Last Updated : 23 Dec, 2023 05:48 AM

 

Published : 23 Dec 2023 05:48 AM
Last Updated : 23 Dec 2023 05:48 AM

ஆண்டாள் திருப்பாவை 7 | உள்ளம் நிறைந்த பக்தியுடன் பாடுவோம்!

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்ப கைப்பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்!

அதிகாலை புலர்ந்து விட்டது. நம்மைச் சுற்றி எவ்வளவு சத்தங்கள்? ஆனைச் சாத்தன் பறவைகள் (குருவிகள்) கீச்சு கீச்சு என்று ஒலி எழுப்பி தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கின்றன. அது உனக்கு கேட்கவில்லையா? நெய் மணம் வீசும் கூந்தலை உடைய ஆயர்குலப் பெண்கள் மார்பில் அணிந்துள்ள ஆமைத் தாலியும், அச்சுத் தாலியும் கல கல என்று ஒலி எழுப்புகின்றன. அவர்கள் கைகளை அசைத்து மத்தைப் பயன்படுத்தி தயிர் கடையும் சல சல என்ற ஒலியும் உனக்கு கேட்கவில்லை.

பெண்களின் தலைவியே! ஸ்ரீமன் நாராயணனை, கேசவா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, திருவிக்கிரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேஷா, பத்மநாபா, தாமோதரா, அனந்தா, அச்சுதா என்று பலவாறு அழைத்து பாடுகிறோம்.

இறைவன் நம்மிடம் வேண்டுவது தூய உள்ளம். உள்ளம் நிறைந்த பக்தி. நாங்கள் பாடுவதை கேட்டுக் கொண்டே கேட்காதது போல் இன்னும் உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறாயே! ஒளி பொருந்திய உடலை உடைய கண்ணே! ஓடி வந்து கதவைத் திறப்பாய் என் கண்மணியே என்று தனது தோழியை மார்கழி நீராட அழைக்கிறாள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி.

பரத்வாஜ பட்சி என்றழைக்கப்படும் ஆனைச்சாத்தன் குருவிகள் எழுப்பும் ஒலி, பெண்களின் தாலி ஒலி, தயிர் கடையும் ஒலி, ஆண்டாளின் தோழிகள் பாடும் பாடல்களின் ஒலி ஆகியவற்றையும் மீறி ஒருவரால் எப்படி அறியாமை இருளில் இருக்க முடியும் என்று வினவுகிறாள் ஆண்டாள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x