனிதர்களின் பங்கு என்ன என்பதும்கூட இக்காலகட்டத்தில் முக்கியக் குறியீடே.

செல்வந்தர்கள் தங்கள் வாழ்க்கை முறை, தொழில் துறைச் செயல்பாடுகள் மூலம் எந்த அளவுக்கு இதில் பங்களிக்கின்றனர், அடித்தட்டு மக்களுக்கு இதில் பங்கு உண்டா என்பதன் அடிப்படையில் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள இதுவும் ஒரு சிறந்த கருவியாக இருக்கும்.

மாற்றம் அவசியம்: “மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சிக் குறியீடு, இனிமேலும் ஒரு நாட்டின் வளர்ச்சியைக் குறிக்கும் அளவுகோலாகத் தொடர்வது சரியல்ல” என ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டர்ஸ் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

பொருளாதார நிபுணர்கள் பலர், “ஜிடிபி அளவீடானது வளர்ச்சியைக் காட்டும் அளவுகோலாக இல்லை. மாற்று மதிப்பீட்டு உத்திகள் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். இருந்தபோதும், பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் ஜிடிபி அளவீட்டிலிருந்து இதுவரை நகரவில்லை.

மேம்போக்கான உற்பத்தி மதிப்பு உயர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வளர்ச்சியைக் கொண்டாடி வருகிறோம். உண்மையான வளர்ச்சியை வெளிப்படுத்தும் குறியீடு ஒன்றை நடைமுறைப்படுத்தினால், அதில் மக்கள் நலன் முன்னிறுத்தப்படும். அதே வேளையில், முதலாளிகளின் லாப நோக்கம் பாதிக்கப்படலாம்.

இந்தத் தயக்கமே மாற்று மதிப்பீட்டு உத்திகள் நடைமுறைக்கு வராமல் இருப்பதற்குக் காரணமா? ஜிடிபி கணக்கீடு எளிமையானது; மாற்று உத்திகளில் கணக்கீடு சற்றுக் கடினம் என்கிற ஒரே காரணத்துக்காக, பிரச்சினைகள் நிறைந்த அளவீட்டையே தொடர்ந்து பயன்படுத்தி, வளர்ச்சி என்ற மாயையில் மக்களை வைத்திருக்கப் போகிறோமா அல்லது ஆக்கபூர்வமான மாற்று மதிப்பீட்டு முறையை உருவாக்கப் போகிறோமா?

- நா.மணி, வே.சிவசங்கர்

| நா.மணி - ஈரோடு கலை அறிவியல் கல்லூரி தொடர்புக்கு: tnsfnmani@gmail.com | வே.சிவசங்கர், புதுவை பல்கலைக்கழகம் |

To Read in English: Is Gross Domestic Product, the real indicator of economic growth?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x