Published : 19 Oct 2017 04:08 PM
Last Updated : 19 Oct 2017 04:08 PM

அறிமுகப் போட்டியில் இமாம் உல் ஹக் சதம்; ஹசன் அலி 5 விக்.: தொடரை வென்றது பாகிஸ்தான்

அபுதாபியில் வியாழனன்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணியைப் பாகிஸ்தான் அணி வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்று முன்னிலை வகிக்கிறது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி, நடு ஓவர்களில் கட்டுப்படுத்துவதோடு, விக்கெட்டுகளையும் வீழ்த்தக் கூடிய திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 10 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இலங்கை அணி 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் இன்சமாம் உல் ஹக் உறவினர், இடது கை வீரர் இமாம் உல் ஹக் தன் அறிமுகப் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கி 125 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுக்க 42.3 ஓவர்களில் 209/3 என்று பாகிஸ்தான் வெற்றி பெற்று 3-0 என்று தொடரைக் கைப்பற்றியது.

அறிமுகப் போட்டியிலேயே சதம் அடிக்கும் 2-வது பாகிஸ்தான் வீரரானார் இமாம் உல் ஹக்,

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் தொடர்ச்சியாக 7வது ஒருநாள் வெற்றியைச் சாதிக்க, இலங்கை அணி மாறாக தொடர் 8-வது தோல்வியைச் சந்தித்தது.

மிகக்குறைந்த இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய அறிமுக வீரர் இமாம் உல் ஹக், ஆஃப் ஸ்பின்னர் அகிலா தனஞ்ஜயவிடம் கொஞ்சம் திணறினார். மற்றபடி அவுட் ஆகும் வாய்ப்புகளை அவர் வழங்கவில்லை, இவரைத் தேர்வு செய்ததற்காக இன்சமாம் உல் ஹக் மீது விமர்சனங்கள் எழுந்தன, ஆனால் இந்த இன்னிங்ஸ் மூலம் அவர் தன் திறமையையும், தேர்வையும் நிரூபித்துள்ளார்.

இவரும் ஃபகார் ஜமானும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 78 ரன்கள் சேர்த்த போது பகார் ஜமான் (29) வாண்டர்சே பந்தை எங்கோ அடிக்கச் சென்று ஸ்டம்ப்டு ஆனார்.

பாபர் ஆஸம் 30 ரன்களில் நடையைக் கட்டினார். ஆட்டத்தின் ஒரே சுவாரசியம் அறிமுக வீரர் இமாம் உல் ஹக் சதமெடுப்பாரா என்பதாகவே இருந்தது, அவரும் அந்தச் சுவாரசியத்தை அதிகப்படுத்தினார், காரணம் 89 ரன்களில் இருந்த போது சமீரா பந்தில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆக இவர் பெவிலியன் நோக்கி நடந்தார், ஆனால் கள நடுவர்கள் கேட்ச் தரையில் பட்டு பிடிக்கப்பட்டதா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்று சைகை செய்ய பந்து தரையில் பட்டுத்தான் கேட்ச் ஆனது தெரியவந்தது, கடைசியில் சதம் கண்டார் இமாம் உல் ஹக்.

முன்னதாக இலங்கை அணியில் கேப்டன் உப்புல் தரங்கா 80 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்ததே இலங்கையின் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராக அமைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x