Published : 09 Mar 2017 09:43 AM
Last Updated : 09 Mar 2017 09:43 AM

வார ராசிபலன் 09-03-2017 முதல் 15-03-2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் தன் சொந்த வீட்டில் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவது சிறப்பாகும். 11-ல் சூரியனும் கேதுவும், 12-ல் சுக்கிரனும் உலவுவதும் குறிப்பிடத்தக்கது. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். புதிய நிலம், மனை, வீடு, வாகனம் வாங்க வாய்ப்பு உண்டாகும். நண்பர்களும், உறவினர்களும் உதவுவார்கள். மக்களால் மனமகிழ்ச்சி கூடும்.

கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். கலைஞர்கள் நிலை உயரும். மாதர்களது எண்ணம் ஈடேறும். எதிர்ப்புக்களை வெல்லும் சக்தி பிறக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். 10-ம், தேதி முதல் குரு 6-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. உடல் நலனில் கவனம் தேவைப்படும். 14-ம் தேதி முதல் சூரியன் 12-ம் இடத்திற்கு மாறுவது குறை. தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 9, 15.

திசைகள்: வடகிழக்கு, கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், ஆரஞ்சு, மெரூன்.

எண்கள்: 1, 3, 6, 7, 9.‎

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும்.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், கேது ஆகியோரும் 11-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். மனத்தில் உற்சாகம் பெருகும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். நண்பர்கள், உறவினர்களால் நலம் உண்டாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமையால் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். ஆன்மிகப் பணிகள் நிறைவேறும். தந்தையால் அனுகூலம் ஏற்படும்.

மக்கள் நலம் சீராகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழ வாய்ப்புகள் கூடிவரும். 10-ம் தேதி முதல் குரு 5-ம் இடத்திற்கு மாறுவதால் பண வரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். 14-ம் தேதி முதல் சூரியன் 11-ம் இடத்திற்கு மாறுவதால் புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 9, 14, 15.

திசைகள்: வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை.

எண்கள்: 1, 5, 6, 7. l பரிகாரம்: வேத விற்பன்னர்களிடம் நல்லாசி பெறவும்.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 5-ல் குருவும், 6-ல் சனியும், 10-ல் புதனும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். குடும்ப நலம் சிறக்கும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். புதிய பொருட்கள் சேரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் வலுக்கும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். நல்லவர்களின் தொடர்பு கிடைக்கும். அனுகூலமும் உண்டாகும்.

சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைத்துவரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். எதிர்ப்புகள் குறையும். வழக்குகளில் வெற்றி பெற வாய்ப்பு உண்டாகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். பொறியாளர்களது எண்ணம் நிறைவேறும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 9, 14, 15.

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தென்மேற்கு, தெற்கு.

நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 4, 8, 9. l பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவது நல்லது.



கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிரிகள் விலகிப் போவார்கள். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். தொழிலில் நல்ல மாற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். கலைஞர்கள் வெற்றிப் படிகளில் ஏறுவார்கள். மாதர்களது நோக்கம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், நிலபுலங்கள் சேரும்.

காடு, மலை, வனாந்தரங்களில் பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். சட்டம், காவல், ராணுவம், பொறியியல் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். பொருள் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. 10-ம் தேதி முதல் குரு 3-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 9, 15.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு, இளநீலம்.

எண்கள்: 6, 9. l பரிகாரம்: நாகரையும் குருவையும் வழிபடவும்.



சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது நல்லது. செவ்வாய், 9-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் புரிவார். 10-ம் தேதி முதல் குரு 2-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. 14-ம் தேதி முதல் சூரியன் 8-ம் இடத்திற்கு மாறுவது குறை. பண வரவு சற்று அதிகமாகும். மறைந்த, தொலைந்த பொருள்கள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். நண்பர்கள் நலம் புரிவார்கள். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.

மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்களின் சேர்க்கை நிகழும். இயந்திரப் பணியாளர்களது நிலை உயரும். அலைச்சல் கூடவே செய்யும். அதற்கான பயனும் கிடைத்துவரும். வார முன்பகுதியில் செலவுகள் கூடும். பின்பகுதியில் பண வரவு அதிகமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 14, 15.

திசைகள்: தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, சிவப்பு.

எண்கள்: 6, 9. l பரிகாரம்: ராகு, கேது, சனி ஆகியோரை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம் படிப்பது நல்லது.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் சனியும், 6-ல் சூரியனும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். மனமகிழ்ச்சி கூடும். திரவப் பொருட்கள் லாபம் தரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். பண நடமாட்டம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். பொதுப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள்.

அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். அதே நேரத்தில் 8-ல் செவ்வாயும் 12-ல் ராகுவும் உலவுவதால் வீண் செலவுகளும் ஏற்படும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை. 10-ம் தேதி முதல் தம்பதியினரிடம் ஒற்றுமையின்மை காணப்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 9, 15.

திசைகள்: மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: நீலம், மெரூன், பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 7, 8.

பரிகாரம்: சுப்பிரமணியரையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x