Published : 26 Jun 2023 08:26 AM
Last Updated : 26 Jun 2023 08:26 AM

ஆஷஸ் கிரிக்கெட் தொடர் | லபுஷேனுக்கு பேட்டிங் ஆலோசனை அளிக்க பான்டிங் முடிவு

லபுஷேன்

லண்டன்: ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் மார்னஸ் லபுஷேனுக்கு பேட்டிங் ஆலோசனை வழங்க அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் தயாராகி உள்ளார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேனுக்குத் தேவையான பேட்டிங் ஆலோசனைகளைக் கூற அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த ஆண்டு ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நல்ல முறையில் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா முதல் டெஸ்டில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர். இந்த வெற்றி கொண்டாடப்பட வேண்டும்.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் வரும் 28-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது. மேலும் இந்த போட்டியானதுஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரிசையில் தொடங்கப்படும் முதலாவது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. எனவே, ஆஸ்திரேலிய அணிக்கு இது மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடினார்.ஆனால், உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள மார்னஸ் லபுஷேன் தடுமாறினார். கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் அவரது செயல்பாடுகள் சிறப்பானதாக இல்லை. அவருடன் பேசுவதற்கு நான் ஆசைப்படுகிறேன். அவருக்குத் தேவையான பேட்டிங் ஆலோசனைகளை அவராக வந்து என்னிடம் கேட்பார் என நான் காத்திருக்கிறேன். இது என்னுடைய இடம் இல்லை. மேலும் நான் அணியின் பயிற்சியாளரும் கிடையாது. நான் ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமே. மைதானத்தில் அமர்ந்து அனைத்து வீரர்களின் பேட்டிங் தொழில்நுட்பங்களை அலசி ஆராய்ந்து வருகிறேன்.

லபுஷேனுக்குத் தேவையான பேட்டிங் ஆலோசனைகளை வழங்க நான் தயாராக இருக்கிறேன். அதைப் போலவே டிராவிஸ் ஹெட் போன்றோருக்கும் ஆலோசனைகளை நான் வழங்குவேன்.

கடந்த 2 வாரங்களாக நான் மார்னஸ் லபுஷேனின் ஆட்டத்தைக் கவனித்து வருகிறேன். அவர் எந்த இடத்தில் தவறு செய்கிறார் என்பது எனக்குத் தெரிகிறது. மேலும் அவர் தனது தவறுகளை மேலும் சிக்கலாக்கிக் கொள்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

உலக கிரிக்கெட் டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் மார்னஸ் லபுஷேன் 2-ம் இடத்தில் இருப்பது உண்மைதான். அவரை இந்த இடத்துக்கு உயர்த்தியது எது என்பதில் அவர் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதைத்தான் நான் அவருக்கு சொல்ல விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x