Published : 27 Sep 2017 05:04 PM
Last Updated : 27 Sep 2017 05:04 PM

யானைகளின் வருகை 45: சமய மாநாட்டில் ஒலிக்காத வலசையின் குரல்

இதுவரை வாளையாறு, மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை, பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்தை ஒட்டியுள்ள கிராமங்கள், யானைகளின் வலசைப் பாதைகள், அதில் நடக்கும் விதிமீறல்கள் எல்லாம் பார்த்து வந்திருக்கிறோம்.

அடுத்ததாக காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகங்களில் காட்டு யானைகளுக்கு நடந்துள்ள தொந்தரவுகளை பட்டியலிடுவதோடு, மேற்கொண்டு நீலகிரி காடுகளை விரிவாக பார்வையிட உள்ளோம். இதுவரை கடந்து வந்த பாதைகளில் கானுயிர்களுக்கு இடையூறாக உள்ள சங்கதிகளை கொஞ்சம் விரிவாகவே பார்த்தோம்.

அதில் முக்கியமாக எட்டிமடையில் உள்ள கல்வி நிலையங்கள், மதுக்கரை, வாளையாறில் உள்ள சிமெண்ட் கம்பெனிகள், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குள் உள்ள ஆன்மிக மையங்கள், அதற்கு லட்சக்கணக்கில் பெருக்கெடுக்கும் பக்தர்கள், யோகி சிலை திறப்பு, பிரதமர் வருகை, தறிகெட்டு காட்டிலிருந்து ஊருக்குள் புகுந்த யானைகள் குறித்தெல்லாம் கூட பேசினோம்.

இவற்றைப் பற்றி பேசும்போதெல்லாம் கோவை குற்றாலத்தின் அடிவாரத்தில் சாடிவயலுக்கு முன்புறமே இருக்கும் காருண்யா பல்கலை மற்றும் ஜெபக்கூடங்கள் பற்றி ஏன் யாருமே பேசுவதில்லை. அதைப் பற்றி மீடியாக்கள் கூட பெரிதாக தொடுவதில்லை என்ற கேள்விகள் வாசகர்கள் மத்தியில் புறப்படுகின்றன. பிரதமர் வருகையின்போது அந்த யோகி சிலை திறப்பின் போது கூட ஏன் இந்த கல்வி நிலையத்தை பற்றி மட்டும் யாரும் கண்டுகொள்வதில்லை. அதற்கு என்னதான் உள்நோக்கம் என்று என்னிடம் நேரடியாகவே கேட்டிருக்கின்றனர்.

இது பற்றிய பிரச்சினை ஏதும் இப்போது இல்லையே, பிறகு எதற்காக அதைப் பற்றி எழுத வேண்டும். அது பிரச்சினையாக கிளம்பும் போதெல்லாம் எழுதியே வந்துள்ளது மீடியாக்கள். நானும் அதையே செய்துள்ளேன் என்று அவர்களுக்கு விளக்கமும் சொல்லியிருக்கிறேன். இப்போது இந்த யானைகளின் வருகை தொடர் எழுதின காலகட்டத்தில் கூட கோவை குற்றாலம், யோக மைய செய்திகள் கடை விரித்தபோது இதையே (காருண்யா) குறிப்பிட்டு கேள்வி கேட்டிருந்தார் ஒரு வாசகர்.

கோவை குற்றாலம், சாடிவயலில் நடக்கும் சூழல் கேடுகளை குறிப்பிடும்போது போகிற போக்கில் நல்லூர் வயலைப் பற்றியும் எழுதிச் சென்றுள்ளேன் என்பதுதான் உண்மை. ஆனால் அது அவ்வளவு திருப்திகரமாக, அழுத்தமாக இல்லை என்பதும் நம் வாசகர்களின் எதிர்வினை. அந்த எதிர்வினைக்காக இந்த நல்லூர் வயல், காருண்யா குறித்து கடந்த 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த நிகழ்வை ஒட்டி நான் எழுதிய செய்திக் கட்டுரை ஒன்றை சொல்லிச் செல்வது இந்த தொடருக்கு முழுமையைத் தரும் என நம்புகிறேன்.

கோவை குற்றாலத்திற்கு செல்லும் வழியில் அதற்கு முன்னதாக 3 கிலோமீட்டர் தொலைவிலேயே பரந்து விரிந்து கிடக்கிறது காருண்யா பல்கலைக்கழகம்.

