Published : 22 Jun 2023 08:16 AM
Last Updated : 22 Jun 2023 08:16 AM

ஆஷஸ் முதல் டெஸ்ட் | கேப்டனின் இன்னிங்ஸ்

லயன் மற்றும் கம்மின்ஸ்

பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பர்மிங்காமில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 281 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் வெற்றிக்கு மேற்கொண்டு 174 ரன்கள் தேவையாக இருந்தன. கைவசம் 7 விக்கெட்களும் இருந்தன.

மழை காரணமாக மதிய உணவு இடைவேளைக்கு பின்னரே ஆட்டம் தொடங்கப்பட்டது. இதனால் அதிகபட்சமாக 67 ஓவர்கள் மட்டுமே வீசப்படும் என நடுவர்கள் அறிவித்திருந்தனர். இலக்கை நோக்கி கொஞ்சம்கொஞ்சமாக அடியெடுத்து வைத்த ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே உரித்தான பாணியில் போராட்ட குணத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்தியது.

கடும் அச்சுறுத்தலாக திகழ்ந்த உஸ்மான் கவாஜா 65 ரன்னில் பென் ஸ்டோக்ஸ் பந்திலும்,அலெக்ஸ் கேரி 20 ரன்னில் ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்ததும் ஒரு கணம் இங்கிலாந்து பெருமூச்சு விட்டது. அப்போது ஆஸ்திரேலியாவின் நிலை 227/8 என இருந்தது. எஞ்சிய 2 விக்கெட்களையும் எளிதாக சாய்த்து விடலாம் என இங்கிலாந்து அணி எண்ணியது.

ஆனால் அங்கிருந்துதான் கேப்டன்பாட் கம்மின்ஸின் இன்னிங்ஸ் வேகமெடுக்கத்தொடங்கியது. குறுகியவடிவிலான போட்டியை போன்று மட்டையை சுழற்றினார் பாட் கம்மின்ஸ். ஜோ ரூட்வீசிய ஓவரில் இருசிக்ஸர்களை பறக்கவிட்டார்.மறுமுனையில் அவருக்கு உறு துணையாக நேதன் லயன்விளையாடினார். 14 ஓவர்கள் எஞ்சிய நிலையில் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைஎன்ற நிலையில் ஸ்டூவர்ட் பிராடு வீசியபந்தில் நேதன் லயன் பேக்வேர்டு ஸ்கொயர் லெக் திசையில் கொடுத்த கேட்ச்சை பென் ஸ்டோக்ஸ் தவறவிட்டார்.

அதற்கான பலனை இங்கிலாந்து அணிஅனுபவித்தது. பாட் கம்மின்ஸ் 73 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்களும், நேதன் லயன் 28 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களும் சேர்க்க ஆஸ்திரேலிய அணி 92.3 ஓவர்களில் இலக்கை அடைந்தது. ஆலி ராபின்சனின் பந்தை பவுண்டரிக்கு விரட்டி வெற்றிக் கோட்டைகடந்ததும் பாட் கம்மின்ஸ் உற்சாகத்தில் ஹெல்மெட்டை கழற்றி வீசி எறிந்தார். மட்டையையும் பறக்கவிட்டார். அவரது ஆட்டம் கேப்டனின் இன்னிங்ஸ் இதுதான் என்று கூறும்படி அமைந்தது.

இதே மைதானத்தில் கடந்த 2005-ம்ஆண்டு இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் 282 ரன்களை துரத்திய ஆஸ்திரேலிய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. ஆனால் இம்முறை ஆஸ்திரேலிய அணி சுதாரித்துக்கொண்டது. பாட் கம்மின்ஸ் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 2011-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இறுதிக்கட்டத்தில் இதேபோன்று விளையாடி இருந்தார்.

அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8விக்கெட்களை இழந்து தவித்த நிலையில் தன் பங்களிப்பாக 13 ரன்களை முக்கியமான கட்டத்தில் சேர்த்து வெற்றிக்கு உதவி இருந்தார். தற்போது கேப்டனாக இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணியை வெற்றிகரமாக கரை சேர்த்துள்ளார். நேதன் லயனுடன் இணைந்து பாட் கம்மின்ஸ் 9-வது விக்கெட்டுக்கு சேர்த்த 55 ரன்கள் பெரிய அளவிலான வித்தியாசத்தை காட்டியது. இந்த கூட்டணி 12 ஓவர்களை எந்தவித பதற்றமும் இல்லாமல் எதிர்கொண்டு வெற்றியை சாத்தியமாக்கி உள்ளது.

இங்கிலாந்தின் ‘‘பாஸ்பால்’’ கிரிக்கெட் புரட்சியானது 5 நாட்கள் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்று வெற்றிகரமாக நிறைவு செய்த ஆஸ்திரேலியாவிடம் இருந்து நிச்சயம் பாடம் கற்றுக்கொள்ளும் என்றே கருதப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க இந்த ஆட்டத்துக்கான இங்கிலாந்து அணித் தேர்வும், முதல்இன்னிங்ஸில் முதல் நாளிலேயே டிக்ளேர்முடிவை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எடுத்ததும் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 8விக்கெட்கள் இழப்புக்கு 393 ரன்கள் என்ற நிலையில் இங்கிலாந்து அணிடிக்ளேர் செய்தது. ஜோ ரூட் சதம் விளாசிகளத்தில் நின்ற நிலையில் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது இங்கிலாந்து அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

இடது முழங்கால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத பென் ஸ்டோக்ஸால் பந்து வீச்சிலும் முழுமையாக செயல்பட முடியவில்லை. 2-வது இன்னிங்ஸில் அவரால் 7 ஓவர்களே வீச முடிந்தது.மேலும் 40 வயதான ஆண்டர்சன் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். மொயின் அலி முதல் இன்னிங்ஸில் 33 ஓவர்களை வீசி 147 ரன்களை வாரி வழங்கினார்.

அவரது பந்து வீச்சு ஆஸ்திரேலிய அணிஎளிதாக ரன்கள் சேர்க்க உதவியது. மேலும்இது இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்தபந்து வீச்சையும் பலவீனப்படுத்தியது. விக்கெட் கீப்பிங் பணியில் ஜானி பேர்ஸ்டோ சிலகேட்ச்களை தவறவிட்டார். ஒரு ஸ்டெம்பிங்கையும் கோட்டை விட்டார். இதனால் லார்ட்ஸ்மைதானத்தில் வரும் 28-ம் தேதி தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் மாற்றங்கள் இருக்கக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x