Published : 01 Nov 2022 06:05 AM
Last Updated : 01 Nov 2022 06:05 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 45 | திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோயில் 

திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோயில் 

முனைவர் கே.சுந்தரராமன்

காஞ்சிபுரம் மாவட்டம் திருத்தண்கா (தூப்புல்) விளக்கொளி பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 45-வது திவ்ய தேசம் ஆகும். ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் வேதாந்த தேசிகரின் அவதாரத் தலம்.

இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

முளைக்கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற

அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தையானை

விளக்கொளியை மரகதத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு

வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.

(திருநெடுந்தாண்டகம் 14 – (2065)

மூலவர்: விளக்கொளி பெருமாள் (தீபப்பிரகாசர், திவ்யபிரகாசர்)

தாயார்: மரகத வல்லி,

தீர்த்தம்: சரஸ்வதி தீர்த்தம்

விமானம்: ஸ்ரீகர விமானம்


தலவரலாறு

ஒரு சமயம் பிரம்மதேவருக்குதனக்கு பூலோகத்தில் கோயில் இல்லையே என்ற வருத்தம் ஏற்பட்டது. இதனால் ஈசனை நினைத்து பிரம்மாண்ட யாகம் ஒன்றை நடத்தினார். சரஸ்வதி தேவியின் துணையில்லாமல் தன்னால் யாகம் நடத்த முடியும் என்று பிரம்மதேவர் தன்னிச்சையாக யாகம் செய்யத் தொடங்கினார். சரஸ்வதி தேவி மாயநலன் என்ற அசுரனை ஏவி யாகத்தை தடை செய்யத் துணிந்தார். மாயநலனும் இந்த உலகம் முழுவதையும் இருட்டாக்கி விட்டான்.

நடந்த கொடுமையை திருமாலிடம் பிரம்மதேவர் கூறியதும், திருமால் ஒரு பேரொளியாகத் தோன்றியதோடு தனது கையில் ஒளிவிளக்கை ஏற்றி இருட்டைப் போக்கி பிரம்மதேவருக்கு உதவினார். அதனால்தான் இத்தல பெருமாள் ‘விளக்கொளிப் பெருமாள்’ என்றும் ‘தீபப்பிரகாசர்’ என்றும் அழைக்கப்படுகிறார். பிறகு பிரம்மதேவர் சரஸ்வதி தேவியை சமாதானம் செய்தார்.

தர்ப்பைப் புல் வளர்ந்த பகுதியாக இருந்த காட்டில் திருமால் காட்சி அளித்ததால் இப்பகுதி ‘தூப்புல்’ என்றும் ‘திருத்தண்கா’ என்றும் அழைக்கப்படுகிறது.

வைணவ ஆச்சாரியர் வேதாந்த தேசிகரின் அவதாரத் தலம் இதுவாகும். ஸ்வாமி தேசிகன் கிபி 1268-ம் ஆண்டு, விபவ வருடம், புரட்டாசி மாதம், சிரவணம் (திருவோணம்) நட்சத்திரத்தில், புதன்கிழமை அனந்தசூரியார் - தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு மகனாக இத்தலத்தில் (பொய்கையாழ்வார் பிறந்த விளக்கொளி பெருமாள் கோயில் பகுதி) எனும் இடத்தில் திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக பிறந்தவர். (இதனாலேயே திருப்பதி கோயிலில் பூஜை நேரத்தில் மணி அடிப்பதில்லை.) இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன் என்பதாகும். பின்னாளில் இவர் 'ஸ்வாமி தேசிகன்', 'தூப்புல் நிகமாந்த தேசிகன்', 'தூப்புல் பிள்ளை', ‘உபயவேதாந்தாசாரியர்’, ‘ஸர்வ தந்த்ர ஸ்தந்த்ரர்’ மற்றும் ‘வேதாந்த தேசிகன்’ என்னும் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

வடமொழிக்கு இணையாக தமிழ்மொழியும் தெய்வத்தன்மை உடையது என்று கூறியவர் இவர். உபய வேதாந்தம் எனும் கொள்கையை உருவாக்கி கோயில்களில் வடமொழியோடு ஆழ்வார்களின் திருமொழியும் இடம்பெறுமாறு செய்தார்

ராமனுசரின் உறவினரான நடாதூர் அம்மாளின் நேரடிச் சீடரான கிடாம்பி அப்புள்ளாரிடம் வட மறையான வேதங்கள், தென் மறையான திவ்ய பிரபந்தம் மற்றும் புராணங்கள், சாத்திரங்களையும் குறைவறக் கற்றார்.

