Published : 25 Dec 2022 04:02 AM
Last Updated : 25 Dec 2022 04:02 AM
விரும்புவன எல்லாம் அளிப்பான்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திற ஏலோர் எம்பாவாய்.
விளக்கவுரை:
நோன்பு நோற்று சுகத்தை அனுபவிக்கும் அம்மணி!
வாசலைத்தான் திறக்கவில்லை, வாயையுமா திறக்கக் கூடாது?
திருமுடியில் நறுமணத் துளசியைச் சூடிய நாராயணன்,
நம்மால் வாழ்த்தப் பெற்று வேண்டிய பலன்களை நமக்கு தரும் புண்ணியன்!
முன்பொரு காலத்தில் யமன் வாயில் விழுந்த கும்பகர்ணன்
உன்னிடம் தோற்று தன் உறக்கத்தை பரிசாக தந்தானோ?
எல்லையற்ற சோம்பலுடையவளே! பசும்பொன்னே!
தெளிந்து வந்து கதவைத் திற!
(பெருந்தூக்கம் தூங்கிடும் பெண்ணை கதவைத் திறக்க வேண்டுதல்)
இதையும் அறிவோம்:
ஆண்டாளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு பின் வாழ்ந்த அனந்தாழ்வான் என்ற ஆச்சாரியர் திருமலை திருவேங்கடப் பெருமாளுக்கு மாலை கட்டும் கைங்கரியம் செய்து வந்தார். ஒரு நாள் அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைச் சேவிக்க வேண்டும் என்று ஆசை வந்தது. திருவேங்கமுடையானிடம் உத்தரவு பெற்று அடியார்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் குளத்தில் அனந்தாழ்வான் குளிக்கும்போது எதையோ தேடிக் கொண்டிருந்தார். ‘‘என்ன தேடுகிறீர்?” என்று விசாரிக்க, ‘‘ஆண்டாள் தினமும் இங்கே குளித்திருப்பாள். அவள் தேய்த்துக்கொண்ட மஞ்சள் ஏதாவது கிடைத்தால் திருவேங்கடமுடையானுக்கு பரிசாகக் கொடுக்கலாம் என்று தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றார். பிரேமை தானே பக்தி!
- சுஜாதா தேசிகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT