Published : 08 Jan 2018 17:17 pm

Updated : 08 Jan 2018 17:20 pm

 

Published : 08 Jan 2018 05:17 PM
Last Updated : 08 Jan 2018 05:20 PM

யானைகளின் வருகை 113: கரடிகளிடம் கடிவாங்கிய வனவர்கள்!

113

''இங்கே டவுனுக்கே (கொலக்கம்பை) ராத்திரி நேரத்துல கரடிங்க வந்துடுது. அதனால நாங்க சாயங்காலம் அஞ்சாறு மணிக்கு மேல் வெளியே வருவதேயில்லை. அப்படியே கிராமத்திலிருந்து வந்தாலும் ராத்திரியில தீவட்டியோடதான் வரவேண்டியிருக்கு. ஃபாரஸ்ட்டுல சொன்னா, அவங்க எந்த நடவடிக்கையும் எடுக்கறதில்லை. கரடிக இருக்கிற பகுதிக்கு மின்சார வேலி போடலாம். கடிபட்டவங்களுக்கு நிவாரண உதவிகள் தரலாம். வெட்டப்பட்ட சைபர் மரங்களுக்கு பதிலாக வேறு மரங்களை நட ஏற்பாடு செய்யலாம். இப்படி அவங்க எதுவுமே செய்யறதில்லை. பதிலுக்கு யாராவது கரடியால கடிபட்டுட்டாங்கன்னு சொன்னா வர்றாங்க. ஆஸ்பத்திரியில் சேர்க்கிறாங்க. ஆஸ்பத்திரியில் மருத்துவம் பார்க்கறதை சொன்னா அதை விட கொடுமை. கொலக்கம்பையில் இருக்கிற ஆஸ்பத்திரிக்கு வாரம் ஒரு தடவைதான் டாக்டரே வர்றார். மற்ற நாள்ல ஒரு நர்ஸ், ஒரு அட்டெண்டர் மட்டும் இருப்பாங்க. அவங்களும் அடிக்கடி வர்றதில்லை. அதனால குன்னூர் (20 கிலோமீட்டர்) ஆஸ்பத்திரிக்குத்தான் போக வேண்டியிருக்கு!'' என்றார் ரங்கநாதன் வேதனை பொங்க.


இந்த ஊரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பேசும்போது, ''இங்கே கரடிகள் மட்டுமில்லீங்க. சிறுத்தைப் புலிகளும் பெருகிடுச்சு. பதினைஞ்சு நாளைக்கு முன்னால இங்கே மானார் மாரியம்மன் கோயில் இருக்கும் எஸ்டேட் பக்கம் ஒரு புலி உறுமுற சத்தமும், இன்னொரு பக்கம் கரடி கத்தற சத்தமும் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. அதுல அங்கிருந்த குடும்பங்க எல்லாம் இங்கே ஓடி வந்துடுச்சு. ஒரு வாரம் குடியிருப்பு பக்கமே போகலை. நேத்து கூட இங்கிருக்கிற போலீஸ் ஸ்டேஷன் பின்னாடி சிறுத்தைப் புலி வந்துடுச்சு. நாங்க பயந்து நடுங்கிட்டு இருந்தோம். இங்கே இப்படி கரடிகளோ, சிறுத்தையோ கொஞ்ச காலம் முன்னாடி வரை இப்படி வந்ததேயில்லை. அந்த அளவுக்கு அதுக வாழ்ந்து வந்த சோலைக்காடுகளை என்னவோ செஞ்சிருக்காங்க. அதுதான் அதுவெல்லாம் இங்கே படையெடுக்குது!'' என்றார்.

கரடியால் கடிபட்ட முனியம்மாள், துரையிடம் பேசியபோது, ''நாங்க கூலித்தொழிலாளிங்க. கரடிக்கடிக்கு ஆஸ்பத்திரியில் படுத்ததுல ஏகப்பட்ட பணம் செலவாயிருச்சு. அரசாங்கம் பார்த்து ஏதாச்சும் செஞ்சா நல்லாயிருக்கும்!'' என்றனர் வேதனை பொங்க.

இங்குள்ள வனத்துறையினரோ, ''இங்கே கரடிகள் அதிகமானதற்கு சைபர் மரங்கள் வெட்டப்பட்டது மட்டும் காரணமில்லை. கரடிகள் வளர்வதற்கும், இனவிருத்தி செய்வதற்குமான சூழல் இங்கேதான் அமைந்துள்ளது. அதனால்தான் அவை பல்லாயிரக்கணக்கில் பல்கிப் பெருகியுள்ளன. அதை நாம் என்ன செய்ய முடியும். நம் மக்கள் அதை துன்புறுத்தாமல் வாழ்ந்தால் அது இவர்களை துன்புறுத்தாது!'' என்றே கூலாக பேசினர்.

அப்போது மட்டுமல்ல, அதற்குப் பிறகும் கிராமத்து மக்கள் கரடிகளுக்கு துன்பம் கொடுக்காமல்தான் வாழ்ந்தனர். ஆனால் கரடிகள்தான் விடுவதாக இல்லை. தொந்தரவு கூடுதல் ஆனதே ஒழிய குறையவில்லை.

கரடிகளால் ஏற்பட்ட அலறல் சத்தம் இதற்கு 2 ஆண்டுகள் கழித்து இதை விட கூடுதலாக ஒலித்தது தூதூர் மட்டம் கிராமத்தில். கொலக்கம்பையிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்திற்கு அருகில் கெரடாலீஸ், மகாலிங்கம் காலனி உள்ளிட்ட சில குடியிருப்பு பகுதிகளும் உள்ளது. பட்டுக்கம்பளம் விரித்தது போல் காடுகளும், எஸ்டேட்டுகளுமாக பசுமை கொஞ்சும் இப்பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

கொலக்கம்பை பகுதியில் கட்டுக்கடங்காமல் பெருகிய கரடிகள், அங்கே காட்டுக்குள் போதிய பழங்கள், கிழங்குகள் கிடைக்காததால் இவை தூதூர் மட்டத்திற்கு விஜயம் செய்யத்தொடங்கின. அவை ஒரு கட்டத்தில் ஆட்டுமந்தைகள் போலவே இரவு நேரங்களில் வர ஆரம்பித்துவிட்டன.

அந்த வகையில் 2006-ம் ஆண்டு கார்த்திகை மாத குளிரில் பட்டப்பகலில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த குட்டியம்மாள் என்ற பெண்மணியை கரடி ஒன்று கடித்துக்குதறிவிட்டது. கல், கட்டைகளை வீசி கரடியை விரட்டிய எஸ்டேட் தொழிலாளர்கள் குட்டியம்மாளை மீட்டு குன்னூர் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து அந்த வருடம் நவம்பர் 21-ம் தேதியன்று கடை மட்டம் பகுதியில் மேலூர் பஞ்சாயத்து தலைவர் மணி என்பவரது குடோனில் மூன்று கரடிகள் தங்கியிருக்கின்றன. தட்டு முட்டுச் சாமான்கள் போட்டு வைத்திருந்த அந்த குடோனை மணியின் வேலையாள் ஒருவர் போய் திறந்திருக்கிறார். அடுத்த கணம். கரடிகள் அவர் முன் வந்து நின்று உறும, அவர் அலறியடித்து ஓட, ஊரே திரண்டு வந்து கல்வீசியிருக்கிறது.

கரடிகள் குடோனின் பின்பக்க மரச்சுவரை உடைத்துக் கொண்டு தப்பியோடியிருக்கின்றன. அழையா விருந்தாளிகளாக வந்த கரடிகளை மக்கள் பின்தொடர்ந்து விரட்ட, அக்கடா என்று அப்போது எதிரே வந்து கொண்டிருந்த சோமசுந்தரம் என்பவர் மீது தங்கள் ஆத்திரத்தை காட்டியிருக்கின்றன கரடிகள்.

அவரை அக்குவேறு ஆணிவேராக கழற்றிட கரடிகள் படுத்தி எடுக்க, அவரை அரும்பாடுபட்டு ஊர் மக்கள் மீட்டிருக்கிறார்கள். உதடு, தலை என ஏகப்பட்ட காயங்களுடன் சேர்க்கப்பட்டார் சோமசுந்தரம். அவருக்கு சிகிச்சையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தையல். அதற்கு அடுத்தநாளே மற்றொரு சம்பவம்.

இந்த பகுதியிலிருந்து பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகள் கூட்டங்கிரி என்ற இடத்தில் ஒரு கரடி படுத்து தூங்குவதை பார்த்துப் பயந்து போய், வந்த வழியே திரும்பி ஓட்டமெடுத்திருக்கிறார்கள். கடைசியில் பொதுமக்கள் பாதுகாப்பாக அவர்களை பள்ளிக்கு கூட்டி சென்றிருக்கிறார்கள்.

இது பற்றி தொடர்ந்து புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாது இருந்த வனத்துறையினர், ஆஸ்பத்திரியில் கரடி கடித்தவர்கள் எண்ணிக்கை உயர, அதை புள்ளிவிவரமாக மீடியாக்கள் வெளியிடவே அதிர்ந்து போய் தூக்கம் விழித்திருக்கிறார்கள். உடனே சோம்பல் முறித்து தூதூர் மட்டத்திற்கும் வந்திருக்கிறார்கள்.

