Published : 02 Nov 2022 07:21 AM
Last Updated : 02 Nov 2022 07:21 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 46.திருவேளுக்கை அழகிய சிங்கர் பெருமாள் கோயில்

முனைவர் கே.சுந்தரராமன்

காஞ்சிபுரம் மாவட்டம் திருவேளுக்கை அழகிய சிங்கர் பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 46-வது திவ்ய தேசம் ஆகும். நரசிம்மருக்கு எதிரில் உள்ள கருடாழ்வார், நரசிம்மரின் உக்கிரம் தாங்காமல் சற்றே தலை சாய்த்து பயத்துடன் இருப்பது மிகவும் அதிசய அமைப்பாகும்.

இத்தலத்தை பேயாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

விண்ணகரம் வெஃகா விரிதிரை நீர் வேங்கடம்

மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த

தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி

தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு.

(2342 – மூன்றாம் திருவந்தாதி - 62)

மூலவர்: முகுந்த நாயகன், அழகிய சிங்கர்

தாயார்: வேளுக்கை வல்லி,

தீர்த்தம்: கனக சரஸ், ஹேம சரஸ்

ஒரு சமயம் பிரம்மதேவர் யாகம் செய்து கொண்டிருந்தார். அப்போது அரக்கர்கள் அவரது யாகத்துக்கு இடையூறு விளைவித்தனர். இது குறித்து பிரம்மதேவர், திருமாலிடம் முறையிட்டு, யாகத்தை சிறப்பாக நடத்த, தயை புரியுமாறு வேண்டினார். திருமாலும் பிரம்மதேவரின் யாகத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்தார்.

முன்பு பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த அதே கோலத்துடன் ஹஸ்திசைலம் என்ற குகையில் இருந்து புறப்பட்டு, பிரம்மதேவனின் யாகத்துக்கு இடையூறு அளித்த அசுரர்களை அவ்விடத்தில் இருந்து விரட்டிச் சென்றார். அவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள இந்த இடம் வரை ஓடிவந்தனர். அவர்களைத் துரத்திக் கொண்டு வந்த நரசிம்மப் பெருமாள் குளிர்ச்சியான இயற்கை எழில் மிகுந்த இந்த இடத்திலேயே அமர்ந்து விட்டார். பயந்து ஓடிய அசுரர்கள் மீண்டும் வந்தால் அவர்களை எதிர்க்க இந்த இடமே சிறந்தது என்று நினைத்து, தனது கோப உணர்வுகளை நீக்கி, யோக நரசிம்ம மூர்த்தியாக அருள்பாலித்து தரிசனம் தருகிறார். இதனாலேயே இவரது சந்நிதி ‘காமாஷிகா நரசிம்மர் சந்நிதி’என்று பெயர் பெற்றது.

வேள் என்றால் விருப்பம். தானாக விருப்பப்பட்டு அமைதியைத் தேடி இத்தலத்தில் யோக மூர்த்தியாக இருப்பதால் வேளிருக்கை என்று ஆகி, காலப்போக்கில் வேளுக்கை என்றாகி விட்டது. திருமாலின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படக் கூடிய அவதாரம் நரசிம்ம அவதாரம். திருமாலின் காக்கும் குணம் உடனே வெளிப்பட்ட அவதாரம். பக்தனின் வார்த்தையை பகவான் உடனே காப்பாற்றிய அவதாரம்.

(பிரகலாதன் தன் நாயகன் எந்தத் தூணிலும் இருப்பான். எந்தத் துரும்பிலும் இருப்பான் என்று சூளுரைத்தபோது, அப்போதும் நாராயணனுடன் விளையாட நினைத்தான் இரணியன். உயர்ந்து நிமிர்ந்திருந்த அரண்மனைத் தூண்கள் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்த அவன் உள்ளூர சிரித்துக் கொண்டான். தன் பார்வை படும் தூண்களில் எல்லாம் நாராயணன் மாறி மாறி ஒளிந்து கொள்வதை அவன் அருவமாகக் கண்டான்.

பிரகலாதனும் தன் தந்தை எந்தத் தூணைக் காட்டப் போகிறாரோ அந்தத் தூணில் நாராயணன் இருக்கிறான் என்பதை உறுதிபடக் கூறவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டிருந்தான்.

சங்கடப்பட்டவன் நாராயணனே….

இதோ இந்தத் தூணில் நாராயணன் இருப்பானா? என்று விஷமச் சிரிப்புடன் இரணியன் கேட்டபோது, அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட நாராயணன், அந்தத் தூணில் இருந்து வெளிப்பட தன்னை தயார் செய்து கொண்டான்.

தான் மூர்க்கன் என்பதை காண்பித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த இரணியன், அந்தத் தூணை காலால் எட்டி உதைத்தான். தூண் பிளந்தது.

அந்த நேரத்துக்காகக் காத்திருந்தான் இரணியன். தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிம்மர், இரணியனை அப்படியே தூக்கினார். உள்ளேயும் வெளியேயும் அல்லாத வாசல் நிலைப்படிக்கு கொண்டு சென்று, சூரியன் மறையும் சமயம் அந்திப் பொழுது, பூமியில் அல்லாது, தன் மடியில் இரணியனைக் கிடத்தினார் நரசிம்மர்.

சிங்கக் கரத்து நகங்கள் அவனது வயிற்றைக் குத்தி கிழித்தன.ஏகாந்தமாக நாராயணன் மடியிலேயே கிடந்தான் இரணியன். இந்த வேதனையும் ஒரு சுகமே….)

மூலவர் முகுந்த நாயகன், நின்ற கோலமாக கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். இவருக்கு அழகிய சிங்கர் நரசிம்மர், ஆள் அரி என்ற பெயர்கள் உண்டு.

மூன்று நிலை கோபுரம், ஒரு பிரகாரம் என்று சிறிய கோயிலாக காணப்பட்டாலும் மூர்த்தி பெரியது. கோயில் சுற்றுப்பிரகாரத்தில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தனிசந்நிதியில் வீற்றிருக்கிறார்.

பேயாழ்வார் இத்தலத்தை உப்பிலியப்பன் கோயில், கும்பகோணம், திருப்பதி போன்ற தலங்களுக்கு இணையாகப் பாடியுள்ளார். ஆழ்வார்களைத் தவிர ஸ்வாமி தேசிகனும் இப்பெருமாளை "காமாஸீகாஷ்டகம்'என்ற ஸ்லோகத்தால் போற்றியுள்ளார். இதை தினமும் பாராயணம் செய்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும்.

பிருகு முனிவர் வழிபட்டு பேறு பெற்ற திருத்தலம். பிருகு முனிவருக்கு கனக விமானத்தின்கீழ் இருந்து அருள்பாலித்தார் நரசிம்மப் பெருமாள்.

வைகுண்ட ஏகாதசி உற்சவத்தில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும்.

துன்பங்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் நரசிம்மப் பெருமாள். பயத்தில் நடுங்குபவர்கள், கெட்ட கனவுகளால் அல்லல்படுபவர்கள், படிப்பில் மந்தமாக இருக்கும் மாணவர்கள் இத்தல பெருமாளை வணங்கினால் உரிய பலன்கள் கிடைக்கும்.

அமைவிடம்: காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயிலுக்கு தெற்கே உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x