Published : 22 Aug 2018 19:01 pm

Updated : 22 Aug 2018 19:01 pm

 

Published : 22 Aug 2018 07:01 PM
Last Updated : 22 Aug 2018 07:01 PM

கேரள நிவாரணம்: மழலைகள் விதைத்த மனிதம்

பக்ரீத் விடுமுறை என்பதால் கடற்கரை சாலை கொஞ்சம் காலியாகவே இருந்தது. அதைக் கடந்து திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை பக்கம் என் வண்டியைத் திருப்பினேன். அலுவலகம் நோக்கிய என் பரபரப்புப் பயணத்தில் அஸ்லாம் இப்படி ஒரு தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை நான்.

போஸ்ட் ஆபிஸில் இருந்து ஆதம் மார்க்கெட் வழியாக வரும்போது பெரிய மசூதி அருகே இருக்கும் கூட்டம் என்னை நின்று நிதானிக்கச் செய்தது. பள்ளிவாசலில்


முஸ்லிம்கள் திரண்டிருந்தனர். வாகன நெரிசலில் இருந்த நான் வண்டியை ஓரங்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். தன் உறவினர்களுக்காக காத்துக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவர் உற்சாகமாக சிரித்து விளையாடியபடி பள்ளி வாசலுக்குள் சென்றனர்.

கேரளம் காப்போம் என்ற அறிவிப்பு அட்டையைப் பார்த்த ஒரு சிறுவன் தன் கையிலிருந்த சிறிய பாலித்தீன் பையை எடுத்துக்கொண்டு அங்கு குழுமியிருந்த இளைஞர்களிடம் ஓடினான். அந்தச் சிறுவன் சற்று முன் தான் என்னைக் கடந்துபோனான். அறிவிப்புக்கு அருகில் சென்றதால் அவன் என்ன செய்யப்போகிறான் என்ற ஆர்வ அலை எழும்ப, ஏதோ ஒரு சுவாரஸ்யம் நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்ந்து, அச்சிறுவனைப் பின் தொடர்ந்தேன்.

சிறப்புத் தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் உணவுப் பொருட்கள், பணம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்து கொண்டிருந்தனர். அந்த இடத்தில் கேரளம் காப்போம், அன்பைக் கடத்துவோம் என்ற அறிவிப்பு அட்டையுடன் சில இளைஞர்கள் கைக்குட்டையை விரித்து, உண்டியல் குலுக்கியும் உதவி செய்யக் கோரி வேண்டுகோள் விடுத்தனர். நிறைய பேர் மனம் முழுக்க மகிழ்ச்சியுடன் உதவி செய்ய, பாலீத்தீன் பையில் இருந்த சில்லறைக் காசுகள் அடங்கிய சிறு மூட்டையை எடுத்து அந்தச் சிறுவன் கொடுத்தான்.

அருகிலிருந்த அனைவரும் ஆச்சர்யத்தில் பார்க்க, அவன் யாரையும் சட்டை செய்யாமல் திருப்தியைக் கண்களில் காட்டிவிட்டு ஒரு பறவையின் லாவகத்துடன் பறக்க ஆரம்பித்தான். அவனை வழிமறித்து, வரலாறு கேட்டேன். நான் அஸ்லாம். கேரளாவுல இருக்கிற ஃப்ரெண்ட்ஸ்க்காக காசு கொடுத்தேன் என்று சொல்லிவிட்டு சிட்டாகப் பறந்தான்.

என் கணிப்பின்படி, அஸ்லாமுக்கு ஏழு வயதுதான் இருக்கும். இப்போது இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கலாம். ஆனால், அவனின் செயல் என்னை நெகிழ வைத்துவிட்டது. இதுநாள் வரை சேமித்து வைத்திருந்த பணத்தை அப்படியே தூக்கிக்கொடுத்த தூய்மையான இதயத்துக்குச் சொந்தக்காரனைப் பற்றி இன்னும் அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் அங்கிருந்த இளைஞர்களிடம் பேசினேன்.

கேரள வெள்ள நிவாரணத்துக்காக நிதி திரட்டுகிறோம் என்று துவக்கம் அமைப்பின் நிறுவனர் கிருஷ்ண குமார் சுரேஷ் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினார்.

''அஸ்லாம் யாரென்று தெரியாது. அவர் முகவரி கூட எங்களிடம் இல்லை. எங்களை நோக்கி தானாக வந்தவர், கேரளாவுக்கு என்னால் முடிந்த உதவி என்று சில்லறைகள் அடங்கிய காசு மூட்டையைக் கொடுத்தார். நாங்கள் பள்ளிவாசல் வந்து உதவி கேட்க வேண்டும் என்று திட்டமிடவில்லை. திடீரென்றுதான் இங்கு வந்தோம். அஸ்லாம் எப்படி 900 ரூபாய் சேமிப்புப் பணத்தோடு வந்தார் என்று தெரியவில்லை. அல்லாவுக்கு அளிக்க வேண்டிய சேமிப்புப் பணத்தை அஸ்லாம் கேரளாவுக்காக வழங்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஈகைத் திருநாளில் அல்லா இட்ட கட்டளையை அஸ்லாம் அப்படியே நிறைவேற்றி இருக்கிறார்'' என்று நெகிழ்ந்தார்.

