Published : 06 Feb 2019 12:43 pm

Updated : 06 Feb 2019 12:43 pm

 

Published : 06 Feb 2019 12:43 PM
Last Updated : 06 Feb 2019 12:43 PM

டெல்லி கட்சிகள் தமிழகத்திடம் இருந்து கற்க வேண்டும்: கூட்டாட்சிக்காக குரல் கொடுக்கும் கார்கா சாட்டர்ஜி

மேற்கு வங்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா சிட்பண்ட் குழுமம் ரூ.4,000 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இதனை, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்க போலீஸார் விசாரித்தபோது முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் தற்போது கொல்கத்தா காவல் ஆணையராக உள்ள ராஜீவ் குமாருக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியது.

இதுதொடர்பாக விசாரிக்க கடந்த 3-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றபோது மாநில போலீஸார் தடுத்து நிறுத்தி, சிறைபிடித்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.


ஆணையருக்கு ஆதரவாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 3 நாட்களாக 'ஜனநாயகத்தைக் காப்போம்' எனும் பெயரில் தர்ணாவில் ஈடுபட்டார். இந்நிலையில், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதன்பின், மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

சிபிஐ அதிகாரிகள் சிறைபிடிப்பு, மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் ஆகியவை, கூட்டாட்சி குறித்தும் மத்திய அரசின் அதிகாரங்கள் குறித்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து மொழியுரிமை மற்றும் கூட்டாட்சி குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வரும் வங்க மொழிப் போராளி கார்கா சாட்டர்ஜியிடம் பேசினோம். 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் 'ஜனநாயகத்தைக் காப்போம்' போராட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சி முறை என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் மிக முக்கியமான, அடிப்படை அங்கம். இதுவே அரசியலமைப்புச் சட்டத்தின் புனிதமான பகுதி. இந்தியா பல மாநிலங்களின் ஒன்றியம், அப்படித்தான் இந்தியா உருவானது என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியிருக்கையில், ஒன்றிய அரசால் மாநில உரிமைகள் மீறப்படும்போது, இந்திய ஒன்றியம் என்ற கருத்துரு பல சவால்களைச் சந்திக்க நேரிடுகிறது. சிறப்பு போலீஸ் நிர்வாகச் சட்டத்தின் கீழ், பிரதம அலுவலகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஐ, மாநில சட்டம்-ஒழுங்கு, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிறது. இது ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைப்பதற்குச் சமம்.

தேர்தல் நெருங்குவதால், இந்த நேரத்தில் மம்தா பானர்ஜி மீது குறிவைக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை இணைத்துப் பேரணியை நடத்தியதாலேயே மம்தா மீது இத்தகைய தாக்குதல் தொடுக்கப்படுகிறது. மம்தா பானர்ஜி கூட்டாட்சியைக் காக்க தர்ணாவில் ஈடுபட்டார். ஒரு அரசியல் கட்சித் தலைவராக அவர் தேர்தலுக்காகக் கூட இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட முகுல்ராய் கடந்த ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அதன்பிறகு அவரை சிபிஐ விசாரிக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக பாஜக அனைத்து அமைப்புகளையும் சிதைத்து விட்டது. இப்போது இந்தியாவின் கூட்டாட்சி முறையையும் சிதைக்கிறது. அதனால், நமது கூட்டாட்சி முறையைப் பாதுகாப்போம் என்ற நிலையை மம்தா பானர்ஜி எடுத்திருக்கிறார். ஏனென்றால், அது பலரின் தியாகங்களால் உருவான ஒன்று.

மம்தா பானர்ஜியை சர்வாதிகாரி என பாஜக கூறுகிறதே? எதிர்க்கட்சிகள் வரும்போது அவர்களின் ஹெலிகாப்டர்களை தரையிறங்க விடுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

மம்தா பானர்ஜி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை வாங்க நினைக்கிறார். பாஜக கோவாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பணத்தின் மூலம் வாங்கியது. கர்நாடகத்திலும் அவ்வாறு முயன்று தோற்றுப்போனது. இது சர்வாதிகாரம் இல்லையா? பாஜக ஒரு பாசிசக் கட்சி. வன்முறையை நிகழ்த்தும் கட்சி. பாசிசவாதிகளான சாவர்க்கர், கோட்சே வழியில் செயல்படும் பாசிச பாஜக தான் இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்கிறது.

பாஜக அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் தவறாகப் பயன்படுத்துவதாக நினைக்கிறீர்களா?

