Published : 02 Apr 2018 08:17 PM
Last Updated : 02 Apr 2018 08:17 PM

யானைகளின் வருகை 153: குரங்கு அருவி அருகே அற்புதக் காட்சி

தனது தந்தங்கள், தும்பிக்கை மற்றும் தலையைப் பயன்படுத்தி ஒரு லாரியைக் கூட அடையாளம் தெரியாமல் துவம்சம் செய்துவிடும் சக்தி மிக்கது ஒற்றையாக திரியும் ஆண் யானை. ஆப்பிரிக்காவில் உள்ள தேசியப் பூங்கா ஒன்றின் நடுவில் சாலை ஒன்று அமைக்கப்பட்டது. மிருகங்களுக்கோ அந்த சாலையை ஒதுக்கிப் புழங்கத் தெரியவில்லை. ஒருநாள் அச்சாலையில் வந்த லாரி ஒன்றினை முட்டித்தள்ளியது ஒரு யானை. அதில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

உத்திரப் பிரதேசத்தில் பல்டிடூன் என்ற காட்டுப்பகுதியில், ஒரு முறை ஒரு பெண் யானையை முன்னிட்டு, ஆண் யானைகளுக்கிடையே பலத்த மோதல் ஏற்பட்டது. இது நடந்தது 1967-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் நாள். செடி கொடிகள், மரங்கள், துளிர்த்து மணம் பரப்பும் இளவேனில் காலம் அது. சினைப்பருவத்திலிருந்த ஒரு பெண் யானையுடன் இனச் சேர்க்கை செய்ய யானைக் கூட்டத்தின் தலைவனான கொம்பன் ஆண் யானை முயற்சி செய்து கொண்டிருந்தது. இதைக் கண்ட மற்ற இரு கொம்பன் யானைகள் போட்டிக்கு வந்தன. இதில் தலைவனான ஆண் யானை மற்றொரு ஆண் யானையை சுலபமாக விரட்டிவிட்டது.

ஆனால் பிறிதொரு யானை சவாலுக்கு சவால் விட்டது. அப்போது அந்தப் பக்கமாக சோதனை செய்ய வந்த வனவிலங்கு அதிகாரிகள் இந்த மோதலை சற்று தொலைவில் இருந்து மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரு கொம்பன் யானைகளும் ஒன்றுடன் ஒன்று தலையில் மோதி முட்டி மோதிய காட்சியின் எதிரொலி அக்கானகப்பகுதியின் அமைதியையே குலைத்தது. இரண்டும் மூர்க்கத்தனமாக கடுங்கோபத்துடன் மோதின. எதுவும் விட்டுக் கொடுப்பதாயில்லை.

அப்பகுதியின் சிறுத்தைகள், புலிகள், ஓநாய்கள், மற்றும் கழுதைப்புலிகள் இம்மோதலை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன. ஏனெனில் இவ்விரண்டில் ஒன்று மரணமடைந்தாலும் இந்த விலங்குகளுக்கு அன்று மாபெரும் விருந்து கிடைக்கும். அத்தகைய விருந்து இவற்றுக்கு எப்போதும் கிடைப்பதில்லை. இறுதியாக சவால் விட்ட இரண்டாவது ஆண் யானை பின் வாங்க ஆரம்பித்தது. தலைவனான கொம்பன் யானை தனது கொம்புகளால் அதன் விலாவில் குத்திவிட்டது. குத்துப்பட்ட யானை பயங்கரமாக பிளிறியபடி கீழே சாய்ந்தது.

யானையின் தந்தங்கள் 60 செ.மீ. தூரம் உள்ளே சென்று அதன் நுரையீரலை 8 செ.மீ. ஆழம் வரை காயங்களை ஏற்படுத்தியிருந்தது. மூன்று நாள் கழித்து உதவி வன அலுவலர் தனது அறிக்கையை தயார் செய்ய அவ்விடத்திற்கு வந்து பார்த்தபோது நூற்றுக்கணக்கான பெருங்கழுகுகள் யானையின் உடலை பதம் பார்த்துக் கொண்டிருந்தன. வெட்டுக்கிளிகள் படை எடுப்பதை போல அந்தப் பகுதயில் 800 மீட்டர் சுற்றளவுக்கு இவை ஆக்கிரமித்திருந்தன. அப்பகுதி முழுக்க துர்நாற்றம். யானை தன் தும்பிக்கையை நீட்டியபடி இறந்து கிடந்தது. விலங்குகளைத் திருடுவோர் அதன் தந்தங்களை ஏற்கெனவே அறுத்துச் சென்றுவிட்டனர்!''

