Published : 03 Aug 2017 02:24 PM
Last Updated : 03 Aug 2017 02:24 PM

யானைகளின் வருகை 4: கொன்றது யானையல்ல; அலட்சிய அதிகாரிகள்தான்

 

அந்தச் சிறுமி நித்யாவின் பெற்றோர் ஜெகதீசன்-சியாமளா சேலத்தைச் சேர்ந்தவர்கள்.

தன் குழந்தை தன் கண்முன்னே காட்டு யானையால் கொடூரமாக கொல்லப்பட்டதை துடிதுடிக்க இப்படி விவரித்தார் சிறுமியின் தந்தை:

''குழந்தைங்க ரொம்ப நாளா எங்கயாவது டூர் போகணும்னு சொல்லீட்டிருந்தாங்க. அதனால கோவை குற்றாலத்துக்கு வந்தோம். காலையில் ஏழரை மணிக்கெல்லாம் மினிபஸ் கோவை குற்றாலத்தை எட்டிடுச்சு. அங்கே பாரஸ்ட்டுக்காரங்க எட்டரை மணிக்கு மேலதான் அனுமதின்னாங்க. எங்க வண்டியில இருபது பேருக்கும் மொத்தமா பணத்தை வாங்கிட்டு டோக்கன் கொடுத்தாங்க. அங்கு காட்டு யானை இருக்கும்னு எல்லாம் எந்த எச்சரிக்கையும் செய்யல. அரைகிலோமீட்டர் தூரம் சோதனைச் சாவடியிலிருந்து நடந்து போயிருப்போம்.

அங்கே திருப்பத்தில் பாறை. அதை ஒட்டி மரம் ஒடிஞ்சு கிடந்தது மரம். எங்க பேச்சுக்குரல் கேட்டதும் அங்கே யானை ஒளிஞ்சு நின்னுருக்கும் போல. பேச்சு சுவாரஸ்யத்துல அது எங்களுக்குத் தெரியலை. எங்களை கிட்ட பார்த்ததும் அது துரத்த ஆரம்பிச்சுடுச்சு. ஆளுக்கொரு திசையில எங்கெ ஓடினோம்னு எங்களுக்கே தெரியலை. சின்னவனை தூக்கிட்டு அம்மா ஓட, மகளை இழுத்துட்டு நான்ஓடினேன். ஆனா என் பொண்ணு 'அம்மா'ன்னு என் கைய உதறீட்டு அம்மா பக்கமா ஓடினா. அதுலதான் அவ யானைகிட்ட மாட்டிட்டா.

நான் பொண்ணு அவ அம்மாகிட்ட ஓடியிருப்பான்னு நினைச்சுட்டுத்தான் பத்து பதினைஞ்சு அடி தூரம் ஒரு பள்ளத்துல ஓடி திரும்பி பார்க்கிறேன். என் கண்ணு முன்னாடி யானை அவளை அலேக்கா தூக்கி எறியறது தெரியுது. வாய் திறந்து கத்தினா யானை இங்கே பாய்ஞ்சிடும்ன்னு பக்கத்துல இருந்தவர் என் வாயை பொத்தறார். அங்கேயே பொண்ணை தூக்கி வீசி மிதிச்சுக் கொன்னுட்டு அரைமணிநேரத்துக்கு மேல அங்கேயே யானை நிற்குது. ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் பாரஸ்ட்டுகாரங்க வந்தாங்க.

வெடி போட்டு, துப்பாக்கி வெடியெல்லாம் வெடிச்சு யானையை விரட்டினாங்க. இறந்து போன என் பொண்ணை ஆம்புலன்ஸில ஏத்தி ஆஸ்பத்திரி அனுப்பினாங்க.

அங்கே பாதுகாப்பே இல்லை. அத்தனை பேரும் உயிரை கையில் பிடிச்சுட்டு இருந்தோம். நாங்க ஒரு தடவை கூட கோவை குற்றாலம் போனது இல்லை. அங்கே யானைகள் ஜாக்கிரதைன்னு போர்டு கூட இல்லை.

பாரஸ்ட்டுக்காரங்க தெரிஞ்சே கொன்னுட்டாங்க
  • எங்க பொண்ணை யானை தெரியாமத்தான் மிதிச்சுக் கொன்னுடுச்சு. அது மிருகம். அப்படித்தான் செய்யும். ஆனா பாரஸ்ட்டுக்காரங்க தெரிஞ்சே கொன்னுட்டாங்க.

எங்க பொண்ணை யானை தெரியாமத்தான் மிதிச்சுக் கொன்னுடுச்சு. அது மிருகம். அப்படித்தான் செய்யும். ஆனா பாரஸ்ட்டுக்காரங்க தெரிஞ்சே கொன்னுட்டாங்க. அங்கே கட்டணம் போட்டு வசூல் பண்ணி சுற்றுலா பயணிகளை அனுமதிக்கிறவங்களுக்கு அக்கறை வேண்டாமா!'' என்றார் ஆதங்கத்துடன்.

இந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு கோவை குற்றாலத்தில் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன. முன்பு 8 மணிக்கு திறந்து விடப்பட்ட கோவை குற்றாலம் தற்போதெல்லாம் 9.30 மணிக்கு மேல்தான் திறக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் செல்லும் முன்பே வேட்டைத்தடுப்புக் காவலர்கள் ஒரு முறை அப்பகுதியை ரோந்து வந்து காட்டு மிருகங்கள் தட்டுப்படாத பின்பே மக்களை அனுமதிக்கின்றனர்.

