Published : 24 Aug 2017 10:22 AM
Last Updated : 24 Aug 2017 10:22 AM

பேச்சிமுத்து தமிழாசிரியர்.. கேரளத் தமிழர்களின் உரிமைக் குரல்!

கொ

ழிஞ்சம்பாறை பேச்சிமுத்து - கேரளத் தமிழர்களின் உரிமைக் குரல். கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச்செயலாளர். கேரளத்தில் பாலக்காடு உள்ளிட்ட 6 ஜில்லாக்களில் பொங்கல் பண்டிகைக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதும், இங்குள்ள அரசு அலுவலகங்களின் பெயர் பலகைகளில் தமிழுக்கும் இடம் கிடைத்ததும் இவரது இயக்கம் போராடிப் பெற்ற வெற்றிகள்.

கொழிஞ்சாம்பாறையில் 50 சதவீதம் பேர் தமிழர்கள் வசிக்கின்றனர். மொழிச் சிறுபான்மை என்ற அடிப்படையில் இங்குள்ள அரசுப் பள்ளிகளில் மொழிப் பாடமாக தமிழ் உள்ளது. அரசுப் பள்ளியில் தமிழாசிரியாக பணியாற்றியபோது 1978-ல் அரசு அலுவலர்களுடன் இணைந்து தமிழ் மன்றம் ஒன்றை நடத்தினார் பேச்சிமுத்து. குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட தமிழறிஞர்களை அழைத்துவந்து மன்றத்தில் பேசவைத்தார். அப்போதுதான், கேரளத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் போராட வேண்டியிருப்பதன் அவசியத்தை உணர்ந்தார்.

இதை தமிழ்மன்றக் கூட்டத்தில் விவாதித்தபோது, ‘இதையெல்லாம் கிளப்பினால் இனம், மொழி பேதங்கள் வரும்’ என்று சொல்லி மன்றத்திலிருந்த அரசு ஊழியர்கள் பின்வாங்கினர். அவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, கேரளத் தமிழர் உரிமைக்காக 1989-ல் கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கினார் பேச்சிமுத்து.

தமிழக - கேரள எல்லையில் உள்ள வடகரப்பதி புதுசேரி, கொழிஞ்சாம்பாறை உள்ளிட்ட 8 பஞ்சாயத்துகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் 33 தமிழாசிரியர் பணியிடங்களை ரத்துசெய்ய திடீர் முடிவெடுத்தது கேரள அரசு. இதனால், தமிழ் பிள்ளைகள் பாதிக்கப்பட்டதால் அரசை எதிர்த்து போராட்டத்தில் குதித்தது பேச்சிமுத்துவின் இயக்கம்.

அடுத்து நடந்தவைகளை விவரிக்கிறார் பேச்சிமுத்து. “மொழி சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் தாய் மொழியில் கல்வி கற்க உரிமை உள்ளது என்கிறது 1956-ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம். இதை எடுத்துச் சொல்லி, நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்று, கேரள அரசின் ‘தமிழாசிரியர் பணியிட ரத்து’ உத்தரவை திரும்பப்பெற வைத்தோம். அதன் பிறகு இங்கே தமிழர்களுக்கு நிறைய பிரச்சினைகள் வர ஆரம்பித்தன. அவைகளை எதிர்த்தும் போராடினோம்.

தமிழுக்கு உரிய இடம்

பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு ஆகிய 6 ஜில்லாக்கள் தமிழர்கள் மொழிச் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டவை. இங்குள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் தமிழிலேயே விண்ணப்பம் கொடுக்கலாம். இங்கு, தமிழ் தெரிந்தவர்கள் அலுவலக சிப்பந்திகளாக இருக்க வேண்டும். அலுவலக பெயர் பலகைகளில் தமிழும் இடம்பெற வேண்டும். இவைகள் சரியாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய மாவட்ட ‘அட்வைசரி கமிட்டி’ 4 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும் என்பதெல்லாம் விதிமுறை. ஆனால், இவற்றை முறையாக கடைபிடிக்காமல் தமிழோடு சேர்த்து தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டனர். இதை எதிர்த்து தமிழ் அமைப்புகளுடன் இணைந்து போராடி, அரசு அலுவலகங்களில் தமிழுக்கான இடத்தைப் பெற்றுத் தந்தோம்.

முன்பு, இங்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு அரசு விடுமுறை கிடையாது. இதற்காகவும் போராட்டங்களை நடத்தி, 2011-ல் இருந்து பொங்கலுக்கு அரசு விடுமுறையும் அறிவிக்க வைத்தோம்” என்று சொன்னவர், நடப்புப் பிரச்சினைக்கு வந்தார். “தொடர்ந்து தமிழர்களை இரண்டாம் தரமாக நடத்தி வருபவர்கள், மூலத்தரா அணையிலிருந்து தமிழர்கள் வாழும் பகுதிக்கு வரவேண்டிய தண்ணீரை இப்போது வேறு பக்கம் திருப்பிவிடுகிறார்கள். இதனால், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வறட்சி தாண்டவமாடுகிறது.

இதிலும் வெற்றி கிடைக்கும்

இதற்காக நாங்கள் நடத்திய போராட்டங்களைக் கண்டுகொள்ளாத கேரள அரசு, ஒரு வருடத்துக்கு முன்பு, பள்ளிகளில் மலையாளத்தைக் கட்டாயப் பாடமாக அறிவித்தது. இதனால், விருப்பம் இல்லாவிட்டாலும் தமிழ் மாணவர்களும் மலையாளம் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால், தமிழ் மாணவர்கள் இடைநிற்றல் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். எனவே, அரசு இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று இப்போது போராடுகிறோம். இதிலும் தமிழுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என்று சொல்லி நம்பிக்கையோடு நமக்கு விடைகொடுத்தார் பேச்சிமுத்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x