அடுத்த இன்ப அதிர்ச்சியாக ஒரு சிறுவனும், சிறுமியும் வேகமாக ஓடிவந்தார்கள். துவக்கம் அமைப்பைச் சார்ந்த இளைஞர்கள் வைத்திருந்த உண்டியலில் தங்களின் பிங்க் நிறக் கவரில் இருந்த சேமிப்புப் பணத்தைக் கொட்டிவிட்டுத் திரும்பினர்.

இவர்களாவது பேசுவார்களா என்ற எதிர்பார்ப்புடன் உரையாடினேன். யுகேஜி படிக்கும் ஹர்ஜித் நிதின் தயங்கித் தயங்கி தன் மழலைக் குரலில் பேசினார். ''பென்சில், ரப்பர் வாங்குறதுக்காக நானும் அக்காவும் காசு சேமிச்சோம். அதைத்தான் இப்போ கொடுத்தோம்'' என்றார்.

தொடர்ந்து பேசிய ஷ்ருத்திகா, பென்சில், ரப்பர்லாம் வேணும்னு அடிக்கடி அப்பாகிட்ட கேட்கக்கூடாது. நீங்களே காசு சேர்த்து வாங்கிக்கணும்னு அம்மா சொல்வாங்க. தம்பிக்கு ஐஸ்க்ரீம், சாக்லேட்னா ரொம்ப இஷ்டம். அதனால எப்பவும் அதைச் சாப்பிடணும்னு காசு சேர்க்க ஆரம்பிச்சான். ஒரு சாக்லேட், ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட்ட பிறகு மிச்சமிருக்குற காசை உண்டியல்ல போட்டுடுவான்.

எனக்கு ஓவியம் வரையப் பிடிக்கும். அதுக்குத் தேவையான பொருட்களை வாங்குறதுக்காக சேமிக்க ஆரம்பிச்சேன். நாலு மாசமா எங்க சேமிப்பு தொடருது. இந்த சமயத்துல டிவியில கேரள மழை வெள்ளம் பற்றிப் பார்த்து வருத்தப்பட்டோம். அப்பா நம்மால முடிஞ்சதை செய்றதுதான் உதவி. இல்லாதவங்களுக்கு செய்ற உதவி அல்லாவுக்கு செய்றதா அர்த்தம்னு சொல்வார். அப்போதான் சேமிச்ச காசைக் கொடுக்கலாம்னு தோணுச்சு. இதோ இப்போ எங்க சேமிப்புப் பணம் 650 ரூபாயைக் கொடுத்தோம். ஹேப்பியா ஃபீல் பண்றேன்'' என்று ஷ்ருத்திகா கூறி தம்பியுடன் விடைபெற்றார்.

தொடர்ந்து துவக்கம் அமைப்பினர் தங்கள் நிதி திரட்டுவது குறித்து கூறும்போது, ''கடந்த 3 நாட்களுக்கு முன்னர்தான் கேரளா நிதி திரட்டல் தொடர்பான திட்டத்தை வகுத்தோம். அதனைத் தொடர்ந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்குச் சென்று நிதி திரட்டி வருகிறோம். மேலும் சென்னை மக்கள் சார்பாக சுமார் 1 கோடி வரை கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்களும், நிதியும் இந்த வாரம் சேர இருக்கிறது.

கேரள மக்களுக்கு உதவுவதற்கு விரும்புவர்கள் துவக்கம் இணையப் பக்கம் தொடர்புகொண்டு தேவையான தகவலைப் பெறலாம். துவக்கம் நிறுவனர் கிருஷ்ண குமார் சுரேஷை +91-9444333624 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

பணம், பொருட்களின் எண்ணிக்கை முக்கியமில்லை. உதவும் எண்ணம்தான் முக்கியம். எவ்வளவு சிறிய உதவி என்றாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்'' என்றனர்.

கேரள மழை வெள்ளத்தில் மாநிலம், நாடு, இனம், மொழி கடந்து பலரும் அளித்த நிதி கோடிகள், லட்சங்கள் எனத் தொடர்கின்றன. தொடர்ந்து அஸ்லாம், ஷ்ருத்திகா, ஹர்ஜித் உள்ளிட்ட மழலைகளின் சில்லறைகள்தான் இங்கு மனிதம் விதைத்துள்ளன.

 கேரள வெள்ளம்ஈகைத் திருநாள்அஸ்லாம்கேரள நிதிதுவக்கம்Kerala

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x