Published : 03 Oct 2017 02:57 PM
Last Updated : 03 Oct 2017 02:57 PM

யானைகளின் வருகை 48: காரமடை வனத்தை கதிகலக்கும் களியாட்டங்கள்

குருடிமலை, பாலமலை அடிவாரப்பகுதிகளான கோவனூர், குரும்பபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் சிஆர்பிஎப் முகாம் அமைக்கப்பட்டிருப்பதையும் தாண்டி ஏராளமான பண்ணை வீடுகள், புதிய குடியிருப்புகள், சொகுசு பங்களாக்கள் ஏக்கர் கணக்கில் முளைத்துள்ளன. அவையும் யானைகள் வழித்தடம் மாறி ஊருக்குள் புகுவதற்கு காரணியாக விளங்குவதையும் இங்கே பேசியாக வேண்டும்.

குறிப்பாக கோவனூரில் பாலமலை அடிவாரத்தில் பரப்பளவில் ஒரு பண்ணை வீடு உள்ளது. சில ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீட்டை ஒட்டியே வனப்பகுதியும் அமைந்துள்ளது. இங்கே மான், கரடி, காட்டுப்பன்றிகள், சிறுத்தை, காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகம் உள்ளது. இப்படி வரும் வனவிலங்குகள் அருந்த தண்ணீர் தொட்டிகளையும் இந்த பண்ணை வீட்டின் சுற்றுச்சுவர் ஓரமே அமைத்துள்ளனர். அந்த தண்ணீர் தொட்டிகளுக்கு அன்றாடம் ஆழ்குழாய் கிணறு மூலம் நீர் நிரப்பப்படுகிறது.

அந்த தொட்டிகளில் நீர் அருந்த வரும்போது மேலிருந்து பார்க்கும் வண்ணம் அதற்கு முன்பாகவே ஒரு கண்காணிப்பு கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இதன் மீது நின்று வனவிலங்குகள் வருவதை இந்த பங்களாவிற்கு வந்து தங்குபவர்கள் படம் பிடிக்கவும், பார்த்து ரசிக்கவும் ஏதுவான வகையில் இவையெல்லாம் நிறுவப்பட்டுள்ளது. இந்த பண்ணை வீடு உருவாகி பத்தாண்டுகளுக்கு மேலாகிறது. இந்த பண்ணை வீட்டிற்கு ஒரு பிரபல நடிகர் வருவதும், அவருடன் அவர்கள் உறவுக்காரர்கள் வருவதும் தங்குவதும் அடிக்கடி நடக்கக்கூடியது.

இந்த பண்ணை வீடு அந்த நடிகருடையது என்றும், இல்லை அவரின் சகோதரியுடையது என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு. அவர்கள் வராத நேரங்களில் செக்யூரிட்டிகள் கண்காணிப்பிலேயே பண்ணை இல்லம் இருக்கும். அப்போதெல்லாம் வெளியூரிலிருந்து வரும் ஐஎப்எஸ், ஐபிஎஸ் ரேங்க் அதிகாரிகள் குடும்பத்துடன் தங்குவதும் நடக்கும். எனவே இங்கு நடக்கும் வனவிலங்குகள் காட்சியகம், தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்ட விதிமீறல்களை உள்ளூர் வனத்துறையினர் கூட தட்டிக் கேட்பதில்லை.

இந்த பண்ணை வீட்டை ஒட்டியே சில சமயம் யானைகள், காட்டுப்பன்றிகள் இறப்புகளும் நடந்துள்ளன. இந்த வீடு வருவதற்கு முன்பு வரை சுற்றுப்பகுதி தோட்டங்களில் காட்டு யானைகள் வரும். பயிர்களை சேதப்படுத்தும். அவற்றை பொருட்படுத்தாமல் சேதம் தவிர்த்து மீதியை விவசாயிகள் அறுவடை செய்வதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்த பண்ணை இல்லம் அமைந்த பிறகு சுற்றிலும் இருக்கும் சுற்றுச்சுவர், மின்வேலி, அகலி போன்றவைகள் அவற்றின் போக்கை மாற்றி விட்டது. விளைபொருட்களை மட்டும் சேதப்படுத்திய யானைகள் அங்கேயே இருக்கும் கூரை வீடுகளை, குடிசைகளை பிடுங்கி எறிய ஆரம்பித்து விட்டது.

அப்படித்தான் ஏழாண்டுகளுக்கு முன்பு சின்னத்தடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, கோவனூர் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வந்த ஒற்றை யானை இங்குள்ள விவேகானந்தா நகர் குடியிருப்பில் தன் வீட்டின் முன் நின்றிருந்த வெண்ணிலா என்ற ஒரு பெண்ணை மிதித்துக் கொன்றது. அதில் மக்கள் கொந்தளித்து போராட்டங்கள் செய்ய வனத்துறையினர் ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்ட கும்கி யானைகளை கொண்டு வந்து நிறுத்தினர்.
 

