Published : 10 Mar 2018 03:51 PM
Last Updated : 10 Mar 2018 03:51 PM

யானைகளின் வருகை 141: பதிற்றுப்பத்து கூறும் ‘உம்பற்காடு’

‘யானைகள் குறித்து அறிந்து கொள்வதில் எல்லோருக்கும் போல எனக்கும் ஆசை!’ என்றுதான் தன் முன்னுரையில் பேசுகிறார் சதாசிவம்.

‘பன்னெடுங்காலமாய் மனிதர்களோடு வாழும் பேரினம் என்பதால் அதை அறிந்து கொள்வதில் ஆசை மேலும் அதிகரிக்கிறது. அதனால்தான் யானைகள் எதிர்கொள்ளும் உயிர்ப் போராட்டத்தை எழுதியும், பேசியும் வருகிறேன். அண்மைக் காலமாய் யானைகளைப் பற்றிய செய்திகளை ஊடகங்கள் பரப்புகின்றன. முழுமையற்று, முடிவுமற்று..!’ என்றும் அடுத்த வரியிலேயே விமர்சிக்கிறார் . நமக்கு ஆகப் பழமையான நாகரிகம் என்று பார்த்தால் ஹரப்பா, மொகஞ்சதாரோதான். அதிலிருந்து தொடங்குகிறது இவரது யானைகளின் பார்வை.

‘ஹரப்பா, மொஹஞ்சதாரோ பண்பாட்டுக் காலத்தில் அங்கு வாழ்ந்த மக்களுக்கு யானைகள் நன்கு பழக்கமான உயிரினங்களாக இருந்துள்ளன. சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யானைகளை அடிமையாக்கி போர்க்களம், விளைநிலம், வழிபாட்டுத் தலங்களில் பயன்படுத்தியதற்கான சான்றுகளை சிற்பங்கள், செய்யுள்கள், பாறை ஓவியங்களிலும், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆய்வுகளில் கிடைத்த நுண்கலை பதிவுகளின் வழியே அறிய முடிகிறது.

சிந்து சமவெளி நாகரிக காலத்தில் வாழ்ந்த திராவிட மக்கள் யானைகளோடு கொண்டுள்ள உறவின் நீட்சியாய் சங்க இலக்கியத்திலும் யானை அறுகு, அம்பலரி, இபம், இம்மடி, உம்பல், எறும்பி, ஐராவதம், ஓங்கல், கசம், குஞ்சரம், கூங்கைமா, சாமசம், சிந்தூரம், சூகை, தாராடம், துருமாரி, தெள்ளி, நூழில், பந்தகி, பென்னை, பேசகி, மறமலி, வாரணம்,வழுவை, வேழம் என 170க்கும் மேற்பட்ட பெயர்களைச் சூட்டியுள்ளார்கள்.

ஆண் யானைக்கு ‘களிறு’ என்றும் பெண் யானைக்கு ‘பிடி’ என்ற தனித்த பெயர்களும் உண்டு!’ என்று சொல்லிச் செல்லும் ஆசிரியர்,

‘கொங்குநாட்டின் தென்மேற்கிலுள்ள யானை மலைக்காடுகளைத்தான் (நாம் ஏற்கெனவே பார்த்த டாப் ஸ்லிப், வால்பாறை, பரம்பிக்குளம் காடுகள்) ‘உம்பற்காடு’ என்று பதிற்றுப்பத்து, ‘உம்பற்காட்டைத் தன்கோல் நிரீ இயினானெ’ன மூன்றாம் பத்துப்பதிகம் கூறுகிறது!’ என்று குறிப்பிடுகிறார்.

யானைகளின் பூர்வக்காடுகளை அழித்து வேளாண் தொழிலுக்கு மக்கள் பயன்படுத்தியதையும், வேளாண் நிலத்தில் பயிர்களை மேய்ந்த யானைகளை விரட்டியதையும், இரக்கமற்று கொலைகள் செய்ததையும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்ற பல பாடல்களில் காண முடிகிறது!’ என்று சொல்லும் இவர், யானை எவ்வளவு பாசக்கார விலங்கு என்பதற்கு ஒரு நெகிழ்வான சம்பவத்தை வெளிப்படுத்துகிறார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோயில் திருவிழா. கொடிக்கம்பம் நட ஒருநாள் முன்பாகவே ஆழமான குழி ஒன்றை தோண்டி வைத்து விட்டார்கள். இனி கொடிக்கம்பம் நாட்டினால் திருவிழா தொடங்கிவிடும்.

