Last Updated : 09 Mar, 2020 02:37 PM

 

Published : 09 Mar 2020 02:37 PM
Last Updated : 09 Mar 2020 02:37 PM

மாசி மகம்: புதுச்சேரி வைத்திக்குப்பத்தில் கடல் தீர்த்தவாரி; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

புதுச்சேரி

மாசி மகத்தையொட்டி புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெற்ற கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட கோயில்களில் வந்திருந்த உற்சவ மூர்த்திகளுக்கு கடல் தீர்த்தவாரி நடைபெற்றது.

புதுச்சேரியில் மாசி மகத்தை முன்னிட்டு வைத்திக்குப்பம் கடற்கரையில் கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று (மார்ச் 9) நடைபெற்றது. இதில் செஞ்சி ரங்கநாதர், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், மைலம் முருகன் மற்றும் புதுச்சேரியிலிருந்து ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி, லாஸ்பேட்டை சிவசுப்பிரமணியர், கவுசிக பாலசுப்பிரமணியர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் வைத்திக்குப்பம் கடற்கரைக்குக் கொண்டுவரப்பட்டு கடல் தீர்த்தவாரி நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பின்னர், அலங்கரிக்கப்பட்ட சாமிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் புதுச்சேரி மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஓரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட சாமிகளை தரிசனம் செய்ய பக்தர்கள் திரண்டதால் வைத்திக்குப்பம் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மாசி மகத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்குப் பல்வேறு இடங்களில் நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. மாசி மகம் திருவிழாவில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்ததால் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாசி மகத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x