''போன மாசத்தில் மட்டும் எங்களில் பதினைந்து பேர் கரடிகிட்ட கடிபட்டிருக்கிறோம். இவ்வளவு நாளா எங்கே போயிருந்தீங்க?'' என்று பொதுமக்கள் பொறும, அவர்களை அமைதிப்படுத்திய வனத்துறையினர், ''கரடிகளை காட்டுக்குள் விரட்டியடித்து உங்களை நிச்சயம் காப்பாற்றுகிறோம்!'' என்று வாக்குறுதி அளித்தனர்.

தொடர்ந்து துப்பாக்கி, தீப்பந்தம், பட்டாசுகள் சகிதம் முப்பது பேர் கொண்ட வனத்துறை ஊழியர்கள், வீரப்பன் வேட்டைக்குப் போன அதிரடிப்படையினர் போல களம் இறங்கினர்.

அதில் ராமன் ராகேஸ் வன ஊழியர்கள் (25.11.2006 அன்று) குழு ஒரு கரடியிடம் மாட்டிக் கொண்டது. புதர் மறைவில் பதுங்கியிருந்த அந்த கரடி திடீரென பாய்ந்து வனவர் ராமனை அள்ளி அரவணைத்து அவரது கையை கடித்துக் குதறியிருக்கிறது. கரடிப்பிடியில் சிக்கித் தவித்த ராமனை காப்பாற்றப் போன தாமோதரன், ராகேஸ் ஆகியோரையும் கரடி ஆவேசமாக பிறாண்டித் தள்ள மற்ற ஊழியர்கள் உஷாராகி வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

தொடர்ந்து கரடி தலை தெறிக்க காட்டுக்குள் ஓட, ராமன் ஊட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜாம்பவான்களான கரடிகளிடம் ஜம்பம் பலிக்காததால் விதிர்விதிர்த்து நின்ற வனத்துறையினர் அப்போதுதான் ஒரு பாதி உண்மையை வெளியிட்டனர்.

''கரடிகள் பெருகி விட்டதால் காடுகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த மலைகிராமங்களில் உள்ள கொய்யா, மேராக்காய், பேரிக்காய் பழங்கள் கரடிகளுக்கு பிடிக்கும் என்பதால் அவை ஊர்ப்பகுதியிலேயே டேரா போட்டு குடைச்சல் தருகின்றன. புலி, சிறுத்தையைப் போல கரடிகளை கூண்டு வைத்து பிடிக்கவும் முடியாது. ஒரு கரடி கூண்டில் சிக்கினால் மற்ற கரடிகள் வந்து கூண்டை உடைத்து துவம்சம் செய்துவிடும். பட்டாசு வெடித்து பயமுறுத்தி கரடிகளை விரட்டுவதுதான் சரியான வழி. பொதுவாக கரடிகள் பயந்த சுபாவம் கொண்டவை. சத்தம் கேட்டால் ஓடி விடும். அதோடு அது அரைக்குருடு. பார்வை சரியாக தெரியாது. தப்ப முடியாது என்று தெரிந்தால்தான் மனிதர்களை அவை தாக்கும்.

ஆனால் இங்குள்ள கரடிகள் மனித வாசனைக்கு பழகிப் போனதால் துணிச்சலுடன் திரிகிறது. புதர் மறைவிலிருந்து பதுங்கி, கொரில்லாப் படை போலவே தாக்குகின்றன. அதிலும் துப்பாக்கியுடன் ரோந்து போகும் வனத்துறை ஊழியர்களை, கரடிகள் தாக்கியதே இல்லை. ஆனால் இப்போது அப்படி நடப்பது எங்களுக்கே ஆச்சரியத்தை தருகிறது. மனித பயத்தை கரடிகள் அறவே தொலைத்து விட்டதைத்தான் இவற்றின் செயல் காட்டுகிறது. இருந்தாலும் எங்களுக்கு கடமை என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதற்காக கரடிகளை காட்டுக்குள் விரட்டியே தீருவோம்!'' என்றனர் அப்போது நம்மிடம் பேசிய வனத்துறையினர் குழு.

என்றாலும் இன்று வரை இந்த கிராமங்களில் மட்டுமல்ல. இதையும் தாண்டி கரடிகள் புறப்பட்டு மக்களை ஒரு வழி செய்து விடுகின்றன. முக்கியமாக பேரிக்காய் எங்கெல்லாம் விளைகிறதோ, அங்கெல்லாம் கரடிகள் துள்ளி விளையாடுகின்றன.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

தவறவிடாதீர்!    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x