Published : 16 Feb 2019 11:53 AM
Last Updated : 16 Feb 2019 11:53 AM
ஜம்மு காஷ்மீர், புல்வாமா தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கி வரும் வேளையில், உயிரிழந்த ஒவ்வொரு வீரரின் கதையும் நம் நெஞ்சில் வலியை ஏற்படுத்துவதாக உள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த குரு 10 நாட்கள் சென்று தனது பெற்றோரைப் பார்த்துவிட்டு வந்து பணியில் இணைந்தது ஒரு விதிவசமான நாளில்... ஜவான் எச்.குரு (33), விருப்ப ஓய்வில் செல்வதெனவும் மட்டூருக்கு அருகில் குடிகேரே குடியிருப்புக்குச் சென்று அங்கேயே வாழவும் திட்டமிட்டிருந்தார் என்ற தகவலும் இப்போது தெரியவந்துள்ளது.
ஆனால், இனி அதற்கு வாய்ப்பு இல்லை. வியாழக்கிழமை ஸ்ரீநகர் அருகே உள்ள புல்வாமாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 40 சிஆர்பிஎப் வீரர்களில் அவரும் ஒருவர்.
இறுதிச்சடங்கு செய்வதற்காக அவரது உடலைப் பெறும்பொருட்டு மிகவும் அதிர்ச்சியோடு காத்திருக்கிறது அவரது குடும்பம். உயிர்த் தியாகம் செய்த ஜவான், துணி சலவைக் கடை நடத்தி வரும் ஹொன்னையா மற்றும் சிக்கொலம்மா தம்பதியினருக்கு மூத்த மகன். சிஆர்பிஎப்பில் இணைந்தது 2011-ல். அவர் கலாவதி என்ற பெண்ணை 10 மாதங்களுக்கு முன்தான் திருமணம் செய்திருந்தார்.
இதுகுறித்து குருவின் நண்பர் மூர்த்தி கூறுகையில், ''நண்பன் குரு கடந்த பத்து நாட்களாக எங்களோடு இருந்துவிட்டு மீண்டும் சென்று பணியில் இணைந்தது இந்த விதிவசமான ஒரு நாளில்தான்.
கிராமத்தில் சமீபத்தில்தான் ஒரு வீடு கட்டியுள்ளார். விருப்ப ஓய்வு பெற்று இங்கேயே வந்து தன் பெற்றோரை பார்த்துக்கொள்ள வேண்டுமென்பது அவரது விருப்பம்'' என்றார்.
குருவின் இறப்புச் செய்தி கிராமத்தை வந்தடைந்தபோது, குடிகேரே காலனி மக்கள் மட்டுமல்ல சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து சோகத்தில் மூழ்கியிருக்கும் குருவின் பெற்றோர், அவரது மனைவி, மற்றும் இரண்டு சகோதரர்களான ஆனந்த் மற்றும் மாது ஆகியோருக்கு ஆறுதலளிக்க வருகின்றனர்.
ஆனந்த், காவல்துறையில் உள்ளூர் ரோந்துப்படையில் பணியாற்றி வருகிறார். இச்செய்தி கேட்டதால் உருக்குலைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இறுதிச் சடங்குக்கான நிலம்
துணை ஆணையர் என்.மன்ஜூஸ்ரீ, மாலவள்ளி வட்டாட்சியர் கீதா, மாண்டியா தொகுதி எம்.பி.எல்.ஆர்.ஸ்ரீவராமே கவுடா மற்றும் பலரும் மறைந்த சிஆர்பிஎப் வீரர் குருவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் வழங்கினர்.
இறுதிச்சடங்கு செய்ய அவர்களுக்கு சொந்தமாக ஒரு இடம் இல்லை என்பதை உள்ளூர் கிராம சபையைச் சேர்ந்தவர்கள் ஆறுதல் அளிக்க வந்திருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
அப்போது துணை ஆணையர் மஞ்ஜூஸ்ரீ அருகிலுள்ள பல்வேறு அரசு நிலங்களைப் பார்வையிட்டு கிராமத்துக்கு வெளியே தேங்காய் சந்தைப் பகுதி அருகே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து 2 ஏக்கர் நிலங்களை குருவின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற வழங்கியுள்ளார்.
சிஆர்பிஎப் வீரரின் உடல் விமானத்தில் பெங்களூரு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து பின்னர் சாலை வழியாகவே கிராமத்திற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்லப்பட்ட ஜவானின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மனைவிக்கு வேலை
சென்னராயப்பட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, ''கலாவதிக்கு அரசு வேலை வழங்கப்படும். அதற்காக மாண்டியா மாவட்டத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் உயிரிழந்த ஜவான் மனைவியின் கல்வித் தகுதிகள் குறித்து விசாரிக்கக் கூறியுள்ளேன்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT