Published : 27 Sep 2017 20:02 pm

Updated : 04 Oct 2017 14:10 pm

 

Published : 27 Sep 2017 08:02 PM
Last Updated : 04 Oct 2017 02:10 PM

சடுகுடு ஆடும் ரஜினி-கமல் அரசியல்

கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க நாள் பார்க்க, ரஜினியோ அதற்கு அமைதி காக்க, கோவை ரஜினி ரசிகர்கள் கமலுக்கு எதிராக போஸ்டர், வாட்ஸ் அப் படங்களை கடைவிரித்துக் கொண்டிருக்கின்றனர். அதில், 'சப்பாணிகிட்ட பத்த வச்சது பரட்டையா?' என்ற வேடிக்கை குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

'போர் வரட்டும் பார்க்கலாம்' என்று ரஜினி சொல்லிச் சென்றது இன்னமும் அடையில் அப்படியே இருக்க, பிக்பாஸ் வருகையில் திடீர் எழுச்சி பெற்ற கமலஹாசன் அதீத அரசியல் பேசி, இறுதியில் தான் கட்சி ஆரம்பிக்கப் போவதையும், அதற்கான சின்னம், கட்சிப் பெயர் பணிகளில் இறங்கி விட்டதாகவும் அறிவிக்க, தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் எல்லாம் ஒரு மாதிரியாகத்தான் விழித்துக் கொண்டிருக்கிறது. மற்ற கட்சிகளுக்கு எப்படியோ, அதிமுக இல்லையென்றால் சுலபமாக வெல்லும் அடுத்த நிலையில் உள்ள திமுக ஒருவித திகிலுடன் உள்ளது.


ஆட்சியில் குழப்பங்கள் நிகழும் போதெல்லாம் அடுத்தது திமுகவா? அதிமுகவா? என்ற கேள்விகள்தான் தமிழக அரசியலை உலுக்கி எடுக்கும். இதில் கொஞ்சம் விதிவிலக்காக எம்ஜிஆர் மரணத்தின் போது ஜெ, ஜா அணி பிரிய கிராமங்கள் தோறும் சேவக்கோழியா? (அதிமுக ஜெ) ரெட்டைப்புறவா? (அதிமுக ஜா) என்பதே சின்ன சர்ச்சைகளாகி இறக்கை கட்டிக் கொண்டன. இவர்கள் போட்ட சைக்கிள் இடைவெளி குஸ்தியில் பிரிந்த ஓட்டுகள் மூலம் திமுக வென்று ஆட்சியை அமைத்துக் கொண்டது.

அப்போது ஜெயலலிதா நட்சத்திர அந்தஸ்தில் பிரச்சார பீரங்கியாக இருந்தார். திமுகவிற்கு அரசியல் முதிர்ச்சி பெற்ற தலைவர் கருணாநிதி படு ஸ்மார்ட்டாக ஓடியாடி களமாடிக் கொண்டிருந்தார். எனவே அந்த விஷயம் எளிதில் சாத்தியமாயிற்று. என்றாலும் கூட அதிமுக அணிகள் ஒன்றிணைய, இரட்டை இலை கிடைத்துவிட, ராஜீவ் காந்தி அகால மரணமடைய அந்த விஷயங்கள் எல்லாம் நட்சத்திர அந்தஸ்துள்ள ஜெயலலிதாவை மாபெரும் தலைவர் என்ற அளவுக்கு உயர்ந்த நிலையில் வைத்து விட்டது.

அதன் பிறகு அவர் இடறி விழும்போதெல்லாம் கருணாநிதியும், கருணாநிதி இடறி விழும்போதெல்லாம் ஜெயலலிதாவும் முதல்வர்களாக பரிணமித்தார்கள். கடந்த தேர்தலில் மட்டும் கருணாநிதியின் அரசியல் தந்திரங்களையும், வியூகங்களையும் அவரின் அரசியல் வாரிசுகள் ஏற்காத நிலையில் மீண்டும் முதல்வர் நாற்காலியை தக்க வைத்துக் கொண்டார் ஜெயலலிதா. ஒரு வேளை கருணாநிதி கணக்குப் போட்டபடி விஜயகாந்த் அவர் அணியில் கூட்டு சேர்ந்திருந்து, அந்த அணி பலம் பொருந்தியதை பார்த்து மற்ற உதிரிக்கட்சிகளும் அதனுடன் பிணைந்திருந்தால் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் வரலாறு 1996 வருடம் போல் சுத்தமாக மாறியிருக்கும்.

