Published : 02 Jul 2023 06:08 AM
Last Updated : 02 Jul 2023 06:08 AM

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் தகுதியை இழந்தது மேற்கு இந்தியத் தீவுகள்

கிறிஸ் சோல் பந்தில் போல்டான கைல் மேயர்ஸ்.

ஹராரே: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் முதன் முறையாக பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள இந்தியா உட்பட 8 அணிகள் நேரடியாக ஏற்கெனவே தகுதி பெற்றிருந்தன. மீதம் உள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டம் ஜிம்பாப்வேயில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றின் முடிவில் ஏ பிரிவில் இருந்து ஜிம்பாப்வே, நெதர்லாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.

லீக் சுற்றில் குவித்த வெற்றிகளின் அடிப்படையில் இதில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் போனஸாக தலா 4 புள்ளிகளுடன் சூப்பர்6 சுற்றில் களமிறங்கின. மேற்கிந்தியத் தீவுகள் அணியானது ஜிம்பாப்வே, நெதர்லாந்திடம் தோல்வி அடைந்ததால் புள்ளிகள் ஏதும் இன்றி களமிறங்கியது. இதனால் சூப்பர் 6 சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் உலகக் கோப்பை தொடருக்கு மேற்கு இந்தியத் தீவுகள் தகுதி பெறுவது சந்தேகம் என்ற சூழல் உருவானது.

இந்நிலையில் ஹராரே நகரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 6 சுற்றில் மேற்கு இந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியானது 43.5 ஓவர்களில் 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 45, ரோமேரியோ ஷெப்பர்டு 36, பிரண்டன் கிங் 22, நிக்கோலஸ் பூரன் 21, கேப்டன் ஷாய் ஹோப் 13 ரன்கள் சேர்த்தனர். ஸ்காட்லாந்து அணி தரப்பில் பிரண்டன் மெக்முல்லன் 3 விக்கெட்களையும் கிறிஸ் சோல், மார்க் வாட், கிறிஸ் க்ரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

182 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 43.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஸ்காட்லாந்து வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும். அதிகபட்சமாக மேத்யூஸ் கிராஸ் 74, பிரண்டன் மெக்முல்லன் 69 ரன்கள் விளாசினர்.

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்தது. மேற்கிந்தியத் தீவுகள்அணிக்கு இந்தத் தொடரில் மேற்கொண்டு இரு ஆட்டங்கள் உள்ளன. இந்த இரு ஆட்டங்களிலும்வெற்றி பெற்றாலும் 4 புள்ளிகளை மட்டுமே அடைய முடியும். அதேவேளையில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் ஏற்கெனவே 6 புள்ளிகளை பெற்றுள்ளன. இந்த இரு அணிகளே முதல் இரு இடங்களை பிடித்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறக்கூடும்.

இதன் மூலம் இம்முறை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இரு முறை சாம்பியனான மேற்குஇந்தியத் தீவுகள் அணி இல்லாமல் நடைபெற உள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறாதது இதுவே முதன்முறை ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x