இருபது ஆட்கள் சேர்ந்து தூக்கினாலும் தூக்க முடியாத கனம் கொண்ட கொடிக்கம்பத்தை தூக்கி வர ஒரு யானை தயாராகிறது. அதற்கு கம்பம் தூக்க சைகை காட்டுகிறான் பாகன். யானையும் பாகனின் உத்தரவுக்கு கீழ்படிந்து கொடிக் கம்பத்தை தூக்கி வருகிறது. குழிக்கு அருகில் வந்ததும் கம்பத்தை தூர எறிந்து விட்டு பின்வாங்குகிறது யானை. பாகன் யானையை இம்சித்து திரும்ப திரும்ப கொடிக்கம்பம் தூக்க வைக்கிறான். குழிக்குள் நட வைக்க முயற்சிக்கிறான்.

யானையோ குழியை நெருங்குவதும், தூக்கிய கம்பத்தை எறிவதுமாக இருக்கிறது. பக்தர்களுக்கு யானை மீது கோபம். நல்ல நேரம் முடிவதற்குள் கம்பம் நாட்டிட வேண்டும். இந்த அறிவு கெட்ட யானை ஏன் அடம்பிடிக்கிறது? யோசித்த ஒருவன் அந்த குழியை எட்டிப்பார்க்கிறான். உள்ளே இரவு விழுந்த பூனைக்குட்டி ஒன்று கத்தும் திராணியற்று சுருண்டு கிடந்தது தெரிந்துள்ளது.

பூனைக் குட்டியை அப்புறப்படுத்தியதும், பாகனின் உத்தரவு இன்றியே கொடிக்கம்பத்தை தூக்கி நடுகிறது. திரும்பிய யானை பூனைக்குட்டியைப் பார்த்தது. உயிர் வரம் தந்த யானையை விட உலகில் எந்தக் கடவுளும் இல்லை என்பது போல் கத்துகிறது பூனை.

இந்த இடத்தில் தமிழ் மன்னன் அதியனால் வளர்க்கப்பட்ட யானைக்குண்டான புறநானுற்றுப் பாடலை கண்முன் கொண்டு வருகிறார் பாருங்கள்:

‘போர்க்களத்தில் யானை-நீர்க்குளத்தில் யானை

ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழா அவின்

நீர்த்துறை படியும் பெருங்களிறு போல

இனியை பெருமழ எமக்கே மற்ற தன்

துன்னுருங்கடா அம்போல

இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே!’

மன்னன் அதியமானால் வளர்க்கப்பட்ட யானை ஒன்று போர்க்களத்தில் எதிரிகளை வீழ்த்தி விட்ட நீர் நிரம்பிய குளத்தில் விளையாடுகிறது. அதைக் கண்ட சிறுவர்கள் யானையின் மீது தண்ணீரை தெளித்தும், அதன் வெண்ணிறத் தந்தங்களைக் கழுவியும் மகிழ்கிறார்கள். வீரஞ்செறிந்த யானையோ சிறுவர்களின் மகிழ்ச்சி ததும்பும் செயலை விரும்பி ஏற்று அமைதியாக அவர்களோடு உறவாடுகிறது.

ஒரு சமயம் போரில் எதிரிகளோடு களமாடிக் கொண்டிருக்கையில் அதியமானை சந்திக்க ஒளவையார் வருகிறார். வெஞ்சினம் மாறி கனிவான பார்வையோடும், இனிமையான சொற்களோடும் தம்மிடம் உரையாடியதை கடுஞ்சினத்துடன் போரிட்ட யானை நீர்நிலையில் சிறுவர்களைக் கண்டதும் அமைதியுற்று அச்சிறுவர்களோடு அகங்கனிந்து விளையாடியதை ஒப்பிட்டு, ‘யானையடா தம்பி நீ அதியமான்!’ என்று ஆரத்தழுவுகிறார் ஒளவையார்.

வெறும் நாற்பது பக்கங்களில் அடங்கும் இந்த நூல் சங்க கால யானைகளை மட்டுமல்ல, சமகாலத்தையும் கோபமாகப் பேசுகிறது.

காடழிப்புக்கு பின்னால் உள்ளது நுட்பமான ஆதிக்க அரசியல். அதில் ஜீவிக்க முடியாது தவிக்கிறது யானைகள். அதைப் புரிந்து கொள்ளாத அரசியல்வாதிகளின் அறிவிப்புகள், கோரிக்கைகள், வேண்டுகோள்கள், எச்சரிக்கைகள், அறிவியல்பூர்வமற்ற நடவடிக்கைகள் சிக்கலை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகிறது.