இடையில் ஜெயலலிதா மரணமும் அதையொட்டி நிகழ்ந்த- நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் குழப்பங்களுக்கும் தமிழகத்தில் இடமிருந்திருக்காது. இப்போது ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி, டிடிவி. தினகரன் அணி என்றெல்லாம் பிரிந்தே தேர்தலை சந்தித்தாலும் ஜெயலலிதா சேவற்கோழி சின்னத்தில் நின்று வென்றதைப் போன்ற கணிசமான இடங்களை எந்த ஓர் அதிமுக அணியாவது பிடிக்குமா என்பது கேள்விக்குறியே.

அதேபோல் எல்லா அணிகளும் ஒன்றிணைந்து இரட்டை இலையை தக்க வைத்தால் கூட நிலைமை எப்படியிருக்கும் என்பதை சொல்ல முடியாது. ஆனால் பணமும், பேரமும் துள்ளி விளையாடும். அதன் சக்திக்கு ஏற்ப திமுக வெற்றிக்கு போராட வேண்டி வரும். என்றாலும் கூட சுலபமாக அக்கட்சியே வென்று ஆட்சியை பிடிக்கவும் வாய்ப்புகள் நிறைய. இந்த இடத்தில்தான் வருகிறது சிக்கல். அதை நடிகர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் ஏற்படுத்துகிறார்கள்.

 மக்களுக்காகப் பாடுபடுகிறேன் என்று அறிவித்துக் கொண்ட தங்களை நேர்படத் தெரிந்தவர்களை விடவும், தங்களுக்கு தெரிந்த நட்சத்திரங்களையே விரும்புகிறார்கள். அந்த அளவுக்கு கவர்ச்சி மாயையில் விழுந்து கிடக்கிறார்கள். அதைத்தான் அறுவடை செய்து கொள்ள ஒருவர் அரசியலுக்கு ரெடி என்கிறார்; இன்னொருவர் போர் வரட்டும் பார்க்கலாம் என்கிறார். இதில் தற்போதைக்கு குழம்பிப்போயிருப்பவர்கள் அதிமுக- திமுகவினர் மட்டுமல்ல. அவர்களை விடவும் குழப்பத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் ரஜினி-கமல் ரசிகர்கள்தான்.

'முதலில் அவர் வருவாரா? இவர் வருவாரா?', 'இவர் வருவது உறுதியாகி விட்டது; ஆனால் அவர் எதுவும் பேசாமல் இருக்கிறாரே!', 'அவர் பதுங்குவது பாய்வதற்கா? இல்லை மறுபடியும் பட விநியோகம் முடிந்தவுடன் மறுபடியும் தூங்குவற்கா?', 'ரெண்டு பேரும் ஒரு வேளை அரசியல் கட்சி ஆரம்பித்தால் யார் எம்ஜிஆர் ஆவார்; யார் கருணாநிதி ஆவார்?', 'கருணாநிதி எங்கே ஆவார்? ஒருவர் சிவாஜி கணேசனாகவே ஆவார்!', 'அவர் சிவாஜி கணேசன் ஆனால் மட்டும் இவர் எம்ஜிஆர் ஆகிவிடுவாரா? மாட்டார்!' என இப்படியெல்லாம் கமெண்ட்ஸ் இருவேறு தரப்பு ரசிகர்களிடம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே வேறு அரங்கிலிருந்து உரத்து வேறொரு குரல், 'அட நம்ம கேப்டன் பழையபடி நல்லா பேசறார்ப்பா. வாட்ஸ் அப்புல வந்துச்சு பார்க்கலை. திரும்ப அவர் களத்தில் பழையபடி விளையாடுவார். மத்தவங்க வூட்டுக்கு போக வேண்டியதுதான்!' என்கிறது.