திரும்பின பக்கமெல்லாம் கான்கிரீட் காடுகள்தான். இந்த கல்வி நிலையத்தின் இப்போதும் ஓடைகள் மறிப்பு, கிராமங்கள் அழிப்பு என சூழல்ரீதியான சர்ச்சைகள் வந்த வண்ணம்தான் இருக்கிறது. அதுவே அப்போது வேறு விதமாய் வெடித்தது.

இதன் அசல் பெயர் நல்லூர் வயல். கிறித்துவ மதபோதகரான டிஜிஎஸ். தினகரன் எப்போது இப்பகுதியில் தன் காருண்யா கல்லூரியைக் கட்டினாரோ அன்றிலிருந்து இந்த கிராமங்களின் சுய அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்து இந்து சமய மடாதிபதிகள் கிளர்ந்தெழுந்தார்கள். அவர்களுக்கு உறுதுணையாக இப்பகுதியில் உள்ள கிராம மக்களில் ஒரு பகுதியினர், இந்துத்துவா அமைப்பினரும் நின்றனர். நல்லூர் வயல் என்பது காருண்யா நகர் என்றாகி விட்டது.

அதையொட்டி காருண்யா அஞ்சல்நிலையம், காருண்யா தொலைபேசி நிலையம், காருண்யா காவல் நிலையம் என்றே பெயர் வழங்கப்படுகிறது. இத்துடன் மதமாற்றமும் நடைபெறுகிறது என்பதே இங்கு கிளர்ந்தெழுந்த மதக்காவலர்களின் குரலாக புறப்பட்டது.

அதற்காக தென் கைலாயப் பாதுகாப்பு மாநாடு ஒன்றை அந்த ஆண்டின் மே 30-ம் தேதி ஏற்பாடு செய்திருந்தனர். இந்த மாநாட்டிற்கு காஞ்சி சங்கராச்சாரியார் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட ஆதீனங்கள், மடாதிபதிகள் வந்திருந்தனர். அவர்களுடன் நூற்றுக் கணக்கான சாதுக்களும், சாமியார்களும் மட்டுமின்றி, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் திரண்டனர். முழுக்க, முழுக்க இவர்கள் காருண்யா கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகவே மாநாட்டில் முழக்கமிட்டார்கள்.

அப்படி முழக்கமிட்ட மாநாட்டு பொறுப்பாளர்கள் சிலரிடம், 'அப்படி என்னதான் கோபம்?' என நேரடியாகவே பேசினேன்.

''மதமாற்றம் தவிர, ஆதிகாலம் முதல் இங்கு வசித்து வரும் நல்லூர் பதி பழங்குடி மக்களை இங்கிருந்து வெளியேற்ற முயற்சி நடந்திருக்கிறது. அவர்களில் சிலர் கலெக்டரிடம் போய் முறையிட்டதால் அது தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டது. அதேபோல் உள்ளாட்சி அமைப்பை கைப்பற்றுவதற்காக கல்லூரியில் படிக்கும் வெளி மாநில, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1200 மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தனர். அது இப்பகுதியில் உள்ள பெரியவர்கள் தலையிட்டதில் நடக்காமல் போனது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இங்கு வசிக்கும் 1500 ஆதிவாசி மக்களை வெறும் 49 மக்கள் மட்டுமே வசிப்பதாக கணக்கு காட்டிவிட்டனர். இவர்கள் அளிக்கும் உணவுக்கும், ஒரு சில வேலைக்கும், உடைக்கும், காசுக்கும் ஆசைப்பட்டு தலித் குடும்பங்கள் பல கிறிஸ்துவ மதத்திற்கு தாவி விட்டன. தன் பணபலத்தாலும், அதிகார பலத்தாலும் இவற்றையெல்லாம் இங்குள்ள மதபோதகர்கள் சாதித்துக் கொண்டுள்ளார்கள்.

