Published : 16 Aug 2017 11:02 AM
Last Updated : 16 Aug 2017 11:02 AM

‘காணாமல் போன அரி - கரி சண்டை’ - கவலைப்படும் கானுயிர் ஆர்வலர்

‘அ

ரியும் கரியும் பொரும் நெறிக்கு ஓர் துணையாய் அவர் மேல் சொரியும் திவலை துடைக்க’ - 13-ம் நூற்றாண்டில் பொய்யாமொழிப் புலவரால் பாடப்பட்ட இந்தப் பாடல் வரிகளின் பொருள் என்ன தெரியுமா? தலைவியைச் சந்தித்துவிட்டுச் செல்லும் தலைவன், காடு மலைகளைத் தாண்டி நீண்ட தூரம் பயணம் செய்யும்போது, சிங்கங்களும் யானைகளும் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளும் பகுதிகளைக் கடந்து செல்ல வேண்டுமே என தலைவி தனது தோழியிடம் கவலைப்படுவதாகச் சொல்கிறது இந்தப் பாடலின் பொருள்.

அபூர்வத்தைப் பார்க்க முடியுமா?

அப்படியானால் அந்தக் காலத்தில் யானைகளும் சிங்கங்களும் ஒரே காட்டுக்குள் வாழ்ந்திருக்கின்றன, ஒன்றோடொன்று அடிக்கடி மோதிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இன்றைக்கு எந்தக் காட்டிலாவது அந்த அபூர்வத்தைப் பார்க்கமுடியுமா?

elephant_lion.JPG

இலக்கியங்களில் மட்டுமல்ல.. புகழ் பெற்ற நமது கோயில்களிலும் அரண்மனைகளிலும்கூட யானை - சிங்கம் மோதல் காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. ஆனால் நிஜத்தில் இப்போது, ஆசிய யானைகளும் ஆசிய சிங்கங்களும் சந்தித்துக் கொள்ளும் காடுகள் இந்தியாவில் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை.

இந்தியாவின் மேற்கு விளிம்பில் குஜராத்தின் கிர் சரணாலயத்தில் மட்டும் ஆசிய சிங்கங்கள் வாழ்கின்றன.

யானைகளோ அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத இந்தியாவின் தென் திசையிலும் வடகிழக்கு திசையிலும் உள்ள மலைக் காடுகளில் வசிக்கின்றன. “இனி, இவைகள் நேருக்கு நேர் சந்திப்பதைப் பார்க்க மிருகக்காட்சி சாலைக்குத்தான் போகவேண்டும்” என ஆதங்கப்படுகிறார் கானுயிர் ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன்.

500 சிங்கங்கள், 30 ஆயிரம் யானைகள்

இதுகுறித்துப் இன்னும் பேசிய அவர்,‘‘முட்புதர் காடுகளும் திறந்தவெளி புல்வெளி காடுகளும்தான் சிங்கங்களின் இருப்பிடம். காடுகள் சார்ந்த எல்லா நிலப்பரப்பும் யானைகளின் வசிப்பிடம். எனினும் இவ்விரண்டும் இந்தியாவின் பல காடுகளில் சேர்ந்தும் வசித்துள்ளன. இந்தியக் காடுகளில் ஒருகாலத்தில் சிங்கங்களும் யானைகளும் வேட்டையாடிக் கொன்று குவிக்கப்பட்டன.

elephant_lion_3.jpg

தற்போது இந்தியாவில் சுமார் 500 ஆசிய சிங்கங்களே உள்ளன. ஆசிய யானைகளின் நிலையோ மனிதர்களால் நாளுக்கு நாள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள், ஒடிசா, ஜார்கண்ட், உத்தராகண்ட், அசாம் காடுகள், மற்றும் இமய மலைச் சாரல்களில் சுமார் 30 ஆயிரம் யானைகள் வாழ்கின்றன.

யானைகள் வசிக்கும் இந்தக் காடுகள் மட்டுமே இன்னமும் பல்லுயிர் சூழலுடன் பசுமையாய் இருக்கின்றன. யானைகள் குழுக்களாக வலசை செல்வதால் அவை செல்லும் வழி எங்கும் நம் மண்ணின் மரம், செடி, கொடிகளை உண்டு, தொடர்ந்து விதைப்பரவல் நடக்கச் செய்கின்றன.

நாம் செய்யும் தவறுகளுக்கு..

யானைகளின் வழித்தடத்தையும் அவை கண்டறியும் நீர் ஊற்றுக்களையும், யானையின் சாணத்தையும் சார்ந்தே உயிர் வாழும் பல உயிர்கள் காடுகளில் உண்டு. ஆனால், இன்று யானைகளின் வழித்தடங்களில் பெரும்பகுதியானவை, சாலை குறுக்கீடு, இரயில் பாதைகள், சுரங்கங்கள் என துண்டாடப்பட்டு கிடக்கின்றன. இதனால், யானைகளை மட்டுமில்லாமல், வளமிக்க காடுகளையும் நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த மோசமான மாற்றங்கள் எல்லாம் நாளைய இயற்கைச் சூழல், தட்பவெப்ப மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இன்று நாம் செய்யும் தவறு களுக்கு நாளைய நமது சந்ததிகள் பெரும் விலை கொடுக்க வேண்டி யிருக்கும்’’ என எச்சரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x