Published : 16 Sep 2017 05:57 PM
Last Updated : 16 Sep 2017 05:57 PM

சனிக்கிரகத்தை ஆய்வு செய்த கேசினியிடமிருந்து விஞ்ஞானிகள் பெற்றுக் கொண்ட 20 முக்கிய அம்சங்கள்

1997-ம் ஆண்டு சனிக்கிரகத்தை நோக்கி பயணித்து 2004-ம் ஆண்டு முதல் சனிக்கிரகத்தைச் சுற்றி வந்து விந்தையான தகவல்களை பூமிக்கு அனுப்பிய கேசினி விண்கலம் நமக்கு அனுப்பிய தகவல்களில் 20 முக்கிய அம்சங்கள் கவனிக்கத்தக்கதாகும்.

சூரியக் குடும்பத்தின் 2வது பெரிய கிரகமான சனியிலிருந்து தகவல்களை அனுப்பி தன் பணியை நேற்று முடித்துக் கொண்ட கேசினி விண்கலம் நேற்று (செப்.15) விண்வெளியில் தீப்பந்தாகி விஞ்ஞானிகளுக்கு பிரியாவிடை அளித்தது.

கேசினியால் கிடைத்த 20 அறிவியல் முத்துக்கள்:

1. நீர், பனிப்புகைத்திரைகள், என்சிலேடஸ்

கேசினி விண்கலம்தான் என்சிலேடஸ் என்ற சனிக்கிரகத்தின் 6-வது பெரிய நிலவைக் கண்டுபிடித்துக் கொடுத்தது. இதன் பனி மேற்பரப்புக்கு அடியில் நீர் இருப்பதும் தெரியவந்தது. நாஸாவைப் பொறுத்தவரையில் இந்த சனிக்கிரக சமுத்திரம் சூரியக் குடும்பத்தின் அறிவியல் ரீதியாக சுவாரசமூட்டக்கூடிய ஒரு மிகப்பெரிய தகவலாகும்.

கூடுதலாக என்சிலேடஸ் கெய்சர் போன்ற ஜெட்கள் அமைப்பின் மூலம் நீராவியையும் பனித்துகள்களையும் தெளிக்கிறது என்பதையும் கேசினி மூலமே கண்டு கொண்டோம். அதாவது அடியில் நீர் அனல் வெளியேற்றிகள் இருப்பதை இது அறிவுறுத்தியது. மேலும் இந்த நீரில் நிறைய உப்பு, அமோனியா, இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர், இதன் மூலம் உயிர்கள் அங்கு சாத்தியமாகக் கூடிய சூழல் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

2. டைட்டனின் மேற்புறம் தோற்றம் எப்படி?

சனிக்கிரகத்தின் உலக வரைபடத்தை அணு அணுவாகப் பிடிக்கச் சென்ற கேசினி விண்கலத்துக்கு உதவியாக ஹுய்ஜென்ஸ் என்ற ரோபோ விண்கலம் 2005-ல் சனிக்கிரகத்துக்குள் நுழைந்தது (2005). இது சனிக்கிரகத்தின் மிகப்பெரிய நிலவான டைட்டனில் தரையிறங்கியது. இதற்கு முன்பாக டைட்டன் என்பது புதன் கிரகத்தை விட பெரியது அடர்த்தியான வளிமண்டலம் கொண்டது என்று நாம் அறிந்திருந்தோம். ஆனால் கேசினி-ஹியுஜென்ஸ் மிஷன் நமக்குக் காட்டியதெல்லாம் டைட்டன் அவை எல்லாவற்றையும் விடக் குறைவானது என்பதே.

3. டைட்டனின் பூமி போன்ற உலகம்:

டைட்டனைப் பற்றி நாஸா விஞ்ஞானிகள் கூறுவதென்னவெனில் இது ஆழ் உறைபனியிலிருந்த ஆரம்பகட்ட பூமி போன்றது என்பதே. இந்த டைட்டன் நிலவு உள்ளார்ந்த சமுத்திரத்தைக் கொண்டது என்பதைக் காட்டிய கேசினி, நைட்ரஜன் அதிகமிருக்கும் வளிமண்டலம் என்பதையும் காட்டியது. ஏனெனில் சனியே ஒரு மிகப்பெரிய வாயுக்கிரகமே. பூமிக்குப் பிறகு அடர்த்தியான நைட்ரஜன் வளிமண்டலம் கொண்டது டைட்டன்.

4. டைட்டன் கடல்களில் மீத்தேன்

ஹூய்ஜென்ஸ் டைட்டனில் தரையிறங்கிய பிறகு டைட்டன் என்பது உயிர்வாழ்க்கூடிய எதிர்கால ஆற்றல்களைக் கொண்டது என்பது மட்டுமல்லாமல் அதன் கடல்கள் மொத்தமும் மீத்தேன் நிரம்பியிருந்ததையும் நமக்கு கேசினி காட்டியது, எப்படி இத்தனை மீத்தேன் வந்து சேர்ந்தது என்பதை விஞ்ஞானிகள் இன்னமும் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். ஆனால் டைட்டன் கடல்களில் உயிரிகளைப் பராமரிக்கக் கூடிய தன்மை இருப்பதை விஞ்ஞானிகள் ஓரளவுக்குக் கணித்தனர்.

