Published : 13 Jul 2023 07:16 AM
Last Updated : 13 Jul 2023 07:16 AM
புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறுகிறது. இம்முறை போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்ததால் ஆசிய கோப்பை கிரிக்கெட்டை கலப்பின மாதிரி அடிப்படையில் நடத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.
இதனை நஜாம் சேதியின் தலைமையின் கீழ் இயங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டது. இதன்படி பாகிஸ்தானில் 4 லீக் ஆட்டங்களையும், தொடரின் எஞ்சிய 9 ஆட்டங்களையும் இலங்கையில் நடத்துவது எனமுடிவு செய்யப்பட்டது. ஆனால் இம்மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவராக ஸாகா அஷ்ரப் பொறுப்பேற்றார்.
இதன்பின்னர் ஸாகா அஷ்ரப், நஜாம் சேதியின் கீழ் செயல்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டிருந்த கலப்பின மாதிரி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை நிர்வாகிகள் கூட்டம் தென் ஆப்பிரிக்காவின்டர்பன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டுள்ள பிசிசிஐ செயலாளார் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் ஸாகா அஷ்ரப்பை நேரில் சந்தித்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணையை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக ஐபிஎல் சேர்மன் அருண் துமால் கூறும்போது, “பிசிசிஐ செயலாளார் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஸாகா அஷ்ரபை சந்தித்து ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணையை இறுதி செய்துள்ளார். இதன்படி லீக் சுற்றின் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் உட்பட எஞ்சிய 9 போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படும். இந்திய அணி, பாகிஸ்தான் சென்று விளையாடுவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை. இந்திய அணி அங்கு செல்லாது” என்றார்.
2010-ம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் நடந்தது போன்று இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை தம்புலாவில் விளையாடும். பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் நேபாளம் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மட்டும் விளையாடும். ஆப்கானிஸ்தான் - வங்கதேசம், வங்கதேசம்- இலங்கை, இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டங்களும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT