Last Updated : 29 Aug, 2017 03:21 PM

 

Published : 29 Aug 2017 03:21 PM
Last Updated : 29 Aug 2017 03:21 PM

ஜோதிடம் என்பது அறிவியலா?- 18: ஆடி மாதம் - ஜோதிட விளக்கம்

சூரியன் வடக்கு திசை பயணமான உத்திராயாண காலத்தில் இறைவழிபாட்டிற்கான பௌர்ணமியும், சூரியன் தெற்கு திசை நோக்கி செல்லும் தட்சிணாயண காலத்தில் பிதுர்வழிபாட்டான அமாவாசையும் அதிகம் கொண்டாடப்படுகிறது.

சந்திரனுக்கு தமிழில் திங்கள் என பெயருண்டு. திங்கள் என்றால் மாதம் என்பதே அர்த்தம். மாதத்தை குறிப்பவர் என்பதால் இப்பெயர் வகுக்கப்பட்டது. மாதத்தில் உண்டாகும் பௌர்ணமியில் சந்திரன் நிற்கும் நட்சத்திரம் கொண்டு மாதத்தின் பெயரமையும்.

ஆடி மாதத்தில் சூரியன் கடகத்திலிருக்கும். கடகத்தின் ஏழாமிடமான மகரத்தில் சந்திரன் வரும்போது பௌர்ணமி உண்டாகும். மகரத்தில் இருக்கும் உத்திராடத்தில் அந்த பௌர்ணமி உண்டாகும். உத்திராடத்தின் முழு பெயர் உத்திர ஆஷாட நட்சத்திரம். பூர்வ ஆஷ்டா என்பது பூராட நட்சத்திரம். பூர்வ என்றால் முந்தைய, உத்திர என்றால் இதற்கு அடுத்த என்று பொருள். அதனால் தான் 'பூர' என்ற சொல் கொண்ட நட்சத்திரத்தின் அடுத்த நட்சத்திரம் 'உத்திர' என்ற சொல் கொண்டு தொடங்குவதை காணமுடிகிறது.

ஆஷ்டா எனில் வெற்றி என அர்த்தம். ஜோதிடத்தில் வெற்றி தரும் நட்சத்திரம் எனப்படும் அபிஜித் கூட உத்திராடத்திற்கு அடுத்தே இருக்கிறது. இங்கே சூரியனின் உத்திராயண காலம் வெற்றியுடன் தொடங்குவதே இதற்கு காரணம். எனவே தான் மகரமாதம் எனும் தைமாதம் பல விசேஷங்கள் கொண்டது.

ஆடியில் உண்டாகும் பௌர்ணமி உத்திராடத்தில் - அதாவது உத்திர ஆஷாட நட்சத்திரத்தில் உண்டாவதால் இதற்கு அஷாட மாதம் என்ற பெயர் வந்தது. ஆஷடா என்றால் வெற்றி. மஹாபாரத போர் வெற்றியைக் கொண்டாடும் தினமான ஆடி பதினெட்டு என்பது கூட இந்த மாதமே. இந்த ஆஷாட என்ற சொல் வழக்கு மருவி ஆடி என்றானது. இது ஆடி மாத பெயர் வந்த சுருக்கம்.

தட்சிணாயனம் என்ற சூரிய நகர்வு தெற்கு வழி பயணத்தை தேர்ந்தெடுக்கும் காலம். இந்த மாதத்திலிருந்து சூரியன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்ல, தெற்கு திசையை தேர்ந்தெடுக்கும். இதுவே தட்சிணாயணம். தட்சிணம் - தெற்கு, அயணம் - பயணம்.

இப்பயணம் சந்திரன் வீட்டில் உண்டாகும் அமாவாசையில் தொடங்கும் தினம் ஆடி அமாவாசை ஆகும். இக்காலத்தில் இரவு பகல் சம காலமாக இருப்பதால் சந்திரனின் அம்சமான சக்தி வழிபாடு செய்யப்படுகின்றன. மேலும் தெற்கு நோக்கி பயணம் என்பதால் இது பித்ருக்களுக்கு மோட்சம் தரும் அமாவாசை அதிகம் வரும் காலங்களாகும். தென் பகுதி மோட்சக்காரகன் கேதுவின் பகுதியாகும்.

(மேலும் ஆராய்வோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x