

சுதர்சனருக்கு உரிய சித்திரை நட்சத்திர நாளில், சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள். சங்கடங்களைத் தீர்ப்பார்; சந்தோஷத்தைத் தருவார்.
ஆனி மாதம் சித்திரை நட்சத்திர நாள், பகவான் சக்கரத்தாழ்வாருக்கு உரிய நாள். அவதரித்த நாள். ஆனாலும் கூட, ஒவ்வொரு மாதத்தின் சித்திரை நட்சத்திரத்தின் போதும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
மார்கழி என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மார்கழி மாதம் பூஜைகளுக்கு உரிய மாதம். மார்கழி மாதம் என்பது ஜபதபங்களுக்கு உரிய மாதம். மார்கழி மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில், சக்கரத்தாழ்வாரை தரிசிப்பதும் வழிபடுவதும் பிரார்த்தனை செய்வது மகத்தான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சுதர்சனம் என்றால் மங்கலகரமானது என்றும் சுதர்சன் என்றால் மங்கலகரமானவன் என்றும் அர்த்தம். மகாவிஷ்ணுவின் திருக்கரத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெற்ற சுதர்சனம் எனும் சக்கரம், சக்கரத்தாழ்வார் என வணங்கி வழிபடப்படுகிறது.
ஆனி மாதம் தசமி திதியையும் சித்திரை நட்சத்திரையும் ஸ்ரீசக்கரத்தாழ்வர் ஜயந்தி நன்னாளாக கொண்டாடப்படுகிறது. பெருமாள் கோயில்கள் அனைத்திலும் சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சந்நிதியே அமைந்திருக்கும்.
‘சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்துகொண்டே இருப்பது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மற்ற ஆயுதங்களைப் போல் சுதர்சன சக்கரம் வெறும் ஆயுதமில்லை. எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானது. அத்துடன் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கக் கூடியது. செயல்பட்டுக்கொண்டே இருப்பது என்கிறது புராணம். .
சாதாரணமாகவே, சுதர்சன சக்கரம் என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும். மகாவிஷ்ணு, தன் ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணரும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார். எதிரிகளை, அசுரக்கூட்டத்தை அழித்த பின்னர், சுதர்சனச் சக்கரமானது மீண்டும் அந்த இடத்துக்கே திரும்ப வந்துவிடுகிறது. அதாவது, சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகு ஏவிய பகவானின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, அவரின் திருக்கரங்களுக்கே வந்துவிடுகிறது என்கிறது புராணம்.
எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடியும் என்கிறது விஷ்ணு புராணம். மேலும் மகாவிஷ்ணுவின் திருக்கரத்திலிருந்து சுதர்சனச் சக்கரமானது கிளம்பியதும் தெரியாது, எதிரிகளை அழித்ததும் தெரியாது, மீண்டும் அவரின் திருக்கரங்களுக்கு வந்து விரலில் வந்து உட்கார்ந்துகொள்வதும் தெரியாது. எல்லாமே கணப்பொழுதில் அரங்கேறிவிடும். அத்தகைய வல்லமையைக் கொண்டது சக்கரம். அத்தகைய வல்லமை பொருந்தியவர் சக்கரத்தாழ்வார்.
மார்கழி சித்திரை நட்சத்திர நாளில், சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள். அனைத்து பெருமாள் கோயில்களிலும் சக்கரத்தாழ்வார் சந்நிதி இருக்கும். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று சக்கரத்தாழ்வாரை தரிசித்து வழிபடுங்கள். சங்கடங்களையெல்லாம் தீர்த்தருள்வார். துக்கத்தையெல்லாம் போக்கிவிடுவார். எதிர்ப்புகளையெல்லாம் நீக்கி அருளுவார்!