Published : 01 Aug 2017 02:19 PM
Last Updated : 01 Aug 2017 02:19 PM

யானைகளின் வருகை 2: தூவைப்பதி மண்ணுக்காரன் தோட்டத்தில் த்ரில் அனுபவம்

கோவை மாவட்டத்திலும் அதற்கு அப்பால் மேற்கு கோடி எல்லைகளில் கேரளத்து மென்மை மணம் கமிழும் மேற்கு தொடர்ச்சி மலைக் குன்றுகளில் திரும்பிய பக்கமெல்லாம் யானைகளின் கதைகளே வெகுவாக வியாபிக்கின்றன.

ஒரு பக்கம் இன்றளவும் மலை - மக்களான இருளர், மலசர், குரும்பர், முடுவர் ஜனங்கள் தங்களை காக்கும் 'ஆண்டவனாக' எண்ணி யானைகளை பாவிக்கும் அருமை.

மலைக் குன்றுகளிலிருந்து கீழிறங்கி வந்தால் அடிவாரப்பகுதிகளில், 'எம் விவசாயப் பயிர்கள், உடமைகள், வீடுகள் எல்லாம் இந்த யானைகளால் நாசமாகின்றனவே; உயிர்ச்சேதமும் விளகின்றனவே; இவற்றை சுட்டுக்கொல்லுங்கள்; கும்கிகளை விட்டு பிடித்து கூண்டில் அடையுங்கள்!' என குடியானவர்கள் உரத்துக் கூக்குரல் எழுப்பும் கொடுமை.

'யானைகளும் வாழவேண்டும்; விவசாயிகளும் செழிக்க வேண்டும்; இத்தனை காலம் இல்லாமல் யானைகள் ஊருக்குள் வருவதற்கு யானைகளின் வழிப்பாதைகளான வலசைப்பாதைகளை பெருந்தனக்காரர்கள் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியிருப்பதுதான் காரணம். அவற்றின் மீது நடவடிக்கை எடுங்கள்!' என வனவிலங்குகளுக்கு வக்காலத்து வாங்கும் இயற்கை விரும்பிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என சொல்லிக் கொள்ளும் ஒரு கூட்டம்.

இவர்களுக்குள் பல பக்கமும் முகமும்; வாலும் காட்டி வெவ்வேறு முகங்கள் காட்டும் அதிகாரிகள், அரசு இயந்திரங்கள். அதன் சப்தங்கள் மலையோர கிராமங்களில் நள்ளிரவில்தான் பிளிறல்களாக ஆரம்பிக்கின்றன. அப்படித்தான் தூவைப்பதி என்ற கிராமத்தின் மண்ணுக்காரன் தோட்டத்தில் இன்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் அதிகாலை 4 மணிக்கு காட்டு யானைகளின் பிளிறல் ஆரம்பித்தது.

கோவைக்கு மேற்கே தமிழக - கேரள எல்லையாக விளங்குவது ஆனைகட்டி. இதற்கு தென் கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளதுதான் இந்த தூவைப்பதி. இருளர் இன பழங்குடி மக்கள் வசிக்கும் இம்மலை கிராமத்திற்கு யானைகள் வசிக்கும் பகுதி என்ற செல்லப்பெயரே உண்டு. ஏனென்றால் அந்த அளவுக்கு காட்டு யானைகள் கண்டமேனிக்கு சுற்றித்திரியும் பிரதேசமாகும் இது. இங்கிருந்து 2 கிமீ தூரம் காட்டுப் பகுதியில் உள்ளது மண்ணுக்காரன் தோட்டம்.

ஆதிவாசி செட்டில்மெண்ட் நிலமான இங்குள்ள ஒதுக்குப்புறமான தோட்டத்து சாலையில் அதிகாலை 5 மணிக்கே தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச பக்கத்தில் உள்ள கிணற்று 'மோட்டார் -பம்ப்-செட் சுவிட்ச்' சை ஆன் செய்வது இந்த சாலையில் குடியிருப்பவர்களின் வழக்கம்.

அன்று அப்படி கிணற்றடிக்கு சென்ற பெண்ணுக்கு அருகில் காது சவ்வு கிழிகிற அளவு நெருக்கத்தில் பிளிறல் சத்தம் கேட்டது.