இந்த அரசியல் குத்தாட்ட குளறுபடியில் கோவை ரஜினி ரசிகர்கள் ஒரு படி மேலே போய் ரஜினிக்கும், கமலுக்கும் கலகம் மூட்டுகிற மாதிரியான போஸ்டர்களை தெருக்களிலும், வாட்ஸ் அப் மற்றும் முகநூல்களிலும் களம் இறக்கி உருட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒரு போஸ்டரில் 'பதினாறு வயதினிலே!' சப்பாணி கமல் பரட்டை ரஜினியின் கையை அமுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். அதில் 'பட்டமும், பதவியும் தானா தேடி வர்ரது... பரட்டைக்கு மட்டும்தான்டா!' என்று வாசகங்கள்.

இன்னொன்று கபாலி ரஜினி போஸ்டர். அதில் 'தெனாலி வந்தா கோமாளி; கபாலி வந்தாதான்டா தீபாவளி!' என நறுக் வாசகங்கள்.

அடுத்த போஸ்டரில் தலைமைச்செயலகம், ரஜினி படம் பொறித்து, 'தலைவா நீங்க செலக்ஷன் இனி இல்லை எலக்ஷன்!' என வாசகம் நகர்கிறது.

இந்த போஸ்டர்களை பொறுத்தவரை என்ன சொல்கிறதோ இல்லையோ. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்தில் சிவாஜி ரசிகர்களும், எம்ஜிஆர் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் தாக்கி பேசிக் கொண்டது போலான சூழ்நிலையை தற்போதைய அரசியல் சூழல் ஏற்படுத்திக் கொடுத்து விட்டது என்பதைத்தான்.

ஏற்கெனவே 'நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆலோசித்துவரும் வேளையில் அவருக்கு போட்டியாக நீங்களும் அரசியலுக்கு வருகிறீர்களா?' என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் , 'நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆலோசித்துவருவதால் நான் அரசியலுக்கு வர நினைக்கவில்லை. எனக்கு தேவை என்று நான் நினைப்பதனால்; தமிழகத்துக்கு தேவை என்று நினைப்பதனால் நான் வருகிறேன். தமிழக மக்கள் கொடுத்திருக்கும் நம்பிக்கையில் தொடர்ந்து பேசி வருகிறேன்!' என்று தெளிவாகவே கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதற்கு முந்தைய பேட்டி ஒன்றில், 'நான் அவருடன் (ரஜினியுடன்) இதைப்பற்றி பேசவில்லை என்று நினைக்கிறீர்களா? அப்படியே பேசினேன் என்று தெரிவித்தால் என்ன பேசினேன் என்று சொல்வேன் என எண்ணுகிறீர்களா?' என்றும் நாசூக்காக கேட்டிருந்தார்.

இதையெல்லாம் தொடர்ந்து இன்னொரு மீடியா பேட்டியில், 'பாஜக தீண்டத்தகாத கட்சி அல்ல; ஒத்த கருத்துடன்பாடு ஏற்பட்டால் அதனுடன் கூட்டணிக்கு தயார்!' என்றும், 'நானும் ரஜினியும் இரண்டு பேருமே ஊழலுக்கு எதிரான ஒத்த கருத்தோடுதான் வருகிறோம்!' எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையெல்லாம் பார்த்து ரஜினி ரசிகர்கள், 'கமல் வேறு; ரஜினி வேறு; இருவேறு கட்சிகளைத்தான் அவர்கள் ஸ்தாபிக்கப் போகிறார்கள்!' என்று உறுதியாக நம்புகின்றனர்.

என்றாலும் இவர் இவ்வளவு பகிரங்கமாக அறிவிக்கும்போது அவர் ஏன் சும்மா இருக்கிறார் என்றும் சந்தேகம் கிளப்புகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஒரு ரஜினிமன்ற நிர்வாகி, ''சென்ற புகைப்பட செஷனில் 16 மாவட்டங்களை சேர்ந்த மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். மீதியுள்ள 15 மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு இந்த செப்டம்பரில் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார். அதுவும் நடக்கவில்லை. படப்பிடிப்பு வேலைகளால் அது தள்ளிப் போகிறது என்று சொன்னாலும் அவர் சென்னையில்தான் இருக்கிறார். ஒருவேளை ரசிகர்கள் சந்திப்பு இப்போது நடத்தி கமல்ஹாசன் அரசியல் வருகை, ஜெயலலிதா மரண சந்தேகம், மாறி வரும் அரசியல் சூழல் பற்றி பேச்சு வந்தால் என்ன செய்வது என அதை தவிர்த்திருக்கலாம்!'' என குறிப்பிட்டவர், வேறு சில விஷயங்களில் உணர்ச்சி பொங்கினார்.