5. சனிக்கிரகத்தின் நிலவுகள்

கேசினி 3 புதிய சனிக்கிரக நிலவுகளைக் கண்டுபிடித்தது. மெதோன், பல்லேனி, ஏஜியான் ஆகியவையே இந்த நிலவுகள். இதன் மூலம் சனிக்கிரகத்தின் நிலவுகள் எண்ணிக்கை 62 ஆனது. ஏஜியான் என்பது சனியின் மிகச்சிறிய நிலவாகும். இது 1.5 கிமீ தான் இருக்கும்.

6. ஹைபீரியனில் ஹைட்ரோ கார்பன்கள்:

சனிக்கிரகத்தின் ‘மிக விநோதமான நிலவு’ ஹைபீரியன் ஆகும். அதன் நீண்ட வடிவமும், ஸ்பாஞ்ச் போன்ற மேற்பரப்பும் அதன் விநோதத்துக்குக் காரணம். இதன் மேற்பரப்பில் பல்வேறு சேர்க்கைகளில் ஹைட்ரோகார்பன்கள் இருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இது மேலும் உயிரிகள் வாழ்வதற்கான அடிப்படை ரசாயனம் ஆகும். இங்கு எதிர்கால உயிர்வாழ்க்கை சாத்தியம் என்பதை மீண்டும் அறிவுறுத்திய ஒரு நிகழ்வு கேசினி மூலம் சாத்தியமானது.

7. இயாபிடஸ் என்ற நிலவின் 300 ஆண்டுகால புதிர்:

சனிக்கிரகத்தின் முக்கியமான நிலவுகளில் ஒன்று இயாபிடஸ். இதன் சிறப்பு என்னவெனில் இதன் ஒரு பகுதி சூரியனை நோக்கியும் இன்னொரு பகுதி மற்றொரு புறம் நோக்கியும் இருக்கும், சூரியனை நோக்கி இருக்கும் பகுதி ஒளியினால் மூடப்பட்டிருக்கும், மற்றொரு பகுதி இருண்ட ஒரு பொருளினால் மூடப்பட்டிருக்கும். கேசினி இந்த புதிரை விடுவித்தது.

இதன் இருண்ட பகுதிக்கு இன்னொரு சனிக்கிரக நிலவான ஃபீப் காரணமாகும். இந்த ஃபீபிலிருந்து வரும் சிகப்பு நிற தூசி இயாபிடஸ் பாதையில் நுழைந்துள்ளது. இதனால் இருண்ட அதன் மேற்பரப்பு.

8. டயோனில் பிராணவாயு மூலக்கூறுகள்:

பிராணவாயு என்பது பூமியில் மட்டும் காணப்படும் ஒன்றல்ல என்பதை கேசினி நிரூபித்தது. டயோனில் ஆக்சிஜன் மூலக்கூறுகள் இருப்பதை கேசினி விஞ்ஞானிகளுக்குக் காட்டியது.

9. சனிக்கிரக வளையங்கள்:

சனிக்கிரக வளையங்கள் என்பது நீர், பனித் துகள்கள் அன்றி வேறல்ல. மேலும் இதில் சிறு இயற்கை கோள்களையும் கொண்டது. இதை 2006-ல் கண்டுபிடித்தது கேசினி.

10. சனிக்கிரகத்தைச் சுற்றி புதிய வளையத்தைக் கண்டுபிடித்த கேசினி

சனிக்கிரகத்தைச் சுற்றி புதிய வளையம் ஒன்றையும் கேசினி கண்டுபிடித்தது, புதிய அறிவியல் கொடையாகவே பார்க்கப்படுகிறது. இது மங்கலானது, சூரியன் கோளுக்கு பின்னால் இருக்கும் போது சில கோணங்களிலிருந்து மட்டுமே தெரியக்கூடியது.

11.சனிக்கிரகத்தின் புதிர் ஜி-வளையத்தின் சாத்திய ஆதாரம்:

சனிக்கிரகத்தின் புதிரான ஜி-வளையம் 1979-ல் கண்டுபிடிக்கப்பட்டது. விஞ்ஞானிகள் இதன் காரணத்தை அறிய படாதபாடு பட்டு தோல்வியடைந்தனர். இதற்கு கேசினி விடையளித்தது. நீண்ட காலம் முன்பு உடைந்த நிலவொன்றின் எச்ச சொச்சங்களே ஜி-வளையம் என்பதை அறிவுறுத்தியது கேசினி.