அதேபோல் வாகன வசதிகளை வனத்துறை அலுவலர்களே செய்துள்ளனர். பாதுகாப்புக்கு 10 பேருக்கு மேல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

என்றாலும் இப்போதும் கோவை குற்றாலத்திற்கு செய்தி சேகரிக்கச் செல்லும் போதெல்லாம் அந்தச் சிறுமியை யானை அடித்துக் கொன்ற இடத்தை பார்ப்பேன். பெருமூச்செறிவேன்.

  • யானை ஏன் அந்தச் சிறுமியைக் கொன்றது? யானைகள் ஏன் மனிதர்களை கொல்கிறது? உணவுக்காகவா? நிச்சயமாக இல்லை. பிறகு...? தற்காப்புக்காக..!

யானை ஏன் அந்தச் சிறுமியைக் கொன்றது? யானைகள் ஏன் மனிதர்களை கொல்கிறது? உணவுக்காகவா? நிச்சயமாக இல்லை. பிறகு...? தற்காப்புக்காக..!

.... 'தான் மனிதனை கொல்லாவிட்டால், மனிதன் முந்திக் கொண்டு ‘கொல்வான்!' என்று தொன்று தொட்டு யானைகள் அறிந்திருக்கின்றன. அந்த எண்ணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஊறி, அவற்றின் ஜீன்களிலேயே ஏற்றப்பட்டுள்ளன என்றும் கூட சொல்லலாம்.

ஒரு சிறுமியை யானை கொன்று விட்டது.

சிறுமிக்காக துயரப்படுவதும், அந்தக் கொடூர யானையை கொல்ல வேண்டும் என்ற ஆத்திரம் முகிழ்ப்பதுதான் உடனடி இயல்பாக இருக்க முடியும். ஆனால் சிறுமி கொடூரமாய் சாகடிக்கப்பட்ட வேளையில், கொடூரக்கார யானையின் பக்கம் நின்று பேசுவதில் என்ன மனிதாபிமானம் இருக்க முடியும்?

யானைகள் அப்படி ஒன்றும் வேண்டுமென்றே யாரையும் கொல்வதில்லை. சிறுமியை இழந்த பெற்றோர்களும் அதைத்தானே கூறினார்கள்?

மனித குலத்திற்கு அது அதிபயங்கர சம்பவம். ஆனால் காட்டு யானைகளுக்கு இது இயல்பு என்றாலும் கூட அவை இதை விரும்பிச் செய்வதில்லை.

கூட்டம், கூட்டமாக திரியும் காட்டு யானைகள் மந்தையில் ஒற்றை யானை பிரிந்து வந்து எந்த தவறும் செய்யாத மனிதர்கள் மீது பலப் பிரயோகம் அவை செய்வதுமில்லை.

தப்பித்தவறி ஒற்றை யானையிடம், ஒரு கூட்டத்தை வழிநடத்தும் கொம்பன் யானையிடம் எதேச்சையாக மாட்டிக் கொண்ட அபூர்வ கணங்களில்தான் இது நிகழ்கிறது. காட்டு யானைகள் பாசம் மிக்கவை.

அதிலும் தாய்ப்பாசம் என்பதும், குடும்பப் பாசம் என்பதை மனிதர்களை விடவும் கூடுதலாக செலுத்தக் கூடியவை. தம் கூட்டத்துக்கு உதவக்கூடிய மனிதர்களை கூட நேசத்துடன் அணுகுபவை. இப்படிப்பட்ட அனுபவம்தான் காட்டுயானை ஒன்றிடம் தூவைப்பதி கிராமத்தில் நான் தப்பிப்பிழைத்த சம்பவம். அதற்கு நேரெதிரீடானதுதான் கோவை குற்றாலத்தில் மூர்க்க யானையிடம் சிறுமி மாட்டிக் கொண்டு பலியான துயரம். இந்த இரண்டு சம்பவங்களே காட்டுயானைகளின் பால் ஒரு வித கரிசனத்தையும், இன்னொரு பக்கம் அதன் மீது அச்சத்தையும் விளைவிக்கின்றன.

அதை விட பரிதாபம் யானைகள் மரணிக்கும் சம்பவங்கள். அதிலும் ரயிலில் அவை சிக்கி உயிர் நீத்துக்கிடப்பதை காணும்போதெல்லாம் கசியாத நெஞ்சமும் கசிந்து விடும். வெடிக்காத மனமும் வெடித்து விடும்.

சமீப காலமாக ரயிலில் யானைகள் தொடர்ந்து அடிபட்டு இறப்பதை செய்தித் தாள்களில் படித்தும், தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தும், நேரில் சென்று தரிசித்தும் அனுதாபப் படுபவர்கள் பலருக்கும் கோவை மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் இது போன்ற காட்டுயானை- ரயில் மோதல் சம்பவங்கள் எப்போது ஆரம்பித்தது என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அது இன்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்புதான் நடந்துள்ளது என்பதை அறியும் போது இன்னமும் ஆச்சர்யமாக உள்ளது. அது, 'மகளை காப்பாற்றப் போய் தாயும் மகளும் பலியான சம்பவம்!' என்பதுதான் கொடுமை. இந்த தாயும் மகளும் வேறல்ல. இரண்டுமே காட்டு யானைகள்.

- மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in   

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x