Published : 21 Jun 2023 06:26 AM
Last Updated : 21 Jun 2023 06:26 AM
சென்னை: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான அட்டவணையை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி சீனாவுடன் மோதுகிறது. அதேவேளையில் பாகிஸ்தானுடன் 9-ம் தேதி பலப்பரீட்சை நடத்துகிறது.
ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் போட்டியை நடத்தும் இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 நாடுகள் கலந்துகொள்கின்றன. இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது.
இதன்படி ஆகஸ்ட் 3-ம் தேதி மாலை 4 மணி அளவில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தென் கொரியா, ஜப்பானுடன் மோதுகிறது. தொடர்ந்து 6.30 மணிக்கு மலேசியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இந்தியா, சீனாவை எதிர்கொள்கிறது.
இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஆகஸ்ட் 4-ம் தேதி ஜப்பானுடன் மோதுகிறது. தொடர்ந்து 6-ம் தேதி மலேசியாவுடனும், 7-ம் தேதி கொரியாவுடன் மோதுகிறது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பரம வைரியான பாகிஸ்தானுடன் 9-ம் தேதி பலப்பரீட்சை நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்கும் தொடரில் அனைத்து அணிகளும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைபெறும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
12-ம் தேதி இறுதி போட்டி
அரை இறுதி ஆட்டங்கள் 11-ம் தேதி நடைபெறுகின்றன. சாம்பியன் பட்டத்தை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 12-ம் தேதி இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதுவரை நடைபெற்றுள்ள ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி 3 முறையும், பாகிஸ்தான் அணி 3 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. 2021-ல் நடைபெற்ற தொடரில் தென்கொரியா கோப்பையை வென்றிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT