Last Updated : 09 Apr, 2018 03:53 PM

 

Published : 09 Apr 2018 03:53 PM
Last Updated : 09 Apr 2018 03:53 PM

கொள்ளை வழக்கில் சுணக்கம் காட்டுகிறதா கோவை போலீஸ்?- ஒரு சிறப்புப் பார்வை

சமீப ஆண்டுகளாக உ.பி., பிஹார், ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள் தமிழகத்தைக் குறிவைப்பது அதிகமாகி வருகிறது. எனினும், கொள்ளைக்குப் பின் சில மாதங்களில் அவர்களை சிறைப்பிடித்து தமிழக காவல்துறை தம் பெருமையை நிலைநாட்டி வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக ஓடும் பேருந்தில் பறிபோகும் தங்க நகைகள் கொள்ளையில் கோவை போலீஸார் சுணக்கம் காட்டி வருவதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த நவம்பர் 11-ல் சென்னையின் கொளத்தூர் நகைக்கடையில் அடிக்கப்பட 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி மற்றும் 2 லட்சம் ரொக்கப் பணம் அவர்களுக்கு பெரும் சவாலானது. இதில் முக்கியக் கொள்ளையனான நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தமிழகப் படையில் கொளத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் பெரியபாண்டியன் பரிதாபமாகப் பலியாகி இருந்தார். கடந்த டிசம்பர் 13-ல் அரங்கேறிய சம்பவத்தில், தனது சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியில் வெளியேறிய குண்டு பெரியபாண்டியனை பலிவாங்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த சம்பவமும் வடமாநிலக் கொள்ளையரை பிடிக்க கோவை போலீஸார் காட்டும் சுணக்கத்திற்கு காரணம் எனக் கருதப்படுகிறது.

ஓடும் பேருந்தில் கொள்ளை

கோவையின் நகைக்கடை அதிபர்கள் தம் நகைகளை பெங்களூரூவிற்கு அனுப்பி விற்றுத் திரும்புவது வழக்கமாக உள்ளது. இதில் ஒன்றாக வைசியர் தெருவில் ஸ்வர்ண கலஷ் ஜுவல்லரியும் உள்ளது. இக்கடையின் இரு ஊழியர்கள் கடந்த வருடம் அக்டோபர் 11–ல் தங்க நகைகளை விற்றுவிட்டு மீதமான இரண்டரை கிலோவுடன் இரவு கர்நாடக அரசுப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். நகைகளை பத்திரப்படுத்த பெட்டியில் போட்டு அதை தம் இருக்கைக்கு அடியில் வைத்துப் பயணித்தனர்.

பெரியபாண்டியன் பலி காரணமா?

அப்போது, அவர்கள் பின் இருக்கைகளில் அமர்ந்த இருவர் ஓடும் பேருந்தில் அனைவரும் உறங்கிய பின் தன் கைவரிசையை காட்டிவிட்டு தப்பினர். இந்த கொள்ளையர்கள் உ.பி.யின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ஒளிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் அப்போது கோவை போலீஸார் உடனடியாக உ.பி.க்கு தம் காவல்படையை அனுப்புவதில் சுணக்கம் காட்டியுள்ளனர். இதன் பின்னணியில் ராஜஸ்தானில் பெரியபாண்டியன் பலி காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

அக்டோபர் 11-ல் நடந்த கோவை கொள்ளையில் பெங்களூரூ சென்று விசாரணை தொடங்க ஒரு மாதமாகி உள்ளது. அடுத்து அதன் கொள்ளையர்கள் உ.பி.யில் இருப்பதாக அடையாளம் காணப்படும் போது பெரியபாண்டியன் சம்பவம் நிகழ்ந்துவிட்டது. புதிய ஆணையராக பெரியய்யா வருகைக்குப் பின் அந்த கொள்ளைக்கு ஒரு விடிவு பிறந்தது. ராஜஸ்தானை போல் அன்றி உ.பி.க்கு சற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கோவை காவல்துறை எடுத்திருந்தது.

உ.பி.யில் அதிகாரிகளாகத் தமிழர்கள்

உ.பி.யின் மேற்குப்பகுதியின் அம்ரோஹாவிற்கு அருகிலுள்ள புலந்த்ஷெஹர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக தமிழரான ஜி.முனிராஜ் என்பவர் பணியாற்றுகிறார். இவரிடம் உதவி கோர தமிழகத்தில் பணியாற்றும் முனிராஜின் பேட்ச்மேட்டை நாடியுள்ளனர். இதன்பலனாக, இரு உதவி ஆய்வாளர்கள் மற்றும் நான்கு காவலர்களுடன் சென்ற காவல்படைக்கு அங்கு அதிர்ஷ்டவசமாக அதிக வேலை இல்லாமல் போனது.