அவ்வளவுதான் அலறிப் புடைத்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடிவந்து கதவை தாழிட்டாள். ஒற்றை யானையின் பிளிறல் ஒலியை தவிர்த்து மேலும் பல்வேறு யானைகளின் பிளிறல் சத்தம் தொடர்ந்து கேட்க நடு,நடுங்கிப் போய் விளித்தது அவரின் குடும்பம் மொத்தமும். கிணற்றடியை ஒட்டியுள்ள தண்ணீர் தொட்டியை பார்த்தால் சுற்றிலும் யானைகள். அந்த தொட்டிக்குள் இரண்டு யானைக் குட்டிகளும் தத்தளித்துக் கொண்டிருப்பதும் பிறகுதான் தெரிந்தது. எனவே புழக்கடை வழியில் புகுந்து வேறு சாலைக்கு ஓடி அங்கிருந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவலர்கள், பொதுமக்கள், பத்திரிகை நிருபர்கள், புகைப்பட, வீடியோ கிராபர்கள் என்று நூற்றுக்கணக்கில் அங்கே திரண்டு விட்டனர்.

பளிப்பளீரென்று சூரிய கிரகணங்கள் வெளிப்பட்ட வேளை. கிணற்றடியில் உள்ள பெரிய தொட்டியில் நிற்பது ஒன்றிரண்டு யானைகள் அல்ல; 10-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான ஒரு பெரிய யானைகளின் கூட்டமே என்பதை வனத்துறையினர் புரிந்து கொண்டனர்.

மலைப்பிரதேசங்களில் தண்ணீர் இல்லாத நேரங்களில் மலையிலுள்ள மிருகங்கள் இங்கே விவசாயத்திற்காக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகளுக்கு வந்து தண்ணீர் அருந்துவதுண்டு. அப்படித்தான் அன்றும் அந்த யானைக்கூட்டம் வந்திருக்கிறது. அதில் இரண்டு குட்டிகள் தொட்டிக்குள் விழுந்துவிட்டன.

20 அடிக்கு 30 அடி நீள அகலவாக்கில் 6 அடி ஆழமே கொண்ட தொட்டி. தாய் யானைகள் இரண்டு. ஒன்று இன்னொன்றுக்கு மகள். இரண்டுமே அடுத்தடுத்து 10 நாள் இடைவெளியில் குட்டிகள் ஈன்றுள்ளன. அக்குட்டிகளும் 25 நாள், 35 நாள் வயதேயான நிலையில்தான் தாயுடன் தண்ணீர் அருந்த தொட்டிக்கு வந்து அதிலேயே விழுந்திருக்கின்றன.

ஆழம் அவ்வளவாக இல்லாத நிலையில் தண்ணீருக்குள் குட்டிகள் நீச்சல் அடிக்க, தாய் யானைகள் இரண்டும் அவற்றை தும்பிக்கையை விட்டு தூக்க முயற்சித்தன. ஆனால் குட்டிகள் வழுக்கிக் கொண்டு வெளியே வர மறுத்து, தொட்டி நீருக்குள்ளேயே நீச்சலடித்து விளையாடத் தொடங்கி இருக்கின்றன.

தாய் யானைகள் கொடுத்த பிளிறல் சிக்னலில் கூட்டத்து யானைகளும் குட்டிகளை தூக்கும் முயற்சியில் ஈடுபட, துளியும் வளைந்து கொடுக்கவில்லை குட்டிகள்.

அதன் விளைவு. வந்திருந்த கூட்டத்து யானைகள் பிளிறல் ஒலி எழுப்பி, அக்கானகத்தில் உள்ள யானைக் ட்டம் மொத்தத்தையும் வரவழைக்கத் தொடங்கி விட்டன.

இதையடுத்து இந்த யானைக் கூட்டத்தோடு மற்றுமொரு 9 யானைகள் கொண்ட கூட்டம் வந்து சேர்ந்து விட்டது. மதிய நேரம் பார்த்தால் 27க்கும் மேற்பட்ட காட்டுயானைகள். சுருக்கமாகச் சொன்னால் காட்டில் திரும்பின பக்கமெல்லாம் சிறிதும் பெரிதுமாக யானைகளே தெரிந்தன. கூட்டத்து யானைகள் அம்மா யானைகளுக்கு அரண் காக்க, அம்மா யானைகள் குட்டியை வெளியே எடுக்க முயற்சிக்க, குட்டிகளோ சூதுவாதின்றி தண்ணீருக்குள்ளேயே விளையாட, எஞ்சியிருக்கும் சில யானைகள் சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி இருக்கும் மனிதர்களை துரத்தி விட ஆரம்பித்தன.

