Last Updated : 04 Nov, 2017 09:43 AM

 

Published : 04 Nov 2017 09:43 AM
Last Updated : 04 Nov 2017 09:43 AM

ராஜ்கோட்டில் இன்று 2-வது டி20 ஆட்டம்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா - பதிலடி கொடுக்குமா வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி 20 ஆட்டம் ராஜ்கோட் கந்தேரியில் உள்ள சவுராஸ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சர்வதேச டி20-ல் அந்த அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, இன்று 2-வது டி20 ஆட்டத்தில் மோத உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை வெல்லும். இதனால் நியூஸிலாந்து அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக் கூடும்.

டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பேட்டிங்கில் இந்திய அணியின் டாப் ஆர்டர் அசத்தியது. ஷிகர் தவண், ரோஹித் சர்மா கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 158 ரன்கள் விளாசி பிரமிக்க வைத்தது. விராட் கோலி, மகேந்திர சிங் தோனி ஆகியோரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பில் மட்டையை சுழற்றியதால் இந்திய அணி 202 ரன்கள் குவித்தது. இவர்களிடம் இருந்து இன்று மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

பந்து வீச்சில் புவனேஷ்வர் குமாரும், ஜஸ்பிரித் பும்ராவும் தொடக்க ஓவர்களிலும், கடைசி கட்ட ஓவர்களிலும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். சுழற்பந்து வீச்சாளர்களான அக்சர் படேல், யுவேந்திரா சாஹல் ஆகியோர் நடுகள ஓவர்களில் அருமையாக செயல்பட்டு ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார்கள். இந்த பந்து வீச்சு கூட்டணி நியூஸிலாந்து அணிக்கு மீண்டும் சவால் கொடுக்க தயாராக உள்ளது. ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வு பெற்றுவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் அல்லது தினேஷ் கார்த்திக்குக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கக் கூடும்.

நியூஸிலாந்து அணியின் அனுபவ பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி கூட்டணி முதல் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கத் தவறியது. டி20 போட்டியில் இவர்களின் பலமே கடைசி கட்ட ஓவர்களில் யார்க்கர்களை வீசி திணறடிப்பது தான். ஆனால் டெல்லி ஆட்டத்தில் கடைசி கட்ட ஓவர்களிலும் இந்த வேகக் கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவிக்க நியூஸிலாந்து அணியின் பீல்டிங் சொதப்பலும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

ஷிகர் தவண் 8, ரோஹித் சர்மா 16, விராட் கோலி 8 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச்களை நியூஸிலாந்து வீரர்கள் கோட்டை விட்டனர். பீல்டர்களின் சுதாரிப்பின்மையால் பந்து வீச்சாளர்களின் நம்பிக்கையும் ஒரு கட்டத்தில் முழுவதுமாக தளர்ந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். பேட்டிங்கை பொறுத்தவரையில் டாம் லதாம் மட்டுமே சீராக ரன்கள் சேர்த்து வருகிறார்.

கேப்டன் வில்லியம்சன், மார்ட்டின் கப்தில், காலின் மன்ரோ ஆகியோரை உள்ளடக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டால் மட்டுமே இந்திய பந்து வீச்சின் மீது ஆதிக்கம் கொள்ள முடியும். பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக இன்றைய ஆட்டத்தில் சீனியர் வீரரான ராஸ் டெய்லர் சேர்க்கப்படக்கூடும். தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் நியூஸிலாந்து அணி வெற்றிக்காக போராடும் என கருதப்படுகிறது.

போட்டி நடைபெறும் சவுராஸ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் குறுகிய வடிவிலான போட்டிகளில் இதுவரை ஒரே ஒரு சர்வதேச டி20 ஆட்டமும், 2 ஒருநாள் போட்டியும் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு இங்கு நடைபெற்ற டி 20 ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் 202 ரன்கள் இலக்கை இந்திய அணி 2 பந்துகள் மீதம் இருக்க எட்டிப் பிடித்தது. 2013 மற்றும் 2015-ம் ஆண்டில் இந்த மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டிருந்தது இந்திய அணி.

நேரம்: இரவு 7, நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x