Published : 30 Oct 2022 06:10 AM
Last Updated : 30 Oct 2022 06:10 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 43 | காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் 

காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் 

முனைவர் கே.சுந்தரராமன்

108 வைணவ திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் வரதராஜர் கோயில், 43-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள இத்தலத்தை திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பூதத்தாழ்வார் பாசுரம்:

அத்தியூரான் புள்ளை யூர்வான் அணிமணியின்

துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான் - மூத்தீ

மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்

இறையாவான் எங்கள் பிரான்.

(2277 – இரண்டாம் திருவந்தாதி 96)

மூலவர்: வரதராஜர் (தேவராஜர்)

தாயார்: பெருந்தேவி

தல விருட்சம்: அரசமரம்

தீர்த்தம்: அனந்த சரஸ்


தலவரலாறு

திருக்கச்சி திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் அத்தியூரான் என வழங்கப்படுகிறார். அத்திகிரி, அத்தியூர், வாரணகிரி, பெருமாள் கோயில், சத்யவ்ரத க்ஷேத்ரம் என்ற பெயர்களிலும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

மூலவர் வரதராஜப் பெருமாள், நின்ற கோலத்தில் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். இங்குள்ள பெருமாள் பேரருளாளன், தேவாதிராஜன், தேவப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். வைணவத்தை இவ்வுலகில் நிலை நிறுத்திய ராமானுஜரின் ஆராதனைப் பெருமாள் இவர். தாயார் பெருந்தேவித் தாயார்.

அத்திகிரி என்னும் சிறு குன்றின் மீது பெருமாள் எழுந்தருளி உள்ளார். ஐராவதமே மலை உருவில் பெருமாளைத் தாங்கி நிற்கிறது. பிரம்மதேவனுக்கு வரம் தந்ததால் வரதராஜன் என்று பெயர் பெற்று திகழ்கிறார்.

திருக்கச்சிக் கோயில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு மேற்காக 1,050 அடி நீளமும் வடக்கு தெற்காக 675 அடி அகலமும் மிக உயரமான சுற்று சுவரும் 180 அடி உயரமுள்ள 9 நிலை ராஜ கோபுரமும் ஐந்து பிரகாரங்களையும் கொண்டது. கருவறை 40 அடி உயரத்தில் இரண்டு அடுக்காக 43 படி கொண்டுள்ளது.

பிரம்மதேவன் இங்கிருந்து யாகம் செய்தார். திருமாலும் பிரம்மதேவருக்கு புண்ணிய கோடி விமானத்தில் வந்து காட்சி கொடுத்தார். பிருகு முனிவர், நாரதர், ஆதிசேஷன், இந்திரன், சரஸ்வதி தேவி ஆகியோர் இத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டு காட்சி கண்டனர் என்பது முக்கியத்துவம் கொண்டது.

கிருதயுகத்தில் பிரம்மதேவனும், திரேதாயுகத்தில் கஜேந்திரனும், துவாபர யுகத்தில் பிரகஸ்பதியும், கலியுகத்தில் ஆதிசேஷனும் பூஜித்த தலம். இந்தக் கோயிலில் உள்ள தங்கப் பல்லியை வணங்கினால் நோய்கள் விலகும் என்பது ஐதீகம்.

இங்குள்ள அனந்தசரஸ் தீர்த்தக் குளத்தில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து பூஜை செய்கிறார்கள். 2019வருடம் இந்நிகழ்ச்சி ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெற்றது.

விழாக்காலங்களில் வரதரின் அலங்காரத்தில் மகர கண்டிகை முக்கியமாக இடம்பெறும். இது கழுத்தில் அணியக்கூடிய மீன் (மகரம்) வடிவிலான ஓர் அணிகலன்.

இது ஆங்கிலேயர் ஆட்சியின்போது சென்னையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய ராபர்ட் க்ளைவ் தன் பக்திக் காணிக்கையாக செலுத்திய ஆபரணம் ஆகும்.

புன்னகை தவழும் பேரெழில் முகத்துடன் இன்னருள் பாலிக்கிறார் வரதர். தேவர்கள் கேட்ட வரமெல்லாம் மனமுவந்து வழங்கிய பேரருளாளன் முகத்தில் அக்னித் தழும்புகள்… யாகம் செய்த பிரம்ம தேவனுக்காக தன் முக அழகையும் தியாகம் செய்த கருணையை ஆச்சாரியர்கள் வியந்து பாராட்டுகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி அன்று இரவு 12 மணிக்கு பிரம்ம தேவர், வரதர் சந்நிதிக்கு வந்து வரதரை பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் பெருமாளுக்கு நைவேத்யமாக தயாரிக்கப்பட்ட பலகாரங்களை பெருமாள் சந்நிதிக்குள் வைத்துவிட்டு, பட்டர்கள் வெளியே வந்து விடுவார்கள். குறிப்பிட்ட நேரம் கழித்து, அதாவது பூஜை முடிந்து பிரம்மதேவர் சென்றபின், உள்ளே நுழையும் பட்டர்கள், அந்த நைவேத்ய பாத்திரங்களைத் திறந்து பார்த்தால் அது புதிதாக தேவலோக விருந்தின் நறுமணத்தைக் கொண்டிருப்பதை நுகர்ந்து பரவசப்படுவர்.

சித்திரை மாதத்தில் பவுர்ணமியை அடுத்த 15 நாட்களுக்கு அஸ்தமன நேரத்தில், சூரியக் கதிர்கள் மூலவரின் முகத்தில் படுமாறு செய்து வணங்குகிறான் ஆதவன். இந்த அற்புதம் வேறு எந்த திவ்ய தேசத்திலும் காணக் கிடைக்காதது.

பிரம்மதேவரைப்போலவே ஆதிசேஷனும் வரதரை வந்து வணங்குகிறான். ஆடி மாத வளர்பிறை தசமி அன்றும், தேய்பிறை ஏகாதசி அன்றும் இவ்வாறு வந்து பூஜிக்கும் ஆதிசேஷனை அவன் அவதாரமான திருவனந்தாழ்வானுக்கு சிறப்பு வழிபாடு செய்து ஆராதிக்கின்றனர்.

இங்குள்ள சக்கரத்தாழ்வார் 7 அடி உயரத்தில் காட்சி தருகிறார். ஸ்ரீ உடையவருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வாருக்கு திருமால் கண்களை மீண்டும் கொடுத்த திருத்தலம்.

இங்கு நடக்கும் கருட சேவை உலகப் புகழ் பெற்றது. ஒன்பது ஆழ்வார்கள் இத்தல பெருமாள் மீது பாசுரங்கள் பாடியுள்ளனர்.

இந்த கோயிலில் மொத்தம் 5 பிரகாரங்கள். இவற்றில் மூன்றாவதான ஆளவந்தார் பிரகாரத்தில்தான், ஆளவந்தார் ராமானுஜரை சந்தித்து, “ஆம்… முதல்வன் இவன்” என்று பாராட்டி, தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு ஸ்ரீரங்கத்துக்கும் அழைத்துச் சென்றார்.

சோகங்கள் நிறைந்தவர்கள், புத்திர சோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மரண பயம் உள்ளவர்கள், நண்பர்கள், எதிரிகள், உடன் பிறந்தவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலப் பெருமாளை சரண் அடைந்தால், அனைத்து இன்னல்களும் தீரும் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

வைகாசி பிரம்மோற்சவம் (10 நாள்), நவராத்திரி விழா (10 நாள்), வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்களில் சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x