சுமார் 10 ஆண்டுகளாக இந்த நடவடிக்கைக்கு எதிராக நல்லூர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் பல போராட்டங்களும் செய்து பார்த்துவிட்டோம். ஆனால் இவர்களுக்கு ஆளும் தரப்பு, அதிகார தரப்பில் நல்ல செல்வாக்கு. எனவே யாரும் நடவடிக்கை எடுக்கத் தயராக இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களிலேயே சிறந்தது தென்கயிலை எனப்படும் வெள்ளியங்கிரி மலை. ஆண்டுதோறும் அங்கே சிவபக்தர்கள் லட்சக்கணக்கில் குவிகிறார்கள். அப்படிப்பட்ட இந்து சமய புராதான மிக்க இடத்திற்குத்தான் இப்படியொரு ஆபத்து வந்துள்ளது. சில ஆயிரம் ஏக்கர் நிலங்களை வாங்கிக் கொண்டு ஊரு பெயரையே மாற்றி, மதப் பிரச்சாரமும் செய்கிறார்கள். இதனால் இங்கு அமைதி இல்லாமல் போய்விட்டது. இதை தடுத்து நிறுத்தவே நாங்கள் இந்த போராட்டத்தை நடத்துகிறோம்!'' என சொன்னார்கள் இம்மாநாட்டை நடத்தியவர்கள்.

''நம் சமயத்தில் நடக்கும் தீண்டாமைக் கொடுமைதான் இம்மாதிரியான மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதை களைய முதல் முயற்சி எடுக்க வேண்டும்!'' எனக் கூறினார் அப்போது மாநாட்டில் கலந்து கொண்ட பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார்.

''நாங்கள் அவர்கள் செய்யும் சமூகப்பணிக்கும், கல்விப்பணிக்கும் எந்த வகையிலும் எதிரியில்லை. ஆனால் ஒரு பகுதியின் புராதனப் பெயரையே மறைத்து மாற்றிவிட்டு இவர்கள் இயங்குவதுதான் வருத்தமாக உள்ளது!'' என்றார் அப்போது இந்த மாநாட்டை நடத்திய ரங்கராஜ் என்பவர்.

இப்பகுதியின் கவுன்சிலராக அப்போது இருந்தவர் பேசும்போது, ''பஞ்சாயத்து ரெக்கார்டில் இதுவரை காருண்யா நகர்னு எதுவுமே இல்லை. ஆனுால பல ரேசன் கார்டுகளில் காருண்யா நகர் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அரசு கெஜட்டில் நல்லூர் வயல் என்றே உள்ளது. அதையே பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றமும் உத்தரவு போட்டிருக்கு. ஆனா ரேசன் கார்டு எடுத்துட்டு ஜாதி சர்டிபிகேட், வருமான சர்டிபிகேட் வாங்க போன அதிகாரிகளே சான்றிதழ் அளிக்க குழம்பிடறாங்க!'' என்றார்.

 

இது குறித்து காருண்யா நிர்வாகத்திடமே பதில் கேட்டபோது அவர்கள் யாரும் பதில் சொல்லவில்லை. இந்த கல்லூரி சார்ந்த சென்னை அலுவலகமான ஜெப கோபுரத்தை சேர்ந்த மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் பேசினார். ''இது பெரிதாக்கப்பட வேண்டிய விஷயமே அல்ல. தனி மனிதர் ஒருவர் எங்கள் நிறுவனத்திற்கு எதிராக செய்யும் வேலைதான் இது. அவர் குறிப்பிட்ட தொகையை எதிர்பார்த்தார். நாங்கள் தரவில்லை. எனவேதான் இப்படியெல்லாம் நடக்கிறது!'' என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ''இப்போதும் கூட நல்லூர் வயல் அப்படியேதான் இருக்கிறது. எங்கள் ஏரியாவுக்கு மட்டும்தான் காருண்யா நகர் என பெயர் வைத்துள்ளோம். சென்னையில் ஒரு ஏரியா அண்ணாநகர் என்றிருப்பதுபோலத்தான் இதுவும். காருண்யாவின் முகவரியிலே கூட நல்லூர் வயல் என்றே எழுதுகிறோம். பழங்குடியினர் வெளியேற்றம். மதமாற்றம் என்பதெல்லாம் சுத்தப் பொய். ஜாதி மதம் பார்க்காமல் அனைவரும் பிரார்த்தனை செய்வதுதான் எங்கள் நோக்கமே தவிர, மதமாற்றம் அல்ல. காருண்யா நகரில் சர்ச் கூட பெரிய அளவில் கிடையாது. இங்கே கோயில் கட்ட அனுமதி மறுத்ததாக சொல்லப்படுவதும் தவறான தகவல். இந்து சமய தலைவர்களுக்கும், உள்ளூர் பெரியவர்களுக்கும் கூட எங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை என நன்றாக  தெரியும். இந்த ஏரியாவில் மட்டும் 56 கிராமங்களுக்கு பிரசவ வசதிக்காக இலவச மருத்துவ உதவி செய்து வருகிறோம். ஆலாந்துறை கிராமத்தில் சகல வசதிகளுடன் இலவச மருத்துவமனை கட்டிக் கொடுத்திருக்கிறோம்!'' என்றெல்லாம் விளக்கினார்.

