Published : 26 Dec 2017 11:47 AM
Last Updated : 26 Dec 2017 11:47 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 11

கற்றுக்கறவைக் கணங்கள் பல கறந்து

சென்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!

புற்றரவல்குல் புனமயிலே! போதராய்

சுற்றத்து தோழிமாரெல்லாரும் வந்து நின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!

அதாவது, ஆயர்குல மக்கள், நிறைய கன்றுகளுடன் கூடிய பசுக்களைத் தங்கள் உடைமைகளைக் கொண்டு, அவற்றில் இருந்து பால் கறந்து, பயம் பெறுபவர்கள். தங்களுக்கு மட்டுமல்லாது, மற்ற மனிதர்களுக்கும் அந்தப் பாலைக் கொடுத்து உயிரினங்கள் பசியாற உதவியாக, குற்றமில்லாத தொழில் புரிபவர்கள்.

யாருடனும் தாமாகச் சென்று வீண் சண்டை போடமாட்டார்கள். ஆனாலும் தாமாக வந்த தீவினைகளை அழிக்க, தம் மீது போர் தொடுக்கும் பகைவர்களை அழிக்கவல்லவர்கள். அவ்வாறான ஆயர் குலத்தில் தோன்றிய பொற்கொடியே! பொன்னால் செய்யப்பட்ட கொடி போன்ற பெண்ணே! புற்றில் வாழும் பாம்பின் படம் போல் அழகிய அல்குலை உடையவளே! தன் நிலத்தை விட்டு, வேறு எங்கும் செல்லாமல், அங்கு கிடைக்கும் இரையை உண்டு, அந்த இடத்திலேயே வாழும் மயிலுக்கு புனமயில் என்று பெயர்.

அவ்வாறு காட்டில் வாழும் புனமயிலின் சாயலை ஒத்தவளே! செல்வக்குடியில் பிறந்தவளே! எழுந்து வருவாயாக! என்று ஆண்டாள் தன் தொழியரிடம் சொல்லி, பரந்தாமனைத் தொழும் அவசியத்தைச் சொல்கிறாள்.

இங்கு அக்கம்பக்கம் உள்ள உனது தோழியர் எல்லாம் உன் வீட்டின் முற்றத்தில் வந்து நின்ற கரியமேகங்களின் நிறமுடைய கண்ணனின் பெயர் சொல்லி, பாடுகிறோம். நீ ஏதும் பதிலுரைக்காமல் இருப்பது சரிதானா? என்கிறாள் ஆண்டாள்.

இந்தப் பாடலை தினமும் பாடுங்கள். ஆண்டாளின் பக்தியும் புலப்படும். திருமாலின் பேரருளையும் உணரலாம்!

இந்தத் திருப்பாவைப் பாடலை தினமும் பாடி வந்தால், மனதில் நிம்மதி பிறக்கும். குழப்பங்கள் நீங்கும். தெளிவு பிறக்கும். எல்லோரையும் சமமாகப் பாவிக்கும் பண்பு வளரும். நிம்மதியும் நிறைவுமாக வாழ்வீர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x