Published : 21 Mar 2018 08:36 AM
Last Updated : 21 Mar 2018 08:36 AM

சீன, ரஷ்ய அதிபர் தேர்தல்: உலக நாடுகளின் பொய் முகங்கள்

ரண்டு நாட்கள் இடைவெளியில், இரண்டு மிகப் பெரிய நாடுகளில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது. சீனா, ரஷ்யா. பல ஒற்றுமைகள் பளிச்சென்று தெரிகின்றன.. இரண்டுமே ‘பொதுவுடைமை’(!) நாடுகள்; இரண்டிலுமே, தற்போதைய அதிபரே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இவ்வளவுதானா...? இன்னும் உள்ளனவா...? பார்ப்போம். அதற்கு முன்னதாக, சில உண்மைகளைப் பார்த்து விடுவோம்.

நமது நாட்டில் உள்ளது போல, ஜனநாயகக் குடியரசு ஆட்சி - இந்த இரு நாடுகளிலுமே இல்லை. அதிலும் சீனாவில், கேட்கவே வேண்டாம். ஒரு கட்சி ஆட்சி முறைதான் இங்கு. ஜனநாயக உரிமை கேட்டு இளைஞர்கள் வீதிக்கு வந்து போராடினால், தயவு தாட்சண்யமின்றி; ‘புல்டோசர்’ ஏற்றிக் கொல்லத் தயங்காத ஆட்சி.

இது போதாதென்று தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங், நாட்டின் ‘நிரந்தர’ அதிபராகத் தொடர்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டார். ஒரு சலசலப்போ சிறு முணுமுணுப்போ கூடக் கேட்கவில்லை!! இதே நிலைமை ஏதேனும் ஒரு சிறிய நாட்டில் நடந்து இருந்தால்...? மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்காக, அமெரிக்கா, சீனா, ரஷ்யா மூன்றும் உள்ளே பாய்ந்து இருக்கும். ஐக்கிய நாடுகள் சபையும் தன் பங்குக்கு சகட்டு மேனிக்கு தடைகளை விதித்து இருக்கும். இது எதுவுமே சீனா விஷயத்தில், நடந்தது இல்லை; நடக்கவில்லை; நடக்கப் போவதும் இல்லை.

இரு முறைக்கு மேல் அதிப ராக முடியாது என்று இருந்த சட்டத்தை, தன் ஆணைப்படி நடக்கிற நாடாளுமன்றம் மூலம் மாற்றி அமைத்து, சீனாவின் முடிசூடா மன்னராகத் தன்னை வரித்துக் கொண்டு விட்டார் ஜி ஜின்பிங். சரி... சீனாவுக்காக, அப்படி என்னதான் சாதித்து விட்டார் ஜின்பிங்..?

எப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார தாராளமயமாக்கலில் இறங்கினார். அப்படி யும் சீனாவின் பொருளாதாரம், ‘வெளியில் சொல்லிக் கொள்கிற அளவுக்கு’ அத்தனை வலுவாக இல்லை என்பதற்கான அறிகுறி கள் தென்படத் தொடங்கிவிட்டன. சீனாவில் நகரம் - கிராமம் இடைவெளி பெருகி வருவதாகவும், கிராமப்புறப் பொருளாதாரம் நாளுக்கு நாள் நலிவடைந்து போய்க்கொண்டு இருப்பதாகவும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. நாட் டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் தேய்ந்து கொண்டே வருவதும் தெரிகிறது. ஆனாலும் ஜின்பிங், ஆரவார மாக நிரந்தர அதிபர் ஆகிறார்.

ரஷ்யாவில் என்ன நிலைமை...?

நான்காவது முறையாக வெற்றி பெற்று அடுத்த 6 ஆண்டுகளுக்கு ரஷ்ய அதிபர் பதவி யைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார் விளாடிமிர் புதின். சீனா அளவுக்கு இல்லை என்றாலும், ரஷ்யாவிலும், ஜனநாயக நெறிமுறைகள் இன்னமும் முழுமையாக செயல்பாட்டில் இல்லை. தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தல், எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது?

சதுரங்க விளையாட்டில் உலக ‘சாம்பியன்’ ஆகத் திகழ்ந்த ரஷ்ய வீரர் ‘கேரி காஸ்பரோவ்’, இதனை ‘தேர்தல்’ என்று அழைப்பதையே எதிர்க்கிறார். "ரஷ்யா வில் பதிவான ஒரே ஒரு நேர்மையான ஓட்டு - புதின் உடையதுதான்" என்கிற காஸ்பரோவ், ரஷ்யாவில் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் தலைவராக வும் இருக்கிறார்.

‘அயல் நாட்டு அரசியல்.. எப்படிப் போனால் நமக்கென்ன..?’ என்று இருந்துவிட முடியுமா..? இரு நாட்டு அதிபர்களுமே, ஆக்கிரமிப்பில் நாட்டம் கொண்டவர் களாய், அத்துமீறித் தாக்குதல் நடத்துவதை ஆதரிப்பவர்களாய் இருப்பதுதான் மிகப் பெரிய சோகம். ‘பனிப் போர்' காலம் முடிவுற்ற பின், ‘சோவியத் யூனியன்' சிதறுண்ட பிறகு, சில பத்தாண்டுகளாக ‘அடக்கி வாசித்த’ ரஷ்யா, மீண்டும் தனது ஆதிக்க மனப்பான்மையை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டது. ‘உக்ரைன்’ சமீபத்தில் சிரியா.... எல்லாம், விளாடிமிர் புதின் ஆற்றிய ‘சேவை’. சீனாவைப் பற்றியோ, சொல்லவே வேண்டாம். வட கொரியா, பாகிஸ்தான், தென்சீனக் கடல் என்று அங்கெங்கினாதபடி எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.

இரண்டுமே நமக்கு அண்டை நாடுகள். ஆகவே ‘நேரடி’ பாதிப்பு மிக அதிகம். வறுமை ஒழிப்பு, தொழில் வளர்ச்சி, கட்டுமானப் பெருக்கம், கல்வி, சுகாதார மேம்பாடு ஆகியவற்றுக்குச் செல்ல வேண்டிய நிதியை, ‘பாதுகாப்புக்கு’ ஒதுக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் ஆளாகிறோம்.

உலக அமைதி, மண்டல ஒத்துழைப்பு போன்ற சொற்கள் எல்லாம், பொருள் இழந்து போய் நீண்ட காலமாகி விட்டது. சர்வ தேச அமைப்புகள் எல்லாமே, வல்லமை பொருந்திய நாடுகளின் கைப்பொம்மையாக, அவர்களின் ஏவலுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன. இந்த நிலையில் உலக நாடுகள் என்ன செய்து விட முடியும்...?

‘கரடி, வலம் போனால் என்ன..? இடம் போனால் என்ன...? நம் மீது பாய்ந்து குதறாமல் இருந்தால் சரி...’ என்கிற மனோ நிலைக்கு வந்து விட்டன உலக நாடுகள் அத்தனையும். அதனால்தான், ஜின்பிங், புதின் ஆகிய இருவரையும் வாழ்த்துவதற்கு வரிசையில் காத்துக் கிடக்கின்றனர் உலகத் தலைவர்கள்.

வாருங்கள், நாமும் வாழ்த்துவோம். வாழ்க ஜின்பிங்! வாழ்க புதின்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x