Last Updated : 09 Jun, 2019 07:27 PM

 

Published : 09 Jun 2019 07:27 PM
Last Updated : 09 Jun 2019 07:27 PM

மன அழுத்தத்தை விரட்டியது எப்படி?- நீட் தேர்வில் வென்ற அரசுப் பள்ளி மாணவிகளின் சக்சஸ் அனுபவங்கள்

சென்னையில் அரசுப் பள்ளியில் ஆங்கில வழியில் படித்த ஜீவிதாவும், பவானியும் நீட் தேர்வில் 605, 449 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி சுகந்தி தமிழ் வழியில் படித்து 383 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

ஓபிசி பிரிவில் ஜீவிதா 2,318-வது இடமும், பவானி 36,385-வது இடமும் பிடித்துள்ளனர்.  தாழ்த்தப்பட்டோர் பிரிவில் சுகந்தி 9,605-வது இடம் பிடித்துள்ளதால் மூவருக்கும் மருத்துவக் கனவு நனவாகியுள்ளது.

முதல் முறை நீட் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த இவர்கள் இரண்டாவது முறை தனக்குக் கிடைத்த வாய்ப்பில் பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டமைத்திருக்கிறார்கள். ஆனாலும், இந்த வெற்றி சாதாரணமானதல்ல. இரண்டு ஆண்டுகளை விழுங்கியிருக்கும் நீட் தேர்வுக்குத் தயாரான விதத்தையும், மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு சாதித்த அனுபவங்களையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

சென்ற ஆண்டு நீட் தேர்வில் ஒரு மதிப்பெண்ணால் மருத்துவக் கனவை இழந்தவர், இன்று அதே கனவுக்கு தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டார் பவானி.

இது குறித்து அவர் கூறுகையில், ''குரோம்பேட்டையில் உள்ள மகாகவி பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிச்சேன். 10-ம் வகுப்பில் 486 மார்க், பிளஸ் 2-வில் 978 மார்க்  எடுத்தேன்.  போன வருஷம் எழுதிய நீட் தேர்வில் 321 மார்க் எடுத்ததும் எம்பிபிஎஸ் படிக்க முடியும்னு ஆசை ஆசையா இருந்தேன். ஆனால், ஒரே மார்க் குறைவா இருந்ததால என் எம்பிபிஎஸ் கனவு தகர்ந்து போச்சு. 322 மார்க் எடுத்தவருக்கு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைச்சது. இதனால மனதளவுல ரொம்ப பாதிக்கப்பட்டேன். ஒரு மார்க்ல என் வாழ்க்கை இருட்டாயிடுச்சேன்னு கவலைப்பட்டேன்.

அப்போ பல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைச்சது. ஆனால், அதுக்கு என் மனசு இடம் கொடுக்கலை. மருத்துவம் மட்டுமே குறிக்கோள்னு முழு மூச்சா இருந்தேன்.

என் அப்பா ரமேஷ் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்றார். மாசம் 8 ஆயிரம் சம்பளம் வாங்கும் அவரால் என்னைத் தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்க வைக்க முடியாது. பிச்சை எடுத்தாலும் உன்னைப் படிக்க வைக்கிறேன்னு அவர் கலங்குனபோது என்னால அழாம இருக்க முடியலை.

அவருடன் வேலை செய்றவங்க எல்லாம் பொம்பளைப் பொண்ணை ஏன் அவ்வளவு படிக்க வைக்க கஷ்டப்படுற. சீக்கிரம் கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்கணும்ல. ஏதாவது கிடைச்ச படிப்புல சேரு. ஏழைங்களுக்கு எல்லாம் ஆசை இருக்கலாம். ஆனா, அதை அடைய முடியலன்னா வருத்தப்படாம கிடைச்சதை வைத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்னு அட்வைஸ் பண்ணாங்க.

இதை அப்பா என் கிட்ட சொன்னதும் இன்னும் என் மனசு வலிச்சது. 15 வருஷங்களுக்கு முன்னாடி அப்பா ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருந்தார். அப்போ நடந்த விபத்துல அவரோட கழுத்து எலும்பு உடைஞ்சிடுச்சு. 2 மாசம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில சிகிச்சை எடுத்துக்கிட்டார். அந்த விபத்துல இருந்து எங்க குடும்பம் மீண்டு எழவே சில வருஷங்களாச்சு. அப்புறம்தான் இப்போ ஹவுஸ் கீப்பிங் வேலைக்குப் போறார்.

