Published : 26 Jun 2023 02:55 PM
Last Updated : 26 Jun 2023 02:55 PM

ராஜஸ்தான் ராயல்ஸ் நிதி உதவி செய்வதால் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்: ஜெய்ஸ்வால்

ஜெய்ஸ்வால்

மும்பை: தனது நிதி தேவைகளை ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணி கவனித்துக் கொள்வதால் தன்னால் கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பான வகையில் கவனம் செலுத்த முடிவதாக இளம் கிரிக்கெட் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இவர் எதிர்வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“எனக்கு கிரிக்கெட்தான் பிரதானம். எனது கவனம் அனைத்தும் அதில்தான் இருக்கும். எனக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆதரவு வழங்கி வருகிறது. எனது நிதி தேவைகளை பூர்த்தி செய்வதும் ராஜஸ்தான் அணிதான். அதன்மூலம் என்னால் கிரிக்கெட் விளையாட்டில் கவனம் செலுத்த முடிகிறது. அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். தங்கள் அணியின் வீரர்களுக்காக இதை செய்து வரும் ப்ரான்சைஸ் அணிகளுக்கு மதிப்பளிக்கிறேன்” என ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

21 வயதான ஜெய்ஸ்வால், கடந்த 2015-ல் தனது கிரிக்கெட் திறனை வெளி உலகம் அறிய செய்தார். அந்த ஆண்டு கில்ஸ் ஷீல்டு போட்டியில் 319 ரன்கள் (நாட் அவுட்) மற்றும் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். லிம்கா சாதனை புத்தகத்தில் பள்ளி அளவிலான கிரிக்கெட்டில் சாதனையாக அமைந்தது. தொடர்ந்து அண்டர் 16 மும்பை மற்றும் அண்டர் 19 இந்திய அணிக்காக தேர்வானார். 2020 அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் ஜொலித்தார். அதே ஆண்டு ஐபிஎல் 2020 சீசனில் விளையாட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

அதேநேரத்தில் மும்பை சீனியர் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வந்தார். அதில் ரன்களும் குவித்தார். அண்மையில் முடிந்த ஐபிஎல் 2023 சீசனில் அதிவேக அரைசதம் பதிவு செய்து அசத்தினார். அதன்மூலம் கே.எல்.ராகுல் மற்றும் கம்மின்ஸ் சாதனையை சமன் செய்தார். அதோடு 14 இன்னிங்ஸ் விளையாடி 625 ரன்கள் எடுத்தார். இந்தச் சூழலில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை முதல் முறையாக ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x