Last Updated : 02 Nov, 2017 01:51 PM

 

Published : 02 Nov 2017 01:51 PM
Last Updated : 02 Nov 2017 01:51 PM

அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்!

அன்னமும் சிறப்பு. அபிஷேகமும் விசேஷம். இறைவன் சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம் எல்லாவற்றையும் விட அற்புதமானது என்கிறது வேதம். ஆச்சார்யப் பெருமக்களும் சிலாகித்துப் போற்றுகிறார்கள்.

“அம்பிகைபாகனான சிவபெருமான், சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே” என்கிறார் சென்னை, நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

அன்னாபிஷேகத்தின் சிறப்புகளை மேலும் விவரித்த அவர், “அன்னம் பிராணன் என்றும், அஹமன்னம் எனவும் வேதங்கள் போற்றுகின்றன. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள். அன்னம் எப்படியோ எண்ணமும் அப்படியே என்று சொல்லிவைத்தார்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தைக் கொஞ்சம் கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

அது மட்டுமல்ல, நமது பேரண்டம் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு எனும் பஞ்ச பூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்ற திருமூலர் வாக்குப்படி நமது உடலுக்கும் பஞ்சபூதங்களுக்கும் தலைவன் சிவபிரான்.

அந்தப் பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படச் செய்து, உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றி கிடைக்க அருள் செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையிலும், நாட்டிலும் வீட்டிலும் எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.

அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாவது. நிலத்தில் விழும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத்தீயினால் பால் இறுகி விளைச்சலைத் தருகிறது. காற்றின் உதவியுடன் கதிரடித்து எடுக்கப்படும் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியான பிறகு, மண்ணால் ஆன பானையில் நீரில் இடப்பட்டு, காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழ் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது. அந்த அன்னத்தினால் செய்யப்படுவதால்தான், அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது”என்று சிலிர்க்கும்படி விவரிக்கிறார்.

அன்னாபிஷேக முறை:

ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு, தேவையானால் சற்று நீர் கலந்து அன்னாபிஷேகம் செய்யப்படும். சமீபகாலமாக அன்னாபிஷேகத்தின் போது அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு அலங்காரம் செய்கிறார்கள். இது அவசியமில்லை. ஆனாலும் தோஷமில்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம். நடுப்பகுதி விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும்.

இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் மீதமிருக்கும் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.

லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும். எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ அல்லது ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள். நீர்வாழ் உயிர்களுக்கு அது உணவாகட்டும் என்பது ஐதீகம்!

நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றிக் கிடைக்கும் என்பதை இயற்கையின் சமன்பாட்டு விதியை அறிந்து உணர்ந்திருந்தனர் நம் முன்னோர்.

அதனால்தான் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாழும் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது.

நல்ல அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் பிரம்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கே அளிக்கப்படுகிறது. ஏனெனில் அவற்றைத் தாங்க சிறு உயிர்களால் முடியாது என்ற ஜீவகாருண்யமே காரணம்.

பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படும் அன்னத்தில் சில கோயில்களில் தயிர் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x