Published : 15 Feb 2018 10:16 am

Updated : 15 Feb 2018 10:16 am

 

Published : 15 Feb 2018 10:16 AM
Last Updated : 15 Feb 2018 10:16 AM

ஓவியமே தியானம்...85 வயதிலும்தொடரும் தூரிகை பயணம்

85

வலைகளை மறக்கச் செய்து மனிதர்களை மகிழ்விக்கும் பேராற்றல் கொண்டது கலை. அதிலும் ஓவியக் கலைக்கு தனிச் சிறப்பு உண்டு. அப்படிப்பட்ட ஓவியக் கலை அழிந்துவிடாமல் அடுத்த தலைமுறையின் கையிலும் தொடர வேண்டும் என்கிறார் ‘லக்கி’ நடராஜன். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையின் முதல் ஓவியர் எனப் பெயர் பெற்றவர். 85 வயதிலும் இன்றும் பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் வரைய கற்றுக்கொடுத்து வருகிறார்.


ஓவியத்தின் மீது கொண்ட காதலால், தனியார் பள்ளியில் கிடைத்த பணியை துறந்ததோடு, தனது கற்பனைகளுக்கு சிறகு கட்டி அழகுபார்க்கத் தொடங்கி, 30 ஆண்டுகளைக் கடந்துள்ளார். இவரிடம் ஓவியம் கற்றுக்கொண்ட பலர், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஓவிய ஆசிரியர்களாகவும், ஓவியர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இதுவரை சிற்பங்கள், இறை ஓவியங்கள், இயற்கை காட்சிகள் , காணுயிர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். உடுமலை காந்தி நகர் பகுதியில் பள்ளிக் குழந்தைகளுக்காக ஓவிய வகுப்பும் நடத்தி வருகிறார். கண்களுக்கு விருந்தாக, கண்கவர் சுவரோவியங்களையும் தீட்டியுள்ளார்.

அவரது சீடர்கள் சிலர் கூறும்போது, ‘சுமார் 1 லட்சம் பேர் வசிக்கும் உடுமலையின் முதல் ஓவியர் இவர்தான். இவரிடமிருந்து இக்கலையைக் கற்றுக்கொண்ட பலர் சொந்தமாக தொழில்முறை ஓவியர்களாக உள்ளனர். 1995-களில் இவரது திறமையால், அன்றைக்கு டீ தூள் விற்பனையில் கோலோச்சிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தாமாக முன்வந்து சுவர் விளம்பர வாய்ப்புகளை அளித்தன. 85 வயதிலும் சைக்கிள் ஓட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அடுத்த தலைமுறைக்கும் ஓவியத்தை கொண்டு செல்லும் அவரது முயற்சி வரவேற்கக்கூடியது’ என்றனர்.

ஓவியத்தின் மீதான காதல் குறித்து நடராஜன் கூறியதாவது:

‘எந்தவொரு கலைப் படைப்பையும் உருவாக்குவதற்கு மட்டுமல்ல, அதை உள்வாங்குவதற்கும் அதனுடைய கூறுகள் (ELEMENTS) மற்றும் கொள்கைகளைப் (PRINCIPLES) புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஒவ்வொரு கலையையும் உருவாக்க ஏதோவொன்று கருவியாக இருக்கும். அதேபோல ஓவியத்துக்கும், வடிவமைப்பாளருக்கும் கருவியாக இருப்பவை கோடு, வண்ணம், ஒளித்தகவு, வடிவம், உருவம், வெளி, இழையமைவு போன்றவை.

இந்த ஓவியக் கூறுகள் உலகின் ஒவ்வொரு இடத்திலும் இருக்கிறது. ஒவ்வொரு ஓவியரும் இந்த கூறுகளை அவர்களது விருப்பத்துக்கேற்ப பயன்படுத்துகின்றனர். நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் உருவமாகவே இருக்கிறது. அதே பொருளின் படங்கள் வடிவமாக இருக்கிறது.

ஓவியம் வரைவது தியானத்துக்கு ஒப்பானது. அதில் தன்னையே மறந்து கலையுடன் ஒன்றிவிடும் நிலை உருவாகும். இதனால், மன அழுத்தம் நீங்கி புத்துணர்வு கிடைக்கும். புதுப்பிறவி எடுத்ததுபோல ஓர் உணர்வு ஏற்படும். இன்றைய நிலையில், திணிக்கப்படும் கல்வியால் பள்ளி மாணவர்கள் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இது நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இளம் தலைமுறையினர் அனைவரும் ஓவியம் கற்றுக்கொண்டு பொழுதுபோக்காகக்கூட தனக்கு பிடித்தவற்றை வரைந்து, வண்ணம் தீட்டி அழகு பார்க்க வேண்டும். எங்களோடு இந்த கலை நின்றுவிடக் கூடாது என்பதால், அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் பணியில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன்’ என்றார்.Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x