ஆமாம். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. எதிர்க்கட்சிகள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஒரு காரணம். எதிர்க்கட்சிகளை இணைத்து மம்தா பேரணி நடத்தினார். அதற்காக அவர் மீது தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. மற்றொன்று, பாஜக அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றி அதனைச் சிதைக்கப் பார்க்கிறது. அதன்மூலம், இந்திய ஒன்றியத்தை சர்வாதிகாரமாக மாற்றுவதற்கு முன்னர், மாநில அதிகாரங்களைக் காக்க வேண்டும்.

சிபிஐ அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

சிபிஐ அதன் நம்பகத்தன்மையை எப்போதோ இழந்துவிட்டது. பாஜகவை மட்டும் குற்றம் சாட்டவில்லை. காங்கிரஸ் ஆட்சியிலும் இம்மாதிரி நடைபெற்றிருக்கிறது. சிபிஐ-யை ஒரு அரசியல் கருவியாக மத்தியில் இருக்கும் அரசு பயன்படுத்துகிறது. இம்மாதிரியான அதிகாரம் மத்திய அரசுக்குத் தேவைதானா என கேள்வியெழுப்ப வேண்டிய தருணம் இது. மத்திய அரசு மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டு வந்தால், எந்த அமைப்பு அதனை விசாரிக்கும்? சிபிஐ தவறாகப் பயன்படுத்தப்படுவதன் மூலம் மாநிலங்களின் இறையாண்மை தகர்க்கப்படுகிறது. மாநிலங்களின் இறையாண்மை தகர்க்கப்பட்டால், இந்திய ஒன்றியத்தின் இறையாண்மையும் சிதைந்து போகும்.

அப்படியென்றால், சாரதா சிட்பண்ட் போன்ற ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில், எப்படி சுதந்திரமான விசாரணையைக் கோருவது?

இது மிக முக்கியமான பிரச்சினை. நான் சிபிஐ-யின் தனிப்பட்ட அதிகாரிகள் குறித்து கூறவில்லை. அவர்களை ஆட்டுவிக்கும் அரசியல் தலைவர்களைக் குறித்துப் பேசுகிறேன். தன்னளவில் சுதந்திரம் பெற்ற சிபிஐ போன்ற அமைப்புகளை அரசியல் கட்சிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்போது தான் இத்தகையை பிரச்சினைகள் எழுகின்றன. மாநிலங்களில் சிபிசிஐடியை அரசுகள் தவறாகப் பயன்படுத்தினால், மக்கள் அந்த அரசாங்கத்தைத் தூக்கி எறிவார்கள். இதுதான் முக்கியம். அரசியல் அதிகாரம் மக்களிடத்தில் தான் இருக்கிறது. அதேபோன்று, சிபிஐ தவறாகப் பயன்படுத்தப்படும்போது எதிர்கட்சிகள், அதனை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

இந்த விவகாரம் கூட்டாட்சி குறித்த பரவலான விவாதத்தை எழுப்பியிருப்பதாக நினைக்கிறீர்களா?

விவாதத்தை எழுப்பியிருக்கிறதா என்றால், அதைச் சொல்ல இன்னும் காலம் தேவைப்படுகிறது. 1950-ல் நமது அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து மாநில அதிகாரங்கள் பெரும்பாலானவை பொதுப்பட்டியலில் சென்றுவிட்டது. மாநில அதிகாரங்கள் குறைந்துகொண்டே வருகிறது. அதாவது, மத்திய அரசின் அதிகாரங்கள் அதிகரித்திருக்கிறது.

இந்தியாவின் கூட்டாட்சி முறை சிக்கலானது, அதனை முழுவதுமாக கூர்ந்துநோக்குவதற்கான காலம் வரும். திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி மத்திய - மாநில அரசுகளின் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய ராஜமன்னார் கமிட்டியை அமைத்தார். அதன் பரிந்துரைகள் மிக முக்கியமானவை. அண்ணாவும் கருணாநிதியும் கூட்டாட்சி குறித்து பேசியதை டெல்லியில் உள்ள அரசியல் கட்சிகள், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்டவை சிந்திக்க வேண்டும்.

சித்தராமையாவும் கூட்டாட்சிக்காக குரல் எழுப்பியிருக்கிறார். பரவலான குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. கூட்டாட்சியை வலியுறுத்திய தமிழகத்தில் இப்போது அண்ணாவின் பெயரில் இயங்கும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக வரும் செய்திகள் வருத்தத்தை அளிக்கின்றன. நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. நம்மிடையே ஒற்றுமைதான் இருக்க முடியும். ஒன்றுபோல் இருக்க முடியாது.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

தவறவிடாதீர்!    சாரதா சிட்பண்ட்மம்தா பானர்ஜிகார்கா சாட்டர்ஜிசிபிஐதிரிணாமுல் காங்கிரஸ்பாஜகநரேந்திரமோடிSaradha chitfundMamata BanerjeeGarga chetterjeeCBITrinamool congressBJPNarendra modi

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x