கொள்ளைக் கும்பல் தலைவனான அஸ்லம் அக்தர் கானை முனிராஜ் தம் படைகளை அனுப்பி பிடித்துக் கொடுத்துவிட்டார். இவர்போல் கைதாகி வருபவர்களை உடனடியாக விசாரணைக்கு எடுப்பது வழக்கம். ஆனால், அஸ்லம் அக்தர் கானையும் அப்படிச் செய்யாமல் சிறையில் தள்ளி வேறு வேலைகளில் இறங்கியது. இதுவரையிலுமான செய்திகளையும் கசிய விடாமல் கோவை காவல்துறை பாதுகாத்தது. எனினும், இந்த செய்தி, ‘தி இந்து’வில் பிப்ரவரி 25-ல் படத்துடன் வெளியானது.

கொள்ளைகள் மீது பதிவாகாத வழக்குகள்

இதை அடுத்து மேலும் நான்கு நகைக்கடையினர் தாமும் அதேபோல் பறிகொடுத்த நகைகள் மீது இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என ‘தி இந்து’விடம் தெரிவித்தனர். இதில் ஒருவர் இடையர் வீதியைச் சேர்ந்த அஜீத் பாட்டீல். இவர், டிசம்பர் 31 அன்று கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு சென்றபோது இரண்டே முக்கால் கிலோ நகைகளை அதே உ.பி. கும்பலிடம் பறிகொடுத்துள்ளார்.

இதனிடையில், செய்தி வெளியான மறுதினம் 3 நாள் விசாரணைக்கு அஸ்லம் எடுக்கப்பட்டார். இவரிடம் நடந்த விசாரணையில் அந்தக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட மேலும் 5 பேர்களின் விவரங்கள் கிடைத்தன. இவர்களைப் பிடிக்க மீண்டும் உ.பி., டெல்லி போக வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தமுறை ஏனோ, வட மாநிலத்தில் பணியாற்றும் தமிழக அதிகாரிகளின் உதவியைக் கோர கோவை காவல்துறை தயங்கியது. இதற்கு குற்றவாளிகளை பிடிப்பதன் முழுப்பலனும் தமக்கு கிடைக்க வேண்டும் என்பதாக இருக்கலாம்.

உதவுவதாக ஏமாற்றிய நதீம்

இந்தக் காவல் படைக்கு உதவும் வகையில் கொள்ளைத் தலைவன் அஸ்லமின் கிராமத்தைச் சேர்ந்த நதீம் என்பவர் காவல்படையினருக்கு கோவையில் கிடைத்துள்ளார். இவர் தாம் பல வருடங்களாக கோவையில் பணியாற்றி வருபவர். நதீம் தான் உ.பி. கும்பல்களுக்கு கொள்ளையடிக்கத் துப்பு அளிப்பவர் என்றும் ஒரு சந்தேகம் உள்ளது. எனினும், இவரது உதவியால் மற்ற கொள்ளையரைப் பிடித்து விடுவது என்ற திட்டம் இருந்ததால் அவரைப் பின்னர் கைது செய்ய திட்டமிடப்பட்டிருந்தது போல.

ஆனால், டெல்லியில் நடந்ததோ வேறு. தமிழகக் காவல் படையுடன் டெல்லி வந்த நதீமை அவரது உறவினர்கள் அம்ரோஹாவில் இருந்து வந்து பலவந்தமாக அழைத்துச் சென்று விட்டனர். கைது வாரண்ட் இன்றி நதீமை காவல் படை வைத்திருக்க முடியாது எனவும் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால், கோவை காவல்துறையினர் வேறுவழியின்றி நதீமை அவர்களுடன் அனுப்பி வைக்க வேண்டியதாயிற்று.

