Last Updated : 31 Mar, 2016 12:07 PM

 

Published : 31 Mar 2016 12:07 PM
Last Updated : 31 Mar 2016 12:07 PM

தத்துவ விசாரம்: அறிவையும் தூக்கிப் போடு

அறிவு என்பது மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். பொருள் சார்ந்த நடைமுறை வாழ்வுக்கு மட்டுமின்றி ஆன்மிக வாழ்வுக்கும் இது மிகவும் அவசியம். எல்லையற்ற இறை ஆற்றலுடன் தனிமனிதன் இணைவதே யோகம் எனப்படுகிறது. இந்தயோகத்தை அடையப் பல வழிகள். அதில் ஒன்று ஞான யோகம். “மந்திரங்களில் நான் காயத்ரி” என்று கீதையில் கிருஷ்ணன் சொல்கிறார். “யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக” என்பது காயத்ரி மந்திரத்தின் பொருள். இதிலிருந்து ஆன்மிக வளர்ச்சிக்கும் அறிவு எந்த அளவுக்குத் தேவை என்பது புரிகிறது.

ஆனால், அறிவு எல்லைக்குட்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் நம்மை அழைத்துச்செல்லாது. அறிவு இல்லையேல் நாம் நடைமுறை வாழ்வை நடத்த முடியாது. அறிவியல், மெய்யியல் ஞானங்களைப் பெற முடியாது. ஆனால் உண்மையான மெய்யியல் அனுபவத்தைப் பெற வேண்டுமென்றால் அதற்கு அறிவு மட்டும் போதாது என்றே மகான்கள் சொல்கிறார்கள்.

ஹெர்மென் ஹெஸ் என்னும் ஜெர்மானிய எழுத்தாளர் இந்தியத் தத்துவ இயலில் ஆழங்கால் பட்டவர். இந்தியத் தத்துவ மரபை அடியொற்றி சித்தார்த்தன் என்னும் நாவலை அவர் எழுதியுள்ளார். கதையின் மையப் பாத்திரமான சித்தார்த்தன் ஆன்மிகத் தேடல் கொண்டவன். கூர்மையான அறிவும் வாதத் திறமையும் கொண்டவன். அவன் ஒரு ஞானியைச் சந்திக்கிறான். அவரிடம் சில கேள்விகள் கேட்கிறான். அவனுக்குப் பதில்களைச் சொல்லும் அந்த ஞானி கடைசியில் ஒரு வார்த்தை சொல்கிறார்:

“உன்னுடைய மிதமிஞ்சிய அறிவுக் கூர்மையிலிருந்து உன்னைத் தற்காத்துக்கொள்.”

மிதமிஞ்சிய அறிவு உன்னை ஒரு கட்டத்துக்கு மேல் முன்னேற விடாது என்பதே அந்த ஞானி சித்தார்த்தனுக்குச் சொல்ல விரும்பிய செய்தி. சித்தார்த்தன் பல்வேறு அனுபவங்களுக்கும் அலைதல்களுக்கும் பிறகே அறிவின் தடையைக் கடக்கிறான்.

கூர்மையான வாதங்கள், மண்டையைப் பிளக்கும் தர்க்கங்கள், தீவிரமான ஆய்வுகள் ஆகிய எல்லாமே அவசியம்தான். ஆனால், அறிவு ஒருவரைக் கடைசிவரை கூட்டிச்செல்லாது. அறிவு எல்லைக்குட்பட்டது. எல்லாவற்றுக்கும் அடிப்படையான பேருண்மையைத் தனக்குள் கண்டுணரும் முயற்சியில் அறிவு என்பது சுமையாகிவிடக்கூடும்.

“ஒரு முள்ளை எடுக்க இன்னொரு முள்ளைப் பயன்படுத்துகிறோம். முள்ளை எடுத்த பிறகு இரண்டு முட்களையும் தூக்கிப் போட்டுவிடுகிறோம். அறியாமை என்னும் முள்ளை எடுக்க அறிவு என்னும் முள்ளைப் பயன்படுத்துகிறோம். அந்த நோக்கம் நிறைவேறியதும் இந்த முள்ளையும் தூக்கிப் போட்டுவிட வேண்டும். அறிவை எப்போதும் சுமந்துகொண்டிருக்கக் கூடாது” என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x