வனத்துறையினர் பழங்குடியின மக்கள் உதவியோடு பட்டாசு வெடித்தும், விசில் மற்றும் மத்தள சத்தம் எழுப்பியும் யானைகளை விரட்டிவிட்டு, குட்டிகளை வெளியே எடுத்து விட முயற்சித்தனர்.

ஆனால் காட்டு யானைகள் விடுவதாயில்லை. தாய் யானைகள் குட்டிகளுக்கு அருகிலேயே காவல் இருக்க, 10க்கும் மேற்பட்ட யானைகள் தாய், மற்றும் குட்டிகளுக்கு காவல் இருக்க, ஆண் யானைகள் சில கிட்ட வரும் மனிதர்களை துரத்துவதும், அவர்கள் ஓடியதும் திரும்ப கூட்டத்தின் அருகே காவல் இருப்பதுமாக கண்ணாமூச்சி காட்டின.

இப்படியே அதிகாலை 5 மணி தொடங்கி மதியம் 2 மணி வரை நீண்டது. இந்த நேரத்தில் யானைகளுக்கு பசிக்கும் என்று புரிந்து கொண்ட மக்கள் கூட்டம் சுற்றிலும் இருக்கும், வாழை, தென்னங்கீற்று போன்றவற்றைப் பறித்து யானைகளுக்கு தூரத்திலிருந்தே வீசினர்.

அதை சாப்பிட்ட தாய் யானைகள் அங்கேயே குட்டிகளுக்கு தொட்டிகளுக்குள் நின்று பால் கொடுக்கும் அதிசயமும் நடந்தது. சுற்றி நின்ற யானைகள் அவ்வப்போது சில அருகே செல்வதும் வளர்ந்திருந்த வாழைகளை பறித்து உண்பதும், திரும்ப உரிய இடத்திற்கே வருவதுமாக இருந்தன.

இதையெல்லாம் கவனித்த பழங்குடி மக்கள் வேறொரு காரியம் செய்தனர்.

தொட்டிக்குள் குட்டிகளுக்கும், யானைகளுக்கும் படாதவாறு கற்களை வீசி படிக்கட்டு போல் ஆக்கினால் அதில் ஏறி குட்டியானைகள் வெளியே வந்துவிடும். அதை தாய் யானைகளும் கூட்டிச் சென்று விடும் என்று கணக்குப்போட்டு அதையே செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் கிட்ட போய் கல்லெறிவது அதற்குத்தான் என்பதை காட்டு யானைகள் உணர்ந்து கொண்டதுபோல் ஒதுங்கி நின்ற அதிசயக் காட்சியும் அப்போது நடந்தது.

அந்த வேளை. திடீரென்று ஒரு கல் குட்டியின் மீது பட்டதோ, தாயின் மீது பட்டதோ தெரியவில்லை. ஓங்கிய ஒரு பிளிறல் சத்தம் கேட்டது.

அவ்வளவுதான் காவலுக்கு நின்ற இரண்டு யானைகள் மனிதக் கூட்டத்தை நோக்கி பாய மக்கள் ஓடும் நிலை ஏற்பட்டது.

அதே சமயம் அங்கிருந்து சுமார் 3 மைல் தூரத்தில் ஒரு பள்ளத்தாக்கில் ஒரு யானையின் பிளிறல். பார்த்தால் தூரத்தில் பெரிய கொம்புகளின் மினுக்கத்துடன் பெரிய ஆண் யானை. அநேகமாக அதுதான் இந்த யானைக்கூட்டத்திற்கு வழிகாட்டி (கேப்டன்) ஆண் யானையாக இருந்திருக்க வேண்டும்.

தங்களுக்கு சில நூறு மீட்டர் தொலைவில் 24 க்கும் மேற்பட்ட யானைகள் இருந்தும் அச்சப்படாத பழங்குடியின இளைஞர்கள் 3 மைல்தூரத்தில் இந்த யானையின் கொம்பு மினுக்கத்தை கண்டதுதான் தாமதம்.

'டேய்…. கொம்பன் வந்துட்டான். ஓடுங்கடா…!' என அவர்கள் கத்திய கத்தல் அந்த கானகத்தில் அதிபயங்கரமாக எதிரொலித்தது. அதை தொடர்ந்து அவர்கள் மலைக்குன்றுகளை தவ்வி ஏறி குதித்து ஓடிப்பறப்பதும் ஆச்சர்யமாக இருந்தது.

