Last Updated : 26 Aug, 2017 10:09 AM

 

Published : 26 Aug 2017 10:09 AM
Last Updated : 26 Aug 2017 10:09 AM

கற்கை நன்றே.. கற்கை நன்றே.. இருளர் பிள்ளைகளும் கற்கை நன்றே!

நா

டே 71 - வது சுதந்திர தினத்தை உற்சாகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரம். நாம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் புதுப்பேட்டை ஊராட்சி, சண்முகாநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் இருந்தோம். முழுக்க முழுக்க இருளர் சமூகத்துப் பிள்ளைகள் மட்டுமே படிக்கும் இந்தப் பள்ளியைத் தேடி நாம் சென்றதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

நாடோடி கூட்டங்களாக வாழும் இருளர் இனத்து மக்கள் பரங்கிப்பேட்டைக்கும், புதுப்பேட்டைக்கும் இடையில், கிடைத்த இடத்தில் தோப்புகளில் தேங்கிக் கிடந்தனர். இவர்களை ஓரிடத்தில் குடியமர்த்தியவர் பரங்கிப்பேட்டையில் போஸ்ட் மாஸ்டராக இருந்த சண்முகம். இவர்களுக்காக புதுப்பேட்டை ஊராட்சியில் பேசி இடம் வாங்கித் தந்தவர் என்பதால், அவரது பெயரிலேயே இது சண்முகாநகராக உருவானது.

உதயமானது ஆரம்பப் பள்ளி

சுனாமிக்கு முன்பு, பனை ஓலைக் குடிசைகளில் வசித்த இந்த மக்களுக்கு சுனாமியின் போது, ‘ப்ளஸ்’ தொண்டு நிறுவனம்தான் கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தந்தது. மிட்டா மிராசுகளுக்கு கைகட்டிச் சேவகம் செய்துகொண்டிருந்த இவர்களுக்கு சிறு படகுகள் வாங்கிக் கொடுத்து மீன்பிடித் தொழிலுக்கு பழக்கப்படுத்தியதும் இந்த நிறுவனம் தான்.

இந்த நிலையில், கல்வி அறிவே இல்லாமல் இருந்த இந்த மக்களின் குழந்தைகளுக்காக கடந்த ஆண்டு இங்கே ஆரம்பப்பள்ளி ஒன்று உதயமானது. பலரது கூட்டு முயற்சியால் கூடிவந்த இந்தப் பள்ளியில் இப்போது 47 குழந்தைகள் படிக்கிறார்கள். பள்ளிக் கூடம் என்றாலே தலைதெறிக்க ஓடும் இந்த சமூகத்தின் இத்தனை குழந்தைகளைக் கொண்டுவந்து பள்ளிக்கூடத்தில் உட்கார வைத்ததிலும் பலரது சாதனை இருக்கிறது.

பசங்ககிட்ட கடிவாங்கியிருக்கார்

கடந்த ஆண்டு ஏழு மாணவர்களோடு தொடங்கிய இந்தப் பள்ளியில் ஆண்டு இறுதியில், மாணவர் எண்ணிக்கை 18 ஆனது. தொடக்கத்தில், இங்கு தலைமை ஆசிரியையாக இருந்த சுமதி வெங்கடேசன், வீடு வீடாகப் போய் இருளர் பெண்களிடம் உட்கார்ந்து பேசி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வைத்தார். ஆனால், அவருக்குப் பிறகு வந்த தலைமை ஆசிரியர் ராஜூ, உதவி ஆசிரியர் வெங்கட்ராமன் ஆகியோருக்குத்தான் ஏகப்பட்ட சவால்கள். இவர்கள், வாகைசூடவா சினிமா பாணியில் பலவிதமான களேபரங்களைச் சந்தித்து மாணவர் எண்ணிக்கையை 47 ஆக உயத்தினர்.

தலைமையாசிரியர் ராஜு சொல்வதைக் கேளுங்கள், ”ஒவ்வொரு நாளும் வீடுவீடாகப் போய் பசங்கள ஸ்கூலுக்கு அனுப்பச் சொல்லி கேட்போம். அவங்களோட உரிமையைப் பறிக்க வந்த அசுரனா எங்கள நினைச்சுக்கிட்டு அவங்க பதில் சொல்வாங்க. தூண்டில் போடற இடத்துலயும், கடற்கரை மணல்லயும், காடுகள்லயும் பதுங்கி இருக்கும் பசங்கள பிடிச்சு அழைச்சுட்டு வருவோம். அப்படி அழைச்சுட்டு வர்றப்ப வெங்கட்ராமன் சார் பலமுறை பசங்ககிட்ட கடி வாங்கியிருக்கார்.