ஆனால் கும்கிகளுக்கு போக்கு காட்டிய ஒற்றை யானை காட்டுக்குள் சென்று விட்டது. ஒரு முறை அடக்கப்போன கும்கியை காட்டு யானை ஒன்று தந்தத்தால் குத்திவிடும் சம்பவமும் நடந்தது. அதைத் தொடர்ந்து அந்த கும்கிகள் ஜகா வாங்கிய ஃபெவிலியன் திரும்பிய சம்பவமும் நடந்தது. ஒரு கட்டத்தில் இங்கே வந்து செல்லும் யானைகளுக்கு காலர் ஐடி (யானைகள் வருகையை முன்கூட்டியேவனத்துறையினருக்கு சிக்னல் மூலம் காட்டும் கருவி) பொருத்தும் முயற்சியும் நடந்தது. அதிலும் கும்கிகளுக்கு கல்தா கொடுத்து அடர்ந்த காட்டுக்குள் சென்று விட்டன காட்டு யானைகள். இப்போதும் இங்கே காட்டு யானைகளின் வருகையும், தோட்டத்து பயிர்கள் சேதமும் தொடர்ந்து இப்போதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இந்த கோவனூரைப் போலவே தோலம்பாளையம், கோபனாரி, ஆலங்கண்டி, ஆலங்கண்டிபுதூர் உள்ளிட்ட கிராமங்களில் பல்வேறு பண்ணை வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்த பகுதி தொடங்கி வெள்ளியங்காடு வரையிலும் (சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவில்) கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைச்சல் நிலங்கள் வீட்டுமனைகளாக பிரிக்கப் பட்டுள்ளது. அதற்குள் திடீர் பங்களாக்கள், திடீர் கேளிக்கை விடுதிகளும் உருவாகின்றன. இதனாலும் வலசை மாறும் யானைகள் தோட்டங்கள், விவசாயிகளின் கூரை வீடுகளை குறி வைத்து வருகின்றன.

இங்கே குறிப்பாக கோபனாரியிலிருந்து வெள்ளியங்காடு வரும் வழியில் சுமார் 60 ஏக்கரில் ஒரு கேளிக்கை விடுதி ஒன்று 7 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. அதில் இரவு, பகல் என்றில்லாது கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்தேறின. இந்த களியாட்டத்திற்கு சென்னை முதல் கோவை வரை உள்ள செல்வந்தர்கள் வந்து செல்வதும் தொடர்ந்தது. வார விடுமுறை நாளன்று ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் கூட ஆட்கள் கூடினார்கள்.

இதைப் பார்த்து இப்பகுதி விவசாயிகள் பொங்கினர். இந்த நிலமே யானைகளின் வழித்தடம். அமைதியான இடமும் கூட. அப்படிப்பட்ட இடத்தில் அத்தனை களியாட்டமும் நடக்கிறது. அதனால் யானைகள் எல்லாம் ஊருக்குள் புக ஆரம்பித்து விட்டன என்று மாவட்ட ஆட்சியரிடமே புகார் தெரிவிக்க அவர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டன. இருந்தாலும் இந்த பரந்துபட்ட ஏரியாவில் பிரம்மாண்டமாய் நீளும் சுற்றுச்சுவரும், அதனையொட்டி தோண்டப்பட்டுள்ள அகழிகளும், மின்வேலிகளும் காட்டு யானைகளை மிரள வைத்து ஊருக்குள் விரட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.

அதேபோல் கோவனூரை அடுத்துள்ள தமிழக- கேரள எல்லைப் பகுதியில் பெரிய அளவிலான வாகனங்களுக்கான சர்வீஸ் நிலையம் ஒன்று இருந்தது. அங்கு கழுவி விடப்படும் தண்ணீர் தற்காலிகமாக அங்குள்ள பள்ளத்தில் தேக்கப்பட்டு, மழைக்காலங்களில் குழாய்கள் மூலம் எடுத்து விடப்பட்டது. அது கோபனாரி தாண்டி 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தோலம்பாளையம் வந்து சேர்ந்து விவசாய நிலங்களையே நாசப்படுத்தியது. இந்த தண்ணீரை நேரடியாகவோ, நீரோடைகள் மூலமாக கலந்தோ அருந்திய காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வயிற்று கோளாறுகள் மற்றும் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டன. இதற்கு எதிராக விவசாயிகள் எதிர்ப்பால் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு போகப்பட்டு கழிவு தண்ணீர் விடப்படுவது தடுக்கப்பட்டது.

இது போன்ற விஷயங்கள் இம்சைப்படுத்துவது போதாதென்று இன்னொரு பக்கம் இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள கல்குவாரிகளும் தன் பங்குக்கு பிரச்சினைகளை பலப்படுத்தியது.

இந்த காரமடை வனச்சரகத்தை ஒட்டிய பகுதிகளில் மட்டும் ஏழுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இவையெல்லாமே பெரிய அளவிலேயே இயங்குகின்றன. இதனால் இங்கு மருதூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்கள், குமரன் குன்று உள்ளிட்ட பகுதிகள் சூழல் சூறையாடல் வெகுவாகவே நடந்து கொண்டிருக்கிறது. தோலம்பாளையம் அருகே உள்ள ஒரு குவாரி மட்டும் தென்னக ரயில்வேக்கு தண்டவாளங்களுக்கு இடையே போடக்கூடிய ஜல்லிகளை தயாரித்து தருகிறது என்றால் அதன் உற்பத்தி திறன், அது வெட்டி எடுக்கும் கருங்கற் பாறையின் அளவை யாவரும் யூகித்துக் கொள்ளலாம். இதேபோல் இங்குள்ள கல்குவாரிகள்தான் கேரளா அரசு அட்டப்பாடியில் கட்டிய, பவானி தடுப்பணைகளுக்கு கற்கள் சப்ளை செய்யும் பணியையும் செவ்வனே செய்தது என்றால் அதன் பலத்தையும் புரிந்து கொள்ளலாம்.

இந்த கல்குவாரிக்கு பயன்படுத்தும் வெடிகள் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியவை. அப்படியானால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் எவ்வளவு தூரம் தொந்தரவுக்கு ஆட்பட்டிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த யோசனை விவகாரங்களுக்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி இதே பகுதியில் வேறொரு அதி முக்கிய சூழல் கேடும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது. அது உள்ளூரில், உள்நாட்டிலிருந்து வந்த சூழல் கேடு அல்ல. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியான சூழல் கேடு என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x