என்றெல்லாம் விரிவாக செல்லும் விவரிப்பு இப்படியான ஆண் யானைகள் மோதலின் போது, மிகவும் வியக்கும் தகவல் ஒன்றை அபுல்ஃபசல் எழுதிய அயன்-இ-அக்பரி என்ற நூல் சுட்டியிருப்பதை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

அக்பர் காலத்தில் சினைப்பருவத்திலிருக்கும் ஒரு பெண் யானையின் பொருட்டு, இரு கொம்பன் யானைகள் மோதிக்கொள்ளும். மற்ற யானைகள் வெற்றி தோல்வி யாருக்கு என காத்துக் கிடக்கும். கொம்பன்கள் மோதிக் கொள்ளும்போது தற்செயலாக விளையாட்டுப் பருவத்தில் இருந்த குட்டியானை இடையில் வந்து விட்டால், ஏதாவது ஒரு கொம்பன் அந்த யானைக்குட்டியை தனது தும்பிக்கையில் இலாவகமாக தூக்கி பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டே தன் மோதலைத் தொடரும். மதங்கொண்ட யானையை தப்பிச் செல்லும்போது யாரும் பிடிக்கக்கூடாது. ஒரு பெண் யானையை கூட்டிச்சென்று அதன் அருகே நிறுத்தினால் அதன் கோபம் தணிந்து சாதுவாகிவிடும் என்று மேற்கோள் காட்டுகிறார் ரமேஷ் பேடி

யானைக்கூட்டங்களுக்கு யார் தலைமை என்பது பற்றி ரமேஷ்பேடியின் நூல் ஆண் யானைதான் தலைமை என ஆராய்ச்சிகள் மற்றும் மேற்கோள்கள் மூலம் சொல்லியிருக்க, ராமன் சுகுமாரில் தொடங்கி இன்றைய யானை ஆர்வலர்கள் வரை பெண் யானைதான் தலைமை என்று எப்படி சொல்கிறார்கள். அதையும் என் அனுபவம் மூலமாகவே பார்க்கிறேன். அனைவருக்கும் தூவைப்பதியில் குட்டி யானைகள் இரண்டு தோட்டத்து கிணற்றடி தண்ணீர் தொட்டியில் விழுந்து அதை மீட்க யானைக்கூட்டமே போராடிய கதை நினைவிருக்கும். இத்தொடரின் 2-ம் அத்தியாயத்தில் போகிற போக்கில் ஒரு விஷயம் குறிப்பிட்டிருப்பேன்.

அதைத் திரும்பப் படியுங்கள்.

தங்களுக்கு சில நூறு மீட்டர் தொலைவில் 24க்கும் மேற்பட்ட யானைகள் இருந்தும் அச்சப்படாத பழங்குடியின இளைஞர்கள் 3 மைல்தூரத்தில் இந்த யானையின் கொம்பு மினுக்கத்தை கண்டதுதான் தாமதம். 'டேய்…. கொம்பன் வந்துட்டான். ஓடுங்கடா…!' என அவர்கள் கத்திய கத்தல் அந்த கானகத்தில் அதிபயங்கரமாக எதிரொலித்தது. அதை தொடர்ந்து அவர்கள் மலைக் குன்றுகளை தவ்வி ஏறி குதித்து ஓடிப் பறப்பதும் ஆச்சர்யமாக இருந்தது.

'கொம்பன் மோசமானவன். கூட்டத்தோட சிக்னல் கிடைச்சா போதும் ஜெட் வேகத்தில் வந்துவிடுவான். தப்பிக்கவே முடியாது!' என பின்னர் அவர்கள் சிலாகித்தது இன்னும் பேராச்சர்யமாக இருந்தது. நல்ல வேளை. அதற்குப்பிறகு கொம்பனுக்கு இந்த யானைக் கூட்டத்திடமிருந்து என்ன சிக்னல் கிடைத்ததோ. அங்கேயே நின்றுவிட, பழங்குடி இளைஞர்களும், மருத்துவர்கள் மற்றும் வனத்துறை குழுவும் தொட்டிக்குள் கற்களை நிரப்பும் வேலையை தூரத்திலேயே தொடர்ந்தனர்.

சில மீட்டர் தூரத்தில் இருந்த 24 யானைகளுக்கு பயப்படாத பழங்குடிகள், அவற்றுக்கு போக்கு காட்டியபடியே யானைக்குட்டிகளை தொட்டியிலிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மணிக்கணக்கில் ஈடுபட்டிருந்த அவர்கள் 3 கிலோமீட்டர் தூரத்தில் அந்தக் கொம்பனைக் கண்டதும் திக்குக்கு ஒருவராக ஓட்டம் பிடித்தது ஏன்? அது ஒரு பக்கம். அதிகாலை 5 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை அங்கே வராத ஒற்றை ஆண்யானை/கொம்பன் அதுவரை எங்கிருந்தது. அது யானைக்கூட்டத்தில் பிளிறல் சத்தம் எழுந்ததும் ஏன் திடீரென்று வெளியே மினுக்கம் காட்டி துள்ளி வருகிறது. ரமேஷ் பேடி தன் ஆய்வு நூலில் சொன்னது இங்கே சரியாக வருகிறதா? அதாவது ஒரு கூட்டத்துக்கு ஆண் யானைதான் தலைமை. அது 2 அல்லது 3 மைல் தூரத்தில் இருந்து கொண்டு தன் கூட்டத்திற்கு வழிகாட்டும். கூட்டத்தில் உள்ளவர்களுக்கு ஒரு ஆபத்து என்பது தெரிந்தால் உடனே காப்பாற்ற ஓடி வரும். அதன் வேகம் அதிபயங்கரமாக இருக்கும் என்பதுதானே? அதைத்தானே இந்த சம்பவமும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறது.

