Published : 17 May 2022 05:31 AM
Last Updated : 17 May 2022 05:31 AM

ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் 2,000 கோயில்களுக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு - அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் கோயில்களுக்கு தலா ரூ.2 லட்சம் என ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சூரிய மின் விளக்குகள் மற்றும் வெப்பத்தை தணிக்கும் குளிரூட்டப்பட்ட தண்ணீர் தெளிப்பான் வசதியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அனைத்து கோயில்களிலும் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் நடக்கும் இடங்களில் தென்னை நார் பாதை அமைக்கப்பட்டு, வெயிலின் தாக்கம் இல்லாத வகையில் பாதைகளில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு மோர், எலுமிச்சை சாறு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருமானம் குறைவாக உள்ள கோயில்கள், வாய்ப்பு உள்ள கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பக்தர்களின் விருப்பத்துக்கு ஏற்பவும் தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. அனைத்து கோயில்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2019-ம் ஆண்டுக்கு முன்பு வரை கனகசபை தரிசனம் முறையாக நடக்கவில்லை. கரோனா தொற்றுக்கு பிறகு அது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு கனகசபை தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்குமாறு நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு அறநிலையத் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அக்கோயிலில் பெறப்பட்ட புகார் மீது விசாரணை நடத்த இணை ஆணையர், துணை ஆணையர் தலைமையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

துறையின் மானியக் கோரிக்கையில், ஒருகால பூஜை திட்டத்தில் உள்ள 12,959 கோயில்களுடன் மேலும் 2 ஆயிரம் கோயில்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதற்கான நிதி வைப்புத் தொகையாக ஒரு கோயிலுக்கு ரூ.2 லட்சம் என ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் ஒரு வேளை விளக்கு ஏற்றுவதற்கான சூழல்கூட இல்லை. இந்த கோயில்களில் அர்ச்சகர்களாக இருப்பவர்களுக்கு எந்த வருமானமும் இல்லை. இதை கருதியே, ஒருகால பூஜை திட்டத்தில் பணியாற்றும் 10,109 அர்ச்சகர்களுக்கு முதல்வர், மாதம்தோறும் ரூ.1,000 வழங்கினார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x