தன் இருபத்தோராம் அகவையில் திருமங்கை (கனகவல்லி என்றும் அழைக்கப்படும்) எனும் நங்கையை மணம்புரிந்தார். தன்னுடைய 27-ம் அகவையில் வைணவ குரு எனும் நிலையை அடைந்தார். பின்னர் தன்னுடைய குருவான கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி திருவஹீந்திரபுரம் (கடலூருக்கு அருகில்) சென்று சில காலம் வாழ்ந்தார். திருப்பதி, மேல்கோட்டை, காஞ்சிபுரம், அயோத்தியா, பிருந்தாவனம், பத்ரிநாத், திருவரங்கம் உள்ளிட்ட எண்ணற்ற தலங்களுக்கு சென்று ஸ்ரீமத் ராமானுஜரின் தத்துவங்களை பரப்பினார். இறுதியில் தன் மகனான குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்தவர் இப்புவியில் 101 வருடங்கள் வாழ்ந்தார்.

ராமானுஜரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதியவர் 124 நூல்களை தமிழ், வடமொழி, ப்ராக்ருதம், மணிப்பிரவாள நடையில் அருளியுள்ளார்.

தமிழில் - அடைக்கலப்பத்து, மும்மணிக்கோவை, நவமணிமாலை, அதிகார சங்கிரகம், ஆஹார நியமம், அம்ருதரஞ்சனி, அம்ருதஸ்வாதினி, அர்த்த பஞ்சகம், சரமஸ்லோக சுருக்கு, த்வய சுருக்கு, கீதார்த்த சங்கிரகம், பரமபத சோபனம், பிரபந்த ஸாரம், ஸ்ரீவைஷ்ணவ தினசரி, திருச்சின்னமாலை, திருமந்திர சுருக்கு, உபகார சங்கிரகம், விரோத பரிகாரம், பன்னிரு நாமம், அத்திகிரி மான்மியம்.

வடமொழியில் - பாதுகா சஹஸ்ரம், கோதா ஸ்துதி, யதிராஜ சப்ததி, வைராக்ய பஞ்சகம், அபீதிஸ்தவம், அதிகரண சாராவளி, அஷ்டபுஜ அஷ்டகம், பகவத் தியான சோபனம், பூ ஸ்துதி, சதுஸ்லோகி பாஷ்யம், தசாவதார ஸ்தோத்ரம், தயா சதகம், வரதராஜ பஞ்சாஸத், தெய்வநாயக பஞ்சாஸத், திவ்யதேச மங்களாசனம், கருட பஞ்சாஸத், ஹயக்ரீவ ஸ்தோத்ரம், தேசிக மங்களம்.

மணிப்பிரவாளம் - அம்ருதரஞ்சனி ரஹஸ்யம், அஞ்சலி பிரபாவம், அத்திகிரி மஹாத்மியம், குருபரம்பரா ஸாரம், முனிவாகன போகம், ஆராதன காரிகா.

ப்ராக்ருதம் – அச்யுத சதகம் ஆகியவை குறிப்பிடத்தக்கன.

ஸ்வாமி தேசிகனின் புதல்வர் நயின வரதாச்சாரி (குமார வரத் தேசிகன்) இக்கோயிலைக் கட்டி முடித்தார் என்று கூறுவர்.

இங்கு மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் ஸ்ரீகர விமானம் எனப்படுகிறது. கோயிலில் தாயார் சந்நிதிக்கு அருகில் தேசிகருக்கு தனிசந்நிதி உண்டு. அருகிலேயே தேசிகர் வணங்கிய லட்சுமி ஹயக்ரீவர் விக்ரகம் உள்ளது. ஆண்டாள், ஆழ்வார்கள், கருடன், ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

திருவிழாக்கள்

இங்கு வரதராஜப் பெருமாள் கருட சேவை அன்று குடை வழங்கிச் சாத்தும் விழா நடைபெறுகிறது. ஆவணி மாதத்தில் விளக்கொளி பெருமாள் தேசிகர் சந்நிதிக்கு புறப்பட்டு செல்வதும், மார்கழி, சித்ரா பவுர்ணமியில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி தேசிகனுக்கு மரியாதை செய்வதும் நடைபெறும்.

வாழ்க்கை இருண்டு போய்விடுமோ என்று பயந்து கொண்டிருப்பவர்கள், ஒவ்வொரு நாளும் கெட்ட கனவு, துர்தேவதைகளின் தொல்லைகளால் அவதியுறுபவர்கள், சுபகாரியங்கள் தடைபட்டுக் கொண்டிருக்கிறதே என்று வருத்துபவர்கள் இத்தலத்துக்கு வந்து பிரார்த்தனை செய்தால், ஒளிரூபமாக வந்து அனைத்து கஷ்டங்களையும் விளக்கொளி பெருமாள் தீர்ப்பார் என்பது ஐதீகம். ஸ்வாமி தேசிகன் சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்வில் ஞான ஒளி பிரகாசிப்பது திண்ணம்.

கல்வியில் சிறந்த விளங்கவும், குழந்தை வரம் வேண்டியும் இத்தல பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

அமைவிடம்: காஞ்சிபுரம் தூப்புல் பகுதியில் கீரை மண்டபத்துக்கு அருகில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x