இந்த சம்பவம் மட்டுமல்ல. இதை மேலும் அழுத்தமாக பதிவு செய்யும் விதத்தில் ஒரு சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆழியாறு வனப்பகுதியில் நடந்தது. இந்த அதிசய சம்பவம் இப்போதும் கூட தொடர்ந்து நடக்கிறது. ஆழியாறிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, ‘மங்கி ஃபால்ஸ்’ எனப்படும் குரங்கு அருவி. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு சீஸன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் வருவதும் வழக்கம்.

இந்த அருவிக்கு செல்லும் சாலைக்கு அப்பால் கிழக்கு நோக்கி ஒரு பிரிவு சாலை திரும்புகிறது. அதன் எதிரே உள்ள மலைக்குன்றுகளின் மீது யானைகள் செல்லும் வழித்தடமும் அமைந்துள்ளது. தினசரி இந்தப் பாதையில் காலை, மாலையில் யானைகள் கூட்டம் கடந்து செல்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. அதில் காலை 10 மணிக்கும், மாலை 3 மணி சுமாருக்கும் சொல்லி வைத்த மாதிரி 2 குழுக்களை கொண்ட யானைகள் கூட்டம் இந்த சாலையைக் கடக்கிறது.

அவை சாலையைக் கடக்கும் முன்பு இந்த யானைக் கூட்டம் கீழே அடர்ந்த வனப்பகுதியிலேயே நின்று கொள்கிறது.

கொம்புள்ள ஆண் யானை ஒன்று முதலில் வெளியே வந்து சாலையின் ஓரமாய் நின்றுகொண்டு ஒரு பிளிறல் சத்தம் எழுப்புகிறது. தொடர்ந்து காட்டுக்குள் பின்தங்கியுள்ள யானைக் கூட்டம் சாலையைக் கடக்கிறது. அந்த யானைகள் கூட்டம் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு சென்ற பின்பு அங்கிருந்து கூட்டத்தில் உள்ள யானை ஒன்று சிறிய அளவில் பிளிறல் சத்தம் எழுப்புகிறது. அதையடுத்து சாலையில் நிற்கும் ஆண் யானை யானைக்கூட்டம் சென்ற பாதையில் ஆடி, அசைந்து செல்கிறது.

அப்படித்தான் நான் இப்பகுதிக்கு சென்றிருந்த சமயமும் நடந்தது. அப்போது மணி மாலை சுமார் 3 மணி. 5 யானைகள் கொண்ட கூட்டம் இப்படித்தான் சாலையை கடந்தது. முதலில் அதில் உள்ள ஆண் யானை சாலையின் ஓரம் வந்து நின்று கொண்டது. அதைப் பார்த்து வனத்துறையினர் வாகன ஓட்டிகளை இருபுறமும் நிறுத்தி எச்சரித்தனர். சாலையின் ஓரமாக நின்ற ஆண் யானை சின்ன பிளிறுகை எழுப்ப உடனே ஒரு குட்டியுடன் கூடிய 4 யானைகள் சாலையை சாவகாசமாக கடந்து காட்டுக்குள் நுழைந்தன. அங்கேயே நின்ற ஆண் யானை காட்டுக்குள் சென்ற யானையின் பிளிறல் ஓசை கேட்டவுடன் அப்படியே மெல்ல அவை சென்ற பாதையிலேயே சென்று மறைந்தது.

இப்படி ஆண் யானை வந்து, பாதுகாப்புக்கு நின்று, 'ஆபத்தில்லை' என கூட்டத்து யானைகளுக்கு சிக்னல் கொடுத்து வரவழைத்து சாலையைக் கடந்து காட்டிற்குள் பாதுகாப்பாக சென்ற பிறகு ஆண் யானை தானும் சாலையை கடந்து காட்டிற்குள் மறைய சுமார் 15 நிமிட நேரம் பிடித்தது. அங்கேயும் ஆண் யானையின் செயல்பாடு ஒரு அணியின் கேப்டனின் தன்மையை ஒத்திருந்தது. குறிப்பாக தன் கூட்டத்து யானைகள் சாலையை கடந்து காட்டுக்குள் நுழையும் வரை சாலையில் வந்து தேங்கும் வாகனங்களை, மனிதர்களைக் கவனித்து, அது உறுத்துப்பார்த்துக் கொண்டே இருந்த விதம், அங்கே இருந்த மரத்தின் கிளையை ஒடித்து ஒடித்து தனக்கு முன்னே போட்டுக் கொண்ட நேர்த்தி. அடேயப்பா அந்த அற்புதக் காட்சியைப் பார்த்தவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஆண் யானைதான் கேப்டன் என்று மாறாமல் சொல்லியே தீருவார்கள்.

- மீண்டும் பேசலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x