''இந்த நேரத்தில் அவர் தூய்மை திட்டத்தை பற்றி பேசுகிறார். சத்குருவின் நதி மீட்பு பிரச்சார விளம்பரத்தில் இடம் பெறுகிறார். இதுவெல்லாம் கூட ரசிகர்கள் மத்தியில் ஒரு நெகட்டிவ் சிந்தனையை ஏற்படுத்தியிருக்கிறது. கமல்ஹாசன் தெளிவாக இருக்கும்போது, இவர் ஒரு சார்பாக, யாருக்காக நிற்கிறார் என்பதை இப்படி வெளிப்படுத்துகிறாரே. இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை. எப்படி பார்த்தாலும் அவர் (ரஜினி) அரசியலுக்கு வரும்போது கண்டிப்பாக கமலின் அரசியல் எடுபடாது. அந்த அளவுக்கு ரஜினிக்கு பெண்கள் முதல் பெரியவர்கள் வரை கண்மூடித்தனமான வரவேற்பு உள்ளது. எனவே நாங்கள் இந்த விஷயத்தில் பொறுமை காத்து வருகிறோம்!'' என்கிறார் இவர்.

இன்னொரு ரசிகர் மன்ற பொறுப்பாளர் வேறொரு சந்தேகத்தையும் கிளப்பினார். ''கமல் பேசுவது எல்லாமே ரஜினியின் குரலாகவே இருக்கிறது. அவர் ரஜினியிடம் அரசியல் பேசாமல் இப்படி வெளிப்படையாக மேடை அரசியல் பேச மாட்டார். எப்பவும் மற்றவர்களை பேசவிட்டு, அதன் எதிர் வினைகளை கருத்தில் கொண்டு பிறகு அதன் ஆழத்தில் மூழ்குவது ரஜினியின் பாங்கு. அதைத்தான் கமலிடம் பத்த வச்சுட்டு கவனித்துக் கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது!'' என்கிறார் அவர்.

கமல், ரஜினி ரசிகர்களின் இந்த நிலைப்பாடுகள் திமுக அரங்கில் மட்டுமல்ல; தேமுதிக அரங்கிலும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை.

இவர்கள் இருவருமே கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் யார் யாருடன் கூட்டு வைப்பார்கள். அதனால் எந்த அளவு ஓட்டுக்கள் சிதறும். அது எந்த கட்சிக்கு பாதகமாக இருக்கும் என்பதை இப்போதே கணக்குப் போட்டு பார்க்க தொடங்கியுள்ளார்கள்.

''எங்கே, எப்படி கூட்டணி அமைந்தாலும், எந்தப்பக்கம் ஓட்டுகள் பிரிந்தாலும் இப்போதைக்கு அவையெல்லாமே எங்களுக்கு (திமுகவிற்கு) வரவேண்டிய ஓட்டுகளே. அந்த அளவுக்கு மக்கள் அதிமுக ஆட்சியின் மீது வெறுப்பில் உள்ளார்கள். அந்த வெறுப்பரசியலை எந்த அளவுக்கு ரஜினி, கமல் பக்கம் போகாமல் பாதுகாக்க போகிறாரோ அதில்தான் எங்கள் செயல் தலைவரின் அரசியல் எதிர்காலம் அடங்கியிருக்கிறது!'' என்பதை திமுகவின் மூத்த முன்னோடிகள் கூட ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள்.

 சப்பாணிகிட்ட பத்த வச்சது பரட்டையா?சடுகுடு ஆடும் ரஜினி-கமல் அரசியல்.ரஜினி அரசியல்கமல் அரசியல்திமுகஅதிமுகதேமுதிக

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x