இப்படி இருக்கிற குடும்பத்துல நான் முதல் தலைமுறையா சாதிக்கணும்னு நினைச்சேன். ஆனா, ஒரு மார்க்ல என் கனவு தகர்ந்ததும் உடைஞ்சு போனேன். கிடைச்சதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படறியேன்னு நிறையப் பேர் என் காதுபடவே பேசினாங்க. நான் அதைக் கண்டுக்கவே இல்லை.

மன அழுத்தம் என்னைத் தின்னுடக்கூடாதுன்னு கவனமா இருந்தேன். சோர்வு வரும்போதெல்லாம் எங்க விக்னேஷ் சார்கிட்ட பேசுவேன். அவர் உற்சாகம் கொடுப்பார். என்னால முடியாதான்னு எனக்கே சந்தேகம் வரும்போது அந்த யோசனையே வராத அளவுக்கு படிப்புல கவனம் செலுத்துனேன். படிக்கப் படிக்க, படிப்புக்குள்ளே ஆழமாகப் போக என் மன அழுத்தம் காணாமப் போச்சு.

போன வருஷம் எம்பிபிஎஸ் சீட் கிடைச்சாலும் ஏதோ ஒரு காலேஜ்ல கிடைச்சிருக்கும். ஆனா, இப்போ எனக்கு தமிழ்நாட்டின் டாப் காலேஜ்ல சீட் கிடைக்கும். அந்த அளவுக்கு மார்க் எடுத்திருக்கேன்.

என்னைத் திட்டுனவங்க, என்னால முடியாதுன்னு சொன்னவங்களுக்கெல்லாம் என்னோட பதில் என்னோட வெற்றிதான். இப்போ நான் பேசலை. என்னோட வெற்றி பேசும். ஏன்னா, இங்க வெற்றிக்குதான் சத்தம் அதிகம்.  என்னோட வெற்றி ஒரு வருஷம் தாமதமாகியிருக்கு. கொஞ்சம் தள்ளி நின்னு ஜெயிச்சிருக்கேன். மகப்பேறு மருத்துவராகி பெண்களுக்கான மகத்தான மருத்துவரா சேவை செய்வேன்'' நம்பிக்கை மிளிரப் பேசினார் பவானி.

தமிழகத்தில் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் 685. நான் 605 மதிப்பெண்கள் எடுத்திருக்கேன். நிச்சயம் எனக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று உறுதியுடன் கூறுகிறார் ஜீவிதா.

மேலும் ஜீவிதா கூறுகையில், ''சென்னை அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்  படிச்சேன். 10-ம் வகுப்பில் 497 மார்க், பிளஸ் 2-வில் 1161 மார்க் எடுத்தேன்.  நீட் தேர்வில் கடந்த வருஷம் 361 மார்க் எடுத்தேன். எம்பிபிஎஸ் சீட் கிடைக்கலை. தனியார் காலேஜ்ல படிக்கலாம்னு உதவிகள் கேட்டேன். எந்தக் கதவும் எனக்காகத் திறக்கலை. நர்சிங் படிச்சா உதவி பண்றேன்னு சிலர் சொன்னாங்க.

என்னால மருத்துவக் கனவை விட்டுக்கொடுக்க முடியலை. மன வருத்தம் அழுத்தமாகி உடைஞ்சு போய்ட்டேன்.  அனிதா மாதிரி பிரதீபா மாதிரி தப்பான முடிவெடுத்துடக் கூடாது, குறிப்பா அவசரப்படக்கூடாதுன்னு தெளிவா இருந்தேன். என்னோட எந்த முடிவும் என் குடும்பத்தைப் பாதிக்கக்கூடாதுன்னு நினைச்சேன். இன்னொரு முறை பயற்சி பண்ணலாம்னு முடிவெடுத்தேன். அப்பா, அம்மா நம்பிக்கை கொடுத்தாங்க.

அரசுப் பள்ளியில் படிச்ச பொண்ணுக்கு எம்பிபிஎஸ் கனவா? டெய்லர் பொண்ணுக்கு ஸ்டெதஸ்கோப் கேக்குதான்னு என்னைச் சுற்றி நிறைய நெகட்டிவ் பேச்சுகள். அதையெல்லாம் ஓரம்கட்டினேன். நெகட்டிவா பேசுறவங்களோட நட்பைத் தவிர்த்தேன். என்னைச் சுற்றி பாசிட்டிவ் மனிதர்களே இருக்குற மாதிரி பார்த்துக்கிட்டேன்.

நிறைய பயிற்சிகள் எடுத்துக்கிட்டேன். படிக்கிற முறையை மாத்தினேன். இப்போ ஜெயிச்சுட்டேன். நான் ரொம்ப திறமைசாலி, புத்திசாலி இல்லை. ஆனா, முயற்சியும் பயிற்சியும் இருந்தா யாரும் சாதிக்கலாம். அதுக்கு நானே உதாரணம்.