அன்று ஆலாந்துறை கிராமத்தில் (காருண்யாவிற்கு 2 கிலோமீட்டர் தொலைவு) நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜெயேந்திரர் காருண்யா என்ற பெயரையே உச்சரிக்கவில்லை. ''நான் வடகயிலை யாத்திரை சென்று வந்தவன். எனவே இங்கே அருளாசி வழங்க அழைத்தார்கள் வந்திருக்கிறேன். மற்றபடி மதம் மாற்றம் என்பது இங்கு மட்டுமல்ல; இந்திய அளவிலும் தடுக்கப்பட வேண்டியது. நம்ம குழந்தைகளை நாம் காப்பாத்திக்க வேண்டாமா? அதைத்தான் இங்குள்ள பெரியவங்க சில பேர் செய்யறாங்க. சில கிராமங்களில் ஜாதி இருக்கு. அது காலப்போக்கில் ஒழிஞ்சிடும். ஆனா அதை மிகைப்படுத்தி தூண்டி விடறது நம் அரசியல்வாதிகள்தான். அதனால் நம் மதத்தில் மனம் தடுமாறுவது, தமம் மாறுவது, அப்புறம் மனம் மாறுவது இயல்பாக உள்ளது!'' என்று நாசூக்காகவே பத்திரிகையாளர்களிடமும் ஜெயேந்திரர் பேசினார். 

இவ்வளவு பிரச்சினைகள் அப்போது நடந்தது. ஆனால் இங்கே காடுகள் அழிக்கப்பட்டது. நீரோடைகள் மறிக்கப்பட்டது. காட்டு யானைகள் மட்டுமல்ல; மற்ற வனவிலங்குகளுக்கும் தொந்தரவு ஏற்பட்டது என்ற விஷயத்தை அன்று யாருமே பேசவில்லை என்பதுதான் ஆச்சர்யம். இதில் வேடிக்கை என்னவென்றால் வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள யோகி சிலை திறப்பு விழாவுக்கு பிரதமர் வந்த போது எப்படி சர்ச்சைகள் கிளம்பியதோ; அதேபோல் இதே காருண்யாவிற்கு வாஜ்பாய் ஆட்சியின் போது (2000 ஆம் ஆண்டில்) மத்திய அமைச்சர் பங்காரு லட்சுமணன் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அதுவும் பெரிய அளவில் சர்ச்சை ஆனது. அதையொட்டி பல்வேறு குற்றச்சாட்டுகள் பங்காரு லட்சுமணன் மீது கிளம்பின. உட்கட்சி விவகாரமாகவும் அது வெடித்தது. அதன் தொடர்ச்சியாக அவர் பதவியிழந்த காட்சிகளும் கூட அரங்கேறியது.

ஆனால் அப்போதும் காட்டு யானைகள் வருகை, வலசைப் பாதை, நீரோடை மறிப்பு போன்ற விவகாரங்கள் பேசப்படவேயில்லை. அப்போது இருந்ததை விட தற்போது இந்த கல்வி நிலையம் பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கிறது. வெறும்  இன்ஜினீயரிங் கல்லூரியாக இருந்த இது இப்போது பல்கலைக்கழகமாக உயர்ந்து நிற்கிறது என்றால் எந்த அளவு வளர்ச்சி என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். அதனூடே கடந்த பத்து ஆண்டுகளுக்குள்தான் இங்குள்ள ஊர்களுக்குள் காட்டு யானைகள் புகுவதும், விளைநிலங்கள் அழிவதும், யானைகள் காலடியில் மனிதன் சிக்கி சாவதும் நடந்து கொண்டிருக்கிறது. அதையொட்டி யானை மனிதன் மோதல் விஷயத்தில் இந்த கல்வி நிலையமும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x