Published : 29 Nov 2018 06:03 PM
Last Updated : 29 Nov 2018 06:03 PM

நம்பிக்கை முகங்கள்: 1- ந.வசந்தகுமார்

டெல்டா மாவட்டங்களை ‘கஜா’ புயல் புரட்டிப்போட்டு 14 நாட்களாகிவிட்டன. இந்தப் புயலால் 63 பேர் மரணமடைந்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான மரங்கள் அழிந்துவிட்டன. ஏராளமான ஆடு, மாடுகளும் இறந்துவிட்டன.

டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரமாக இருந்த தென்னை மரங்கள் அழிந்து, எல்லோரையும் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டன. இந்த மரங்கள் அத்தனையையும் மறுபடியும் வளர்த்தெடுக்க முடியுமா என்பது சந்தேகமே.

இந்தத் துயரில் இருந்து அவர்கள் மீண்டெழ, உணவு, போர்வை, பாய் தொடங்கி டெல்டா மக்களுக்கான அத்தனை அத்தியாவசியத் தேவைகளையும் நிறைவேற்றிய தன்னார்வலர்கள், போற்றுதலுக்கு உரியவர்கள். அரசு செய்ய வேண்டிய அத்தனையையும் இந்தத் தன்னார்வலர்கள் தனித்தனியாகவோ, குழுக்களாகவோ செய்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர்.

எதிர்காலமே கேள்விக்குறியாகி நின்றவர்களுக்கு, துயரில் இருந்து மீள முடியும் என நம்பிக்கை அளித்தவர்கள் இந்தத் தன்னார்வலர்கள் தான். அந்த நம்பிக்கை முகங்களில் முக்கியமானவர் ந.வசந்தகுமார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ந.வசந்தகுமார். முழுநேர புகைப்படக் கலைஞரான இவர், முதலில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று கள நிலவரத்தை அறிந்து கொண்டார். ஒவ்வொரு இடத்தையும் கேமராவில் பதிவு செய்துகொண்டே சென்றவருக்கு, ஒருகட்டத்துக்கு மேல் புகைப்படம் எடுக்க மனம் வரவில்லை. அந்த அளவுக்கு புயலின் பாதிப்பு அவர் மனதைப் பாதித்திருக்கிறது.

கேமராவைத் தூரமாக வைத்துவிட்டு உடனடியாகக் களத்தில் இறங்கினார். ஃபேஸ்புக், தெரிந்த நண்பர்கள் மூலம் நிவாரணப் பொருட்களைச் சேகரிக்க ஆரம்பித்தார். நிறைய பேர் நிவாரணப் பொருட்கள் சேகரித்ததால், அவர் எதிர்பார்த்த அளவுக்குப் பொருட்கள் சேரவில்லை. இருந்தாலும் அவர் மனம் தளர்ந்துவிடவில்லை.

அட்டைப் பெட்டியையே உண்டியலாக்கி, சிறுவர்களுடன் வீடு வீடாக ஏறி, இறங்கினார். அவரின் உதவும் உள்ளத்தைக் கண்ட கும்பகோணம் மாரத்தான் குழுவினர், 12 மணி நேரம் தொடர் ஓட்டம் ஓடி நிதி மற்றும் பொருட்களைச் சேகரித்துத் தந்தனர். ட்யூஷன் படிக்கும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து 500 ரூபாய் அனுப்பி வைக்க, மனம் நெகிழ்ந்திருக்கிறார் வசந்தகுமார்.

எதிர்பார்த்த அளவுக்கு பொருட்கள் வந்துசேர, சேகரித்த தொகையைக் கொண்டு தேவையான பொருட்களை வாங்கி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான பொருட்களை ஒரே பையில் பிரிக்கும் பணி வசந்தகுமார் வீட்டிலேயே நடைபெற்றது. அவருடைய ஐந்து மாதக் குழந்தை இமை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்க, தொட்டிலைச் சுற்றி அமர்ந்துகொண்டே இந்தப் பணி நடைபெற்றது. சத்தம் கேட்டால் குழந்தை விழித்துவிடுமோ என்று, ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாமல், கண்களாலேயே ஜாடை காண்பித்து பொருட்களைப் பிரித்திருக்கின்றனர்.

வேதாரண்யத்தைச் சுற்றியுள்ள கைநவலையான்பேட்டை, அண்டர்காடு, அவரிகாடு, நாகர்கொண்டான் ஜீவா நகர் ஆகிய கிராமங்களில் உள்ள 440 குடும்பங்களுக்கு வசந்தகுமார் மூலம் உதவிகள் சென்று சேர்ந்தன.

“அரசு எந்த உதவியுமே செய்யாத நிலையில், எங்களுக்காக எங்கிருந்தோ பொருட்களை சேகரித்துக் கொண்டு வந்த உங்களை உயிருள்ளவரை மறக்க மாட்டோம்” என அந்த மக்கள் கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்டுள்ளனர்.

ஒரத்தநாடு அருகேயுள்ள ஆம்பலாபட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனின் 5 மாத குழந்தை கவி யாழினிக்குப் பால் கிடைக்கவில்லை என நமக்குத் தகவல் கிடைத்தது.

“கைக்குழந்தைக்குக் கூட பால் கிடைக்கல”: டெல்டாவில் ஒலிக்கும் அவலக்குரல்

இதை நாம் வசந்தகுமார் கவனத்துக்குக் கொண்டுசெல்ல, அந்த ஊருக்கு அருகில் உள்ள யாரையும் தொடர்புகொள்ள முடியாத நிலையில், உடனடியாக 70 கிலோ மீட்டர் பயணம்செய்து பால் பவுடர் வாங்கிக் கொடுத்துள்ளார் வசந்தகுமார்.

குழந்தையின் பசி தீர்த்த பின் வீடு திரும்பிய வசந்தகுமாரின் முகநூல் பதிவு இது... “வீட்டிற்கு வந்துவிட்டேன். கவி யாழினி இமையாகவும் , இமை கவியாழினியாகவும் தெரிகிறாள்”.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x