இப்போ யார் என்னை கிண்டல் பண்ணாங்களோ அவங்களே என்னைப் பெருமையா பேசுறாங்க. ஆர்வத்தோட படிச்சா எல்லோரும் சாதிக்கலாம். நீட் ஒண்ணும் நம்மை விழுங்குற பாடம் இல்லை. அந்த பேப்பர் நம்மளை என்ன செஞ்சுடப் போகுதுன்னு எதிர்த்து நின்னு படிச்சா பயம் விலகும். மன அழுத்தம் நீங்கும். நீங்களும் சாதிக்கலாம்'' என்கிறார் ஜீவிதா.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுகந்தி நீட் தேர்வில் 383 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். தமிழ் வழியில் படித்து நீட் தேர்வில் வென்ற அனுபவம் குறித்து அவரிடம் கேட்டோம்.

இது தொடர்பாக சுகந்தி கூறுகையில், ''திருவண்ணாமலை மாவட்டம் ராஜந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவள் நான். என் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிச்சேன். 10-ம் வகுப்பில் 457 மார்க், பிளஸ் 2-வில் 1118 மார்க் எடுத்தேன். போன வருஷம் நீட் தேர்வில் 164 மார்க் எடுத்தேன். எம்பிபிஎஸ் சீட் கிடைக்கலை. மனசு தளர்ந்து போச்சு.  தமிழ் மீடியத்துல படிச்ச என்னால் நீட் தேர்வில் சாதிக்க முடியுமான்னு எனக்குள்ளயே எழுந்த கேள்விக்கு பதில் கிடைக்காம தவிச்சேன். மன அழுத்தம் எனக்கும் வந்துச்சு.

அப்பா ராஜேந்திரன் அரசுப் பள்ளி ஆசிரியர். என் மூன்று அக்காக்களும், ஒரு தம்பியும் எனக்கு உற்சாகம் கொடுத்தாங்க. பிரச்சினையைப் பார்த்து ஓடிப் போகாம, அதை இனம்கண்டு பலவீனத்தை பலமா மாத்திக்கணும்னு எங்க சார் அட்வைஸ் பண்ணாரு. எல்லோரும் என்னை நம்பும்போது நான் ஏன் நம்பக்கூடாதுன்னு தோணுச்சு. முழு நம்பிக்கையோட சென்னைக்கு வந்தேன்.  நீட் தேர்வுக்கு கோச்சிங் சேர்ந்தேன்.

ஆரம்பத்துல ரொம்ப சிரமப்பட்டேன். தமிழ் மீடியத்துல படிச்சதால ஆங்கில மீடியம் என்னை பயமுறுத்துச்சு. சளைக்காமப் படிச்சேன். தமிழ் புத்தகம், ஆங்கிலப் புத்தகம் ரெண்டையும் பக்கத்துல வெச்சு அர்த்தம் புரிஞ்சுக்கிட்டேன். ஒரு வாக்கியம் கூட என்னால் ஒழுங்கா புரிஞ்சுக்க முடியாம அவஸ்தைப்பட்டேன். ஆனா, முயற்சியை விடவே இல்லை. தொடர்ந்து படிச்சேன்.  கடுமையா உழைச்சேன். தாழ்வு மனப்பான்மை வரக்கூடாதுன்னு, தேவையற்ற யோசனைகளுக்கு குட் பை சொன்னேன்.

வாய்ப்பு உருவாவதில்லை, உருவாக்கப்படுகிறதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். கடுமையான உழைப்புக்குப் பலனா 383 மார்க் நீட் தேர்வுல எடுத்தேன். போன வருஷம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் 344 மார்க் எடுத்தார். அவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில சீட் கிடைச்சது. எனக்கும் டாப் காலேஜ்ல சீட் கிடைக்கும். சுகந்தி எம்பிபிஎஸ் மேல ஒரு கோடு. மறக்காம போட்டுருங்க'' என்று புன்னகையுடன் முடித்தார் சுகந்தி.

நீட் தேர்வில் ஒரு முறை வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டவர்கள், பொதுப்பிரிவினராக இருந்தால் 25 வயது வரையிலும் ஓபிசி உள்ளிட்ட பிரிவுகளாக இருந்தால் 30 வயது வரையிலும் மீண்டும் நீட் தேர்வு எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

க.நாகப்பன், தொடர்புக்கு: nagappan.k@thehindutamil.co.in.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x