Published : 28 Sep 2017 10:56 AM
Last Updated : 28 Sep 2017 10:56 AM

அக்கறை ஆல்பங்கள்.. அசத்தும் பாடலாசிரியர்!

பொ

துவாக திரைப் பாடல் எழுதுபவர்கள் திரைப்பாடல் எழுது வதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். ஆனால், வடிவரசு, சமூக அக்கறையுடன் கூடிய தனி ஆல்பங்களுக்காகவும் தொடர்ந்து எழுதிவருகிறார். சமீபத்தில் இவர் எழுதிய ‘வானம் தாண்டி’ என்ற திருநங்கைகளுக்கான மூன்றாம் பாலின கீதம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதுவரை சமூக அக்கறையுடன் கூடிய எட்டு ஆல்பங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார் வடிவரசு. அவரிடம் பேசினோம். “சொந்த ஊர் திருவண்ணாமலை, திருவடத்தனூர் கிராமம். விவசாயக் கூலி குடும்பம். எங்கள் குடும்பத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரி நான். மிகவும் வறுமையான சூழலில் எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தேன். படிப்பை முடித்ததும் ஒரே சமயத்தில் பத்திரிகையாளர் பணிக்கும் ஐ.டி துறை பணிக்கும் வாய்ப்புகள் வந்தது. பத்திரிகையாளனாக பணியைத் தொடங்கினேன். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, அதிலிருந்தும் விடுபட்டு முழுநேர பாடலாசிரியர் ஆனேன்.

ஏன் எழுதக்கூடாது?

திரைப் பாடலாசிரியர்கள் ஏன் சமூகப் பிரச்சினைகள் குறித்த தனிப் பாடல்களை எழுதக் கூடாது என நான் யோசித்தேன். அதன் விளைவுதான் ‘தொப்புள்கொடி’ தொடங்கி, ‘வானம் தாண்டி’ வரையான எட்டு ஆல்பங்களுக்கு தனிப்பாடல்களை எழுதியது. முதல் படைப்பான ‘தொப்புள் கொடி’ ஆல்பத்தில், பெண்களின் பங்கு இல்லாமல் ஆண்களின் வாழ்வே இல்லை என்பதை அழுத்தமாகச் சொன்னோம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழர்களின் உரிமைக் குரலாக ‘ஜல்லிக்கட்டுடா’ என்ற ஆல்பத்தை உருவாக்கினோம். ஃபேஸ்புக்கில் மட்டுமே அதை ஐந்து லட்சம் பேருக்கு மேல் பார்த்தார்கள். மெரினா உள்ளிட்ட போராட்டக் களங்களிலும் அது ஒலித்தது. பெண்களுக்கு எதிரான தொடர் வன்முறைகளை எதிர்த்து உருவாக்கிய ‘மனிதா.. மனிதா..’ ஆல்பம் ஆண்களின் மனசாட்சியை உலுக்கியது.

விளிம்பு நிலை பெண்கள்

மகளிர்தினம் என்றாலே ஏன் இன்னும் சுனிதா வில்லியம்ஸ், சானியா மிர்சாவையே கொண்டாட வேண்டும்? நம்மைச் சுற்றி நமக்காக உழைக்கும் விளிம்பு நிலைப் பெண்களை கொண்டாடலாமே என்று நினைத்தோம். அப்படி உருவானது தான் ‘பெண்மீகம்’ ஆல்பம். அதில் நமக்காக, நம்மைச் சுற்றி உள்ள விளிம்பு நிலை பெண்களைப் போற்றிக் கொண்டாடினோம். தமிழகத்தில் நிலவும் மோசமான அரசியல் சூழலைக் கண்டித்தும், தகுதியற்ற நபர்களை ஓட்டுப்போட்டு தேர்வு செய்யும் மக்களைப் பார்த்தும் கேள்வி எழுப்பும் விதமாகவும் ‘ஓ.. மக்களே!’ என்ற பாடலை வெளியிட்டோம்.

தொடர்ந்து வெளியிடுவோம்

சென்னை தினத்தன்று ‘உங்கள் சென்னை’ பாடலை வெளியிட்டோம். அதில் சென்னையைத் தாயாகவும், நம்மை எல்லாம் அதன் பிள்ளைகளாகவும் உருவகப்படுத்தி, சென்னையே பாடுவது போல் உருவாக்கினோம். அதன் பிறகு, மூன்றாம் பாலினத்தோரின் மாற்றத்துக்காகவும் மேம்பாட்டுக் காகவும் ‘வானம் தாண்டி’ ஆல்பம் வெளியிட்டோம். அதைக் கேட்டவர்கள், மூன்றாம் பாலினத்தோர் மீதான தங்களின் முந்தைய பார்வை முற்றிலும் மாறிவிட்டதாகச் சொன் னார்கள்.” என்று சொன்ன வடிவரசு, “இதுபோல் சமூக அக்கறை கொண்ட படைப்புகளை தொடர்ந்து வெளியிடுவோம்.” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x