Published : 21 Jun 2019 18:50 pm

Updated : 21 Jun 2019 18:50 pm

 

Published : 21 Jun 2019 06:50 PM
Last Updated : 21 Jun 2019 06:50 PM

உள்ளங்கை நெல்லிக்கனி: 17 நிமிடங்கள், இரண்டே நடிகர்கள்.. ஓர் அழகிய குறும்படம்

17

குறும்படங்கள் எடுப்பது இப்போதெல்லாம் அவ்வளவு பெரிய கஷ்டமல்ல என்று சொல்லும் காலமிது. காரணம் யூடியூப் தொடங்கி உள்ளூர் தொலைக்காட்சிகள் வரை வரை குவிந்திருக்கும் ஏராளமான தளம். ஆனால், எல்லா குறும்படங்களும் சுவாரஸ்யமானதாக அமைந்து விடுவதில்லை.

உண்மையான திறமையுடன் எடுக்கப்படும் குறும்படம் நிச்சயம் கவனம் பெறாமல் போவதில்லை. அப்படி யூடியூப் தளத்தில் தனது உள்ளங்கை நெல்லிக்கனி குறும்படத்திற்கு பரவலான பாராட்டைப் பெற்று கவனம் ஈர்த்து வருகிறார் இயக்குநர் அரிகரசுதன்.


32 வயதான அரிகரசுதனுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி. வசந்தபாலனின் 'காவியத் தலைவன்' படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். தரமணி திரைப்படக் கல்லூரியில் படித்தவர்.

உள்ளங்கை நெல்லிக்கனி எனும் குறும்படம் இந்த செய்தியைப் பகிரும்போது 5,000 லைக்குகளைக் கடந்து பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்துக் கொண்டிருந்தது.

முதலில் குறும்படத்தைப் பார்த்துவிடுங்கள்..

 

17 நிமிடங்கள், இரண்டே நடிகர்கள், இருவருக்கும் இடையேயான உரையாடல் மட்டும்தான் ஒட்டுமொத்தப் படமும். அந்த உரையாடல் ஒருவர் மீது மற்றொருவர் கொண்டிருந்த பிம்பத்தை ஒவ்வொரு ஃபிரேமிலும் உடைத்துக் கொண்டே வருகிறது. நூலகராக வருபவர் பெயரோ அல்லது மாணவியின் பெயரோ நமக்குத் தெரியவரவில்லை. ரஞ்சித் என்ற கதாபாத்திரத்தின் பெயர் மட்டுமே தெரிகிறது. அதுவும் ஃபிரேமில் வராத கதாபாத்திரம். கடைசி நிமிடங்களில் படம் ஒரு த்ரில் உணர்வைத் தந்து காண்போரின் யூகத்துக்கு விடப்படுகிறது. ஆனால், உண்மையில் குறும்படத்தை உற்றுப் பார்த்தால் குறிப்பிட்ட ஓரிடத்தில் அந்த மாணவி நடந்தது என்ன என்ற கிட்டத்தட்ட சொல்கிறாள்.

அதேபோல் வாட்ஸ் அப் கதை ஒன்றை நூலகர் சொல்லி முடிக்க அந்த மாணவி என்ன என்னை பிளாக்மெயில் செய்கிறீர்களா என்று கேட்பதும் கதையின் முடிச்சை பார்வையாளர்களுக்கு சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.

 

மொத்தத்தில் ஒரு த்ரில்லர் படம் பார்த்த அனுபவத்தைத் தந்த உள்ளங்கை நெல்லிக்கனி இயக்குநர் அரிகரசுதனை 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்காக தொடர்பு கொண்டோம்.

இப்படி ஒரு குறும்படத்தை எடுக்க எது உந்து சக்தியாக இருந்தது?

நான் ஒருமுறை The woman who went at 6o clock என்ற சிறுகதையைப் படிக்க நேர்ந்தது. அது வெளிநாட்டுச் சூழலில் எழுதப்பட்ட கதை. அதுபோன்றதொரு சம்பவம் நம்மூரில் நடந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனைதான் இந்தக் குறும்படம். அந்த சிறுகதைக்கும் இந்தக் குறும்படத்துக்கும் உள்ள ஒற்றுமை இரண்டிலும் நாயகியாக வருபவர் மற்றொரு கதாபாத்திரத்திடம் தான் வந்து சென்ற நேரத்தை மாற்றிச் சொல்லச் சொல்வதே.

இருவர் இடையே நிகழும் உரையாடலை மட்டுமே படமாக்குவது என்பது சவாலாக இருந்ததா?

சவாலாக இல்லை. ஆவலாக இருந்தது. ஏற்கெனவே சொன்ன மாதிரி ஒரு புதிய விஷயத்தை ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவலே இந்தக் குறும்படத்துக்கு அடித்தளம்.

உள்ளங்கை நெல்லிக்கனி படத் தலைப்பிற்கான காரணம்?

உண்மையில் என் நாயகி உள்ளங்கை நெல்லிக்கனி அல்ல. கதையில் வரும் நூலகர் அந்தப் பெண்ணைப் பற்றி எல்லாத் தகவலும் தெரிந்ததுபோலவே காட்டுகிறார். ஆனால், அவர்கள் உரையாடல் அவர் அந்தப் பெண்ணை புரிந்து கொண்ட பிம்பம் வேறு அவளின் உண்மை பிம்பம் வேறு என்பதை உணர்த்துகிறது. அதனால் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தேன்.

உங்களின் கனவு என்ன?.. த்ரில்லர்தான் உங்கள் ஜானராக இருக்குமா?

எனது கனவு என் களத்தில் உச்சம் காண்பது. நிச்சயமாக நான் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைபடமாட்டேன்.

இயக்குநர் வசந்தபாலன் என்ன சொன்னார்?

அவருக்குப் படத்தை அனுப்பியுள்ளேன். வேறு வேலையில் இருக்கிறார். பார்த்துவிட்டு கருத்து சொல்வதாகக் கூறியிருக்கிறார்.

இவ்வாறு இயக்குநர் அரிகரசுதன் தெரிவித்தார்.

படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த நடிக்கை செம்மலர் அன்னத்திடம் பேசுகையில், ''நான் நடித்ததிலேயே இது மிகவும் வித்தியாசமான கதாபாத்திரம். முதலில் என்னிடம் கதையைச் சொன்னபோது இது எப்படி இருக்கப்போகிறது என்று எந்த ஐடியாவும் எனக்கு இல்லை. ஆனால், முழுமையான படத்தைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது.

 

 

இயக்குநர் அரிகரசுதன் மேற்கத்திய படத்தைப் போல் ஒரு குறும்படம் செய்யப்போகிறேன் எனக் கூறினார். நிச்சயம் அதைச் செய்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். அதேபோல் இதை எந்தப் புத்தகத்திலிருந்து தழுவி எடுக்கிறார் என்பதையும் முதலிலேயே குறிப்பிட்டார்'' என்றார் செம்மலர் அன்னம்.

 Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x