Published : 09 Feb 2018 11:05 AM
Last Updated : 09 Feb 2018 11:05 AM

விடுபட்ட உறவுகள் - வேதனையில் துடித்த உள்ளங்கள் அரசு மருத்துவமனையில் இறந்த தாய் உடலுடன் தவித்த சிறுவர்கள்: தகனம் செய்ய வழி தெரியாததால் உதவிய நோயாளிகள்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்த தாயை அடக்கம் செய்ய வழியின்றித் தவித்த சிறுவர்களுக்கு நோயாளிகளே உதவினர். மருத்துவமனை நிர்வாகமும் மின்மயானத்தில் இலவசமாக உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்தது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பூத்தாம்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயா (36). இவரது கணவர் காளியப்பன். இவர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.

இவர்களுக்கு மோகன்ராஜ் (15), வேல்முருகன் (14) என்ற இரு மகன்களும், காளீஸ்வரி (9) என்ற மகளும் உள்ளனர். கணவனை இழந்த விஜயா, மனம் தளராமல் கூலி வேலைக்குச் சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்தார்.

ஒரு சமயத்தில் வருமானம் குறையவே மூத்த மகன் மோகன்ராஜ் படிப்பை 8-ம் வகுப்புடன் நிறுத்திவிட்டு, பேக்கரி கடையில் வேலைக்கு சேர்த்துள்ளார்.

மற்ற இருவரையும் ஒட்டன்சத்திரம் அருகே பழக்கனூத்தில் உள்ள ஞானம் நினைவு நடுநிலைப் பள்ளியில் இலவச விடுதியில் தங்கி படிக்க வைத்துள்ளார். இங்கு வேல்முருகன் 8-ம் வகுப்பும், காளீஸ்வரி 4-ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.

மார்பக புற்றுநோய்

இந்நிலையில் விஜயாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு கூலி வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உடல்நிலை மோசமடையவே திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 6-ம் தேதி சேர்த்தனர்.

பரிசோதனையில் விஜயாவுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. முற்றிய நிலையில் அனுமதித்ததால் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் மாலை அவர் இறந்தார்.

மருத்துவமனையில் இவருக்கு துணையாக மூத்த மகன் மோகன்ராஜ் மட்டும் இருந்தார். உடலை ஒப்படைக்க மருத்துவர்கள் முடிவு செய்தபோது, மகன் மைனராக இருப்பதால் உறவினர்கள் யாரையாவது அழைத்துவரச் சொல்லியுள்ளனர்.

அப்போதுதான், தங்களுக்கு உதவும் அளவுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. அடக்கம் செய்வதற்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை என மோகன்ராஜ் கூறியது அங்கிருந்தவர்களின் மனதைக் கலங்கச் செய்தது. இதை அறிந்த மருத்துவமனை உள்நோயாளிகள் தங்களால் ஆன பண உதவியை வழங்கினர்.

ஒரு வழியாக மோகன்ராஜின் சித்தப்பா முருகனைத் தொடர்புகொண்டு, ‘நீங்கள் வந்தால்தான் உடலை ஒப்படைக்க முடியும்.

சிறு வயது பையன்களாக இருப்பதால் இவர்களிடம் ஒப்படைக்க முடியாது’ என அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவோடு இரவாக கேரளாவில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல் வந்தார் காளியப்பனின் தம்பி முருகன். அவரிடம் விஜயாவின் உடல் நேற்று காலை ஒப்படைக்கப்பட்டது.

இறுதிச் சடங்கில் 4 பேர்

மகன்கள் இருவர், முருகன், அவரது மனைவி மகேஸ்வரி ஆகிய 4 பேர் மட்டுமே பங்கேற்க விஜயா உடல் நேற்று காலை 11 மணி அளவில் திண்டுக்கல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதுகுறித்து முருகன் கூறியதாவது: எனது அண்ணன் காளியப்பன் இறந்தவுடன் அவர்கள் குடும்பத்தில் அவ்வளவாக தொடர்பு இல்லாதநிலை ஏற்பட்டது. நான் கேரளாவில் கூலி வேலை செய்கிறேன். எனக்கு தகவல் கூறியவுடன் கேரளாவில் இருந்து புறப்பட்டு வந்தேன்.

நானும் கூலி வேலை செய்து பிழைப்பதால், எனது குடும்பத்தைப் பார்க்கவே சிரமமான நிலையில், எனது அண்ணன் குழந்தைகளுக்கு உதவ அரசு முன்வர வேண்டும் என்றார்.

திண்டுக்கல் மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநர் மாலதி கூறியதாவது: திண்டுக்கல் மின்மயானத்தில் கட்டணம் இன்றி உடலை அடக்கம் செய்ய மின்மயான அறக்கட்டளையினரிடம் கேட்டுக்கொண்டேன். அவர்களும் உதவினர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் உடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x