அண்மையில் ஒரு விவசாய சங்கத்தின் தலைவர் பேசுகிறார்:

‘வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தால் கடந்த பத்தாண்டுகளில் காடுகளிலுள்ள விலங்குகளின் எண்ணிக்கை எக்கச்சக்கமாய் பெருகி விட்டது. அவற்றுக்கு தேவையான உணவும், நிலமும் பற்றாக்குறை ஆகி விட்டதால் நாட்டுக்குள் வந்து அட்டகாசம் செய்கின்றன. பயிருக்கும், மனித உயிருக்கும் சேதம் விளைவிக்கின்றன. யானை, புலி, கரடி போன்ற கொடிய விலங்குகளை காட்டு எல்லையிலேயே வனத்துறையினர் சுட்டு விரட்ட வேண்டும். காட்டு மாடு, மான், பன்றி, மயில், கீரி, குரங்கு போன்ற விலங்குகளை விவசாயிகளே கொன்று அழிக்க விட அனுமதிக்க வேண்டும். புலிகள் புகலிடம் போன்ற வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை காட்டுப்புறத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மனிதர்கள் வசிக்கும் நாட்டுப்புறத்தில் பயன்படுத்தக்கூடாது.

தமிழக சட்டப்பேரவையில் ஒரு மக்கள் பிரதிநிதி பேசுகிறார்:

‘காட்டுப்பகுதியில் வாழும் மனிதர்களை யானை, புலி, சிறுத்தை, கரடி, பன்றிகள் தாக்குகின்றன. தாக்க வரும் விலங்குகளை நான் தாக்கினாலோ, கொன்றாலோ என் மீது வழக்குப் போடுகிறார்கள். யானை தாக்கினால் அதன் மீது வழக்குப் போடுவீர்களா?’ என்கிறார். மற்றவர்கள் சிரிக்கிறார்கள். விவசாயிகள் சொல்வது போல் காடுகளில் யானைகளின் எண்ணிக்கை பெருகி விட்டது. அதனால்தான் காடு கொள்ளாது அவை ஊருக்குள் வருகின்றன என்று பலரும் நினைக்கிறார்கள்.

உண்மையில் 1900 ஆம் ஆண்டில் இரண்டு லட்சத்திற்கும் மேலான யானைகள் இந்தியக் காடுகளில் இருந்தன. தற்போது முப்பத்தி ஐந்தாயிரத்துக்கும் குறைவான யானைகள் வாழும் நாடாக இந்தியா உள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் மட்டும் 87 சதவீதம் ஆசிய யானைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அறிவியலாளர்கள் மதிப்பிடுகிறார்கள்.

மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்ட சமூக அமைப்பால் குறிப்பாக சுரண்டும் வர்க்கத்தை பாதுகாக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பால் மனித இனம் மட்டும் பாதிப்பதில்லை. இயற்கையின் முக அமைப்பை முற்றிலும் சிதைந்து வெறும் முண்டமாய் கிடத்தி, கனிம வளங்களை உறிஞ்சி, அதனை விற்றுக் காசாக்கி மூலதனம் பெருக்க உலக முதலாளியம் ஒவ்வொரு நொடியும் இயங்குவது பற்றி நம்மில் எத்தனை பேர் கவலைப்படுகிறோம்.

முதலாளித்துவ கார்ப்பரேட் கொலைக்கரம், விளைநிலங்களை புதைத்துவிட்டு ‘மீத்தேனை’ எடுக்கிறது. அவசரச் சட்டங்களை அமலாக்கி நிலங்களை அபகரிக்கிறது. அணு உலை நெருப்பில் குளிர் காய்கிறது. மலையின் உயிர்களைக் கொன்று பிறப்பின் ரகசியங்களை ஆராய்கிறது. வானத்தில் மிதந்தபடி பூமியின் வளத்தை களவாடுகிறது. வெப்பத்தில் உருகும் பனிக்கட்டி போல் கரைந்து காணாமல் போகும் இயற்கையை மீட்க ஒலிக்க வேண்டிய குரலை, விலங்குகளை விரட்ட, பறவைகளை அழிக்க, பூச்சிகளை நசுக்க, புழுக்களை மிதிப்பதற்காகக் கொடுக்கிறோம்.

இந்த சூழலில் இயற்கையின் ஒரு பகுதியான யானைகள் எவ்வளவோ மேல். எஞ்சிய தம் வாழ்விடங்களுக்காக போராடுகின்றன. பல்லுயிர் இருத்தலை பன்னெடுங்காலமாய் பேசும் மொழி மரபு கொண்டவர்கள் நாம்., ஆதி உயிர்களைப் பாதுகாப்பதும், அவைகளை வாழவிடுவதும் அறிவுடமையாகும்!’ என்று மனித குலத்திற்கு அறைகூவலே விடுக்கிறார் சதாசிவம்.

- மீண்டும் பேசலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x