'கொம்பன் மோசமானவன். கூட்டத்தோட சிக்னல் கிடைச்சா போதும் ஜெட் வேகத்தில் வந்துவிடுவான். தப்பிக்கவே முடியாது!' என பின்னர் அவர்கள் சிலாகித்தது இன்னும் பேராச்சர்யமாக இருந்தது.

நல்ல வேளை. அதற்குப்பிறகு கொம்பனுக்கு இந்த யானைக் கூட்டத்திடமிருந்து என்ன சிக்னல் கிடைத்ததோ. அங்கேயே நின்றுவிட, பழங்குடி இளைஞர்களும், மருத்துவர்கள் மற்றும் வனத்துறை குழுவும் தொட்டிக்குள் கற்களை நிரப்பும் வேலையை தூரத்திலேயே தொடர்ந்தனர்.

எண்ணி அரைமணிநேரம். ஓரளவுக்கு தொட்டி மட்டத்திற்கு படிக்கட்டு போல் கற்கள் நிரம்பின. குட்டி யானைகள் அக்கற்களின் மீது பிஞ்சுப் பாதங்களை வைத்து மெல்ல மெல்ல அதில் ஏறி வெளியே வர ஆரம்பித்தது. அந்த குட்டிகளின் பின்பக்கத்தை ஒரு தாய் யானை தன் துதிக்கையால் பிடித்து தள்ள ஆரம்பிக்க, மற்றொரு தாய் அதன் முன்புற சின்ன தும்பிக்கை பற்றி லகுவாக இழுக்க, வேடிக்கை பார்த்த மக்களிடம் ஒரே ஆரவாரம்.

'வந்துடுச்சு.. குட்டி வந்துடுச்சு…!' என்று ஒரு பக்கம் இளைஞர்களின் கத்தல்.

இன்னொரு பக்கம். 'ஏ… குட்டியோட காலைப் பாருடி. இட்லி மாதிரி இருக்கு. காதைப்பாருடி, கனகாம்பரமும், கத்திரிப்பூவும் கலந்து கட்டின மாதிரி இருக்கு!' என்றெல்லாம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்களிடம் சிலாகிப்பு.

முதல் குட்டியை தொட்டிக்கு மேலே ஏற்றிய தாய் யானை, திரும்பவும் இரண்டாம் குட்டியையும் ஏற்றிக் கொண்டது.

அதைத் தொடர்ந்து அந்த இரண்டு குட்டிளை தொட்டுத்தடவி, தழுவி காட்டுக்குள்ளே ஒரு தாய் யானை மட்டும் வழிநடத்திச் செல்ல மக்களும் அதைப்பின் தொடர்ந்தனர்.

அந்த யானைக்கு முன்னே சுமார் 30 மீட்டர் இடைவெளியில் யானைக் கூட்டமும் சென்று கொண்டிருந்தது. அந்த காட்சியை மூலைக்கு மூலை டெலி லென்ஸ், மற்றும் அதிநவீன கேமராக்கள் மூலம் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். குட்டிகள் இரண்டை அழைத்துக் கொண்டு மேற்கு நோக்கி நடக்கும் தாய் யானையின் பின்னாலேயே சென்ற படி படம் எடுத்துக் கொண்டிருந்தார் ஒரு தனியார் சேனல் நிருபர் அவிநாசிலிங்கம். அவர் செல்லும் தைரியத்தில் அவர் பின்னாலேயே எனது 'மினோல்டா' பிலிம் ரோல் கேமரா (18-55 லென்ஸ்) மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டே நகர்ந்தேன். பெரிய யானை (அதுதான் கூட்டத்து தலைவியாக இருக்க வேண்டும்) குட்டிகளை கூட்டிச் செல்லும்போது அதன் பின்பக்கம் மட்டுமே தெரிந்தது.

எப்படியும் ஒரு செகண்ட் யானை திரும்பாதா நம் கேமரா கண்களுக்கு விருந்தாகாதா என்ற ஏக்கத்துடனே நகர்ந்து கொண்டிருந்தேன். அந்த ஏக்கம் தீரும்படி அந்த தாய் யானையும் திரும்பியது. நானும் கிளிக்கி விட்டேன். ஆனால் திடீரென்று பார்த்தால் தாய் யானை வேகமாக எங்களை நோக்கி வர ஆரம்பித்து விட்டது.