ஜாமீனில் வெளியாகி தப்பிய கொள்ளையன்

உ.பி. கொள்ளை கும்பல்கள் குறித்து கோவையின் உயர் அதிகாரிகள் வட மாநிலத்தில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றும் தமிழர்களை இதுவரையும் தொடர்பு கொண்டதாகத் தெரியவில்லை. பெரியபாண்டியன் பலியான போது இரு துணை ஆணையர் ராஜஸ்தானுக்கு நேரில் வந்திருந்தனர். ஆனால், உ.பி.யில், காவல்படையில் இருந்த உதவி ஆய்வாளர்களையே நேரில் சென்று பேசிக்கொள்ளும்படி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கோவை சிறையில் இருக்கும் அஸ்லமின் ஜாமீன் மனு கடந்த 27-ல் மூன்றாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இந்த முயற்சியை தொடரும் அஸ்லமிற்கு ஜாமீன் கிடைத்தால் அவர் தலைமறைவாகும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், அஸ்லம் ஏற்கெனவே தாம்பரம் பகுதியில் நடந்த ஒரு கொள்ளையில் கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்று தலைமறைவானவர். இந்தத் தகவல் தற்போது கோவை காவல்துறையினரால் தகவல் அளிக்கப்பட்டும் தாம்பரம் போலீஸார் அதில் ஆர்வம் கட்டாமல் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

நினைவுகூரப்படாத வடமாநில உதவிகள்

உ.பி. கொள்ளையைப் பற்றி ’தி இந்து’ வட மாநில தமிழ் அதிகாரிகளிடம் விசாரித்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன. ‘தீரன்’ படத்தினால் வெளிச்சத்திற்கு வந்த பவாரியா கொள்ளைக் கும்பல் முதல் தற்போது வரை தமிழக காவல்துறையினருக்கு பல உதவிகள் கிடைத்து வருகின்றன. இதை வட மாநிலங்களில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளான தமிழர்கள் தவறாமல் உதவி செய்து வருகின்றனர். கிருஷ்ணகிரி வங்கி மற்றும் தூத்துக்குடி நகைக்கடை கொள்ளை போன்றவைகளிலும் கொள்ளையர்களை உபி.யில் கைது செய்யவும் அம்மாநில அதிகாரிகளிடம் முழு ஒத்துழைப்பு கிடைத்திருந்தது.

‘தீரன்’ படத்தின் போதும் பல பரபரப்பான பேட்டிகள் அளித்த தமிழக ஏடிஜிபியான ஜாங்கிட் கூட இதுவரை தமக்கு வட மாநிலங்களில் கிடைத்த உதவிகளை முறையாக நினைவுகூரவில்லை எனப் புகார் உள்ளது. எனினும், அதை பொருட்படுத்தாமல் தம் உதவிகளை தொடரும் அதிகாரிகளின் விருப்பம் வித்தியாசமாக உள்ளது. ’தமிழகத்தில் வந்து குற்றச்செயல் புரியும் வட மாநிலத்தவர் குறித்த விவரங்களை மட்டும் கொடுத்தால் அவர்களை கைது செய்து அனுப்பத் தயார்’ என்கிறார்கள் அந்த அதிகாரிகள். இந்த அரிய வாய்ப்பை பெரியபாண்டியன் பலிக்குப் பின் தமிழகம் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் தயக்கம் காட்டுவதாகவும் ஒரு புகார் உள்ளது.

தமிழக காவல்துறையின் பெருங்குறை

உ.பி.யின் மேற்கு பிரதேசத்தில் உள்ள சில மாவட்டங்களின் பல கிராமங்களில் கொள்ளை அடிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். இளம் வயது முதல் முறையான பயிற்சிகள் பெற்றவர்கள் தம் கைவரிசையை உள்ளூரில் காட்டுவது கிடையாது. இவர்கள் மகராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களைக் குறி வைப்பது வழக்கமாக இருந்தது. அங்கு காவல்துறையின் கட்டுப்பாடுகள் அதிகரிக்கவே சில ஆண்டுகளாக அனைவரும் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவை நோக்கித் திரும்பி விட்டனர்.

தம்மைப் பிடிக்க உ.பி. வரும் வெளிமாநில போலீஸாரிடம் உள்ளூர் காவல்நிலையத்தின் காவலர்களுக்கு ’மாமூல்’ கொடுத்து தப்பி விடுகின்றனர். இவ்வாறு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வந்த காவல் படைகள் வெறுங்கைகளுடன் திரும்பிய பல சம்பவங்கள் உண்டு. இத்தனைக்கும் தமிழகத்தைப் போல் அல்லாமல் இருமாநிலத்தினரும் இந்தி மொழி நன்கு அறிந்தவர்கள். இந்த சூழலில், வட மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளுடன் பேசி ஒருங்கிணைப்பு வளர்க்கப்படவில்லை. இது, கோவை கொள்ளையில் தமிழக காவல்துறையின் பெருங்குறையாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x