பயமில்லாம படிக்குதுங்க

எவ்வித நாகரிகமும் தெரியாமல் இருந்த இந்தப் பிள்ளைகளுக்கு முதலில், தன் சுத்தம் பேணும் முறையைத்தான் கத்துக் கொடுத்தோம். பல் துலக்குதல், குளியல், தலைசீவுதல், உடை அணிதல் என்று அனைத்தையும் ஒரே வருடத்தில் கற்றுக் கொண்டு விட்டார்கள்” பெருமையுடன் சொல்கிறார் ராஜூ.

“பள்ளிக்கூடம்னாலே எங்க பசங்களுக்கு ஆவாது. ஏன்னா, இதுக்கு முந்துன பள்ளிக்கூடத்துல அவங்களுக்கு கிடைச்ச அனுபவம் அந்தமாதிரி. முன்னாடி, புதுப்பேட்டை, வடக்குத்துறை, சின்னூர் இங்கெல்லாம் இருக்கிற பள்ளிக்கூடங்களுக்கு பசங்கள அனுப்பி வெச்சுப் பார்த்தோம். அங்க, மத்த பிள்ளைங்க இவங்கள கேவலமா பேசி அடிச்சி வெரட்டிடுவாங்க. அதுக்குப் பயந்துக்கிட்டு இவங்க பள்ளிக்கூடம் போகமாட்டாங்க. இந்த பள்ளிக்கூடம் வந்தப்பவும் அதே பயம்தான். ஆனா, இந்த சாரெல்லாம் அன்பா பழகி எந்த வேறுபாடும் காட்டாம நடந்துக்கிட்டதால இப்ப பசங்க பயமில்லாம பள்ளிக்கூடத்துக்குப் போய் படிக்குதுங்க” என்கிறார் சண்முகாநகரில் வசிக்கும் பவுன்.

அப்படியே, சுதந்திரதின விழாவிலும் என்ன நடக்கிறது என்று கவனித்தோம். விழாவில் அழகாய் திருக்குறள் சொல்லி விளக்கம் சொன்னாள் நாலாவது படிக்கும் ரேவதி. அற்புதமாய் கொடிப்பாடலைப் பாடியது ஐந்தாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் தலைமையிலான குழு. மகாத்மா காந்தியைப் பற்றி உரையாற்றினான் மதன்ராஜ் என்ற பொடியன். நாட்டின் விடுதலைப் பற்றி பேசுகிறான் சுதன். இதையெல்லாம் கண்கொட்டாமல் பார்த்துக் களிக்கிறது பெற்றோர் கூட்டம்.

பத்தாம் வகுப்பு வரை..

பள்ளிக்கூடத்தைக் கண்டு பயந்த இந்த இருளர் மக்கள் இப்போது கல்வியின் அருமையை உணர ஆரம்பித்திருக்கிறார்கள். இதே பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை வகுப்புகளை தொடங்க வேண்டும் என்பதுதான் இவர்களின் இப்போதைய வேண்டுகோள். ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்டு வேறு பள்ளிக்கு செல்ல இந்தப் பிள்ளைகள் தயங்குவார்கள். இதேபள்ளி என்றால் பிரச்சினையிருக்காது என்று இவர்கள் சொல்லும் நியாயத்தைப் புரிந்துகொண்டு பள்ளிக் கல்வித்துறைதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், தற்போதைய சூழலில் இந்தப் பள்ளியில் ஒரே ஒரு பீரோவைத் தவிர வேறு எந்த அடிப்படை வசதியும் இல்லை. அரசுப் பள்ளிகள் எல்லாம் அனைத்து வசதிகளுடன் கூடிய ஹைடெக் பள்ளிகளாக பரிணாமம் பெற்றுவரும் நிலையில், இவர் களுக்கும் அத்தகைய வசதிகளை ஏற்படுத்தித் தந்தால் முழுமைபெற்ற கல்வியைப் பெறுவார்கள்.

‘கற்கை நன்றே..’ என்பதை காலம் கடந்து புரிந்து கொண்ட இந்த இருளர்களின் குழந்தைகளுக்கு காலத்துக்கேற்ற கல்வியைத் தரவேண்டியது அரசாங்கத்தின் கடமை தானே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x