யானைக்கும் எனக்குமான தூரம் இருந்தால் அதிகபட்சம் 30 அடி இருந்தாலே அதிகம். நான் திரும்பி ஓட எத்தனிக்கும் முன், அதிவேகமாக திரும்பி என்னைத் தாண்டி கேமராவுடன் ஓடிக் கொண்டிருக்கிறார் சேனல் நிருபர் அவினாஷ். அவர் நல்ல வளர்த்தி. கால்களும் நீளம். மலைக் குன்றுகளில் தவ்வி ஓடுவது அவருக்கு எளிதாக இருந்தது.

நான் திரும்பி ஓடியதில் ஒரு குன்றில் தடுமாறி விழுந்தேன்.

திரும்ப எழுந்தேன்.

மறுபடி இரண்டு மூன்றடி வைத்திருக்க மாட்டேன். திரும்ப விழுந்தேன்.

கேமரா கழுத்தில் இருந்தாலும், என் பாக்கெட்டில் இருந்த செல்போன் கீழே விழுந்தது. அதை எடுக்க நேரமில்லை. எடுத்தால் கதி அவ்வளவுதான். என்னை சுற்றிலும் இரைச்சல்…

என் பெயரைச் சொல்லியும் நண்பர்கள் கத்துகிறார்கள். அலறுகிறார்கள்.

'ஓ….. ஓடு...!'

'ஓடி வாங்க!' என்றெல்லாம் கூப்பாடு.

விழுந்து எழுந்து, திரும்ப ஓட, மறுபடி விழுந்து எழ, மூச்சிரைத்து ஒரு மலைக்குன்றின் மேலே தவழ, 'காசு… செல்போன்…!' என்று நின்று கத்துகிறார் அவினாஷ்.

அந்த நேரத்தில், 'செல்போனாவது… ஒண்ணாவது… ஓடு… ஓடு…!' மனம் அறிவுப்பூர்வமாக எம்பித் தள்ளியது ஆச்சர்யம்தான்.

ஓடி, ஓடி பாதுகாப்பான ஓர் இடத்தில் வந்து நின்று மூச்சு வாங்க திரும்பிப் பார்த்தால் நான் விழுந்த இடத்தில் கிடந்த செல்போனை நுகர்ந்தபடி அந்த தாய் யானை.

கூடவே அந்த குட்டிகள்.

'செல்போனை மட்டும் எடுக்க அங்கேயே நின்றிருந்தால் என்ன ஆகியிருக்கும். என் கதி அதோகதிதான்..!' மனம் முழுக்க நடுக்கம்.

சற்று நேரம் முகர்ந்து பார்த்தவிட்டு, 'பிழைத்துப்போ!' என்ற மாதிரி ஒரு பார்வையை வீசிவிட்டு குட்டிகளை கூட்டிக் கொண்டு சென்றது அந்த தாய் யானை.

அதன் பிறகு யார், யாரோ ஓடி வந்தார்கள்.

'செத்தீங்கன்னு முடிவு செஞ்சுட்டோம். நீங்க பொழச்சது ஆச்சர்யம்தான்!'

'குட்டி கூட இருந்ததாலதான் தப்பிச்சீங்க…!' என்றெல்லாம் குரல்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அன்று ஸ்பாட்டில் இருந்த கால்நடை மருத்துவர் மனோகரன் என்னிடம் வந்து சொன்னது இன்னமும் காதுகளில் ஒலிக்கிறது.

'சார்… இதேமாதிரிதான் காட்டு யானை ஒன்றிடம் சிக்கி எங்கள் கண்முன்னே ஒரு டாக்டர் செத்தார். அவரை அந்த காட்டு யானை ரெண்டாப் பிச்சுப்போட்டு மிதிச்சதை கண்ணு முன்னாடி பார்த்தேன். அந்தக் காட்சி இப்பவும் கண்முன்னாடி எனக்கு நிற்குது. இப்ப உங்களையும் அப்படித்தான் பார்க்கப் போகிறேன்னு நெனச்சேன். நீங்க பொழைச்சது தெய்வாதீனம். அது வெரி டேஞ்சர்.!'

அந்த டாக்டர் மனோகரன் தான் கடந்த ஆண்டு மிஷன் மதுக்கரை மகராஜ், அதற்கு முன்பும் பின்பும், பல்வேறு காட்டு யானைகளுக்கு மயக்க ஊசிகள் போட்டு பிடித்து கரோலில் அடைத்தவர். வைத்தியம் பார்த்தவர்.

- மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x