12.சனிக்கிரக வளையங்களுக்கும் கிரகங்கள் உருவாவதற்குமான தொடர்பு:

சனிக்கிரக வளையங்களின் செயல்களை ஆய்வு செய்வதன் மூலம் கிரகங்கள் எப்படி உருவாகின்றன என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய முடிந்தது. வளையங்களுக்கிடையே சிறு நிலவு உருவாக்கத்தை கேசினி காட்டிக் கொடுத்தது. வளையம் எந்த மூலக்கூறுகளால் ஆனதோ அதே கூறுகளால் இந்த சிறு நிலவுகளும் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டது.

13. சனிக்கிரக வளையங்கள் குலுங்குதல்

சனிக்கிரக வளையங்கள் பள்ளத்தன்மை கொண்டது சீரானது அல்ல. கிரகத்தின் புவியீர்ப்பு இடையீடுகளினால் வளையங்களில் அலைகள் உள்ளன. இந்த அலைகளை நிலநடுக்க வரைபடத்துடன் விஞ்ஞானிகள் ஒப்பிடுகின்றனர். இதன் மூலம் வாயுகிரகங்களான சனி, ஜுபிடர் எப்படி நடந்து கொள்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய உதவி கிடைத்தது.

14. சனிக்கிரக ஒளி அமைப்புகள் பற்றி புதிய பார்வைகள்

பூமியின் வடதுருவத்தில் உள்ள ஒளியைப் போல் கேசியினால் சிலபல கோணங்களில் சனிக்கிரகத்திலும் ஒளி அமைப்பை கண்டுபிடிக்க முடிந்தது. சூரிய வெடிப்பு பற்றிய கோட்பாட்டுக்கு இந்தக் கண்டுபிடிப்பு பெரிதும் உதவியது.

hurricanejpg100 

15. சனிக்கிரகத்தின் ராட்சத சூறாவளிகள்:

ஹார்வி, இர்மா போன்ற சூப்பர் சூறாவளிகளை நாம் மறந்து விடுவோம். சனிக்கிரகத்தில் இது மிகமிக மோசமானது, கேசினி மிக அருகில் சென்று சனியின் வட மற்றும் தென் துருவங்களில் இத்தகைய ராட்சத சூறாவளிகளைப் படம் பிடித்தது. இதில் வடதுருவத்தில் கண்ட சூறாவளி 2000கிமீ அகலமும், சாதாரணமாக பூமியில் தோன்றும் சூறாவளியின் கண்பகுதியை விட 20 மடங்கு பெரிதுமாகும். தென் துருவத்தில் சுழன்ற சூறாவளியின் கண் இன்னும் பெரிதாகும். அதாவது 8,000 கிமீ அகலமானதாகும்.

16. அறுகோண அமைப்பு

மிகப்பெரிய அறுகோண அமைப்பு விஞ்ஞானிகளிடையே புதிராக இருந்து வந்தது. கேசினி இது என்னவென்பதை படம் பிடித்துக் காட்டியது.

17. சனியின் பருவநிலை வகைகள்

சனிக்கிரகத்தின் துருவங்களில் எழும் பருவநிலைகள் பற்றி கேசினி தகவல்களை அளித்தது. வடதுருவத்தில் வசந்தகாலத்தில் 36 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை ஏற்படுகிறது. தென் துருவத்தில் இலையுதிர் காலத்தில் 63 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் ஏற்படுகிறது.

18. சனிக்கிரகம் சுற்றுவது எப்படி?

சனிக்கிரகம் ஒரு முறை சுற்ற 29.5 ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். ஆனால் இதில் பகல் இரவைக் கணிப்பது விஞ்ஞானிகளின் அறிவுக்கப்பாற்பட்ட விஷயமாக இருந்தது. காரணம் சனியின் வளிமண்டலத்தில் இருக்கும் அடர்தியான வாயுவே. கேசினி கிரகத்தின் ஒலி அலைகளை அனுப்பி சனிக்கிரகம் சுற்றுவது பற்றிய தகவலை அறிய உதவியது.

19. சனியிலிருந்து பூமி எப்படி தெரிகிறது?

வாயேஜர் மிஷன் பூமியை வெளிர் நீல புள்ளியாகக் காண்பித்தது. கேசினியும் பூமியிலிருந்து 1.5 பில்லியன் கிமீ தூரத்தில் இருந்த போது அங்கிருந்து பூமி எப்படி இருக்கிறது என்ற படத்தை அனுப்பியது. இதுவும் ஒரு புள்ளி போன்று தெரிந்தது.

20. வியாழன் அதன் உண்மையான நிறத்தில் எப்படி தெரிந்தது?

கேசினி சனியைச் சுற்றி வரும் அதே வேளையில் வளிமண்டலத்தின் பிற ராட்சத வாயுக்கிரகம் பற்றிய தகவல்களையும் சேகரித்தது. அப்படித்தான் வியாழன் கிரகத்தின் மிகப்பெரிய சிகப்புப் புள்ளியைப் படம் பிடித்தது கேசினி.

 

தமிழில்: முத்துக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x