Published : 08 Dec 2017 08:43 PM
Last Updated : 08 Dec 2017 08:43 PM

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!

 

ஈட்டி மரங்களும், மூங்கில் காடுகளும் கூடலூர் வனத்தில் அந்தப் பாடுபட்டது என்றால் வனவிலங்குகள் என்ன பாடுபட்டிருக்கும்? அந்தத் தாக்குதலில் அந்த மிருகங்கள் அப்பாவி மனிதர்களை எத்தனை இம்சைக்குள்ளாக்கியிருக்கும்? புலியால் கிராம மக்கள் பட்ட பாடுகளை ஏற்கெனவே விரிவாகப் பார்த்தோம். மற்ற வனவிலங்குகள் இங்கே என்ன பாடுபட்டன. மக்களும் எப்படியெல்லாம் இன்னலுக்கு ஆளாகினர்? இன்னமும் சிலவற்றை பார்ப்போம்.

பந்தலூர் தட்டாம்பாறை ஆதிவாசிகள் கிராமத்தைச் சேர்ந்த பாலன் (வயது 55) 2014 ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி மதியம் அய்யன்கொல்லி என்ற இடத்தில் இருந்து வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டு நடந்து வந்துள்ளார். அப்போது அங்கே 13 யானைகள் புதர் மறைவில் நின்றிருந்துள்ளன. முதலில் மறைந்து இருந்த ஓர் யானை வேகமாக ஓடி வந்து பாதையில் நடந்து வந்த பாலனை தூக்கி வீசியதில் அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதை அறிந்த பாலனின் மனைவி வெள்ளச்சியும் அக்கம் பக்கம் இருந்த மக்களும் திரண்டு யானைகளை விரட்டியுள்ளனர். பாலனின் உடலை மீட்டு ஊர்வலமாக அய்யன்கொல்லி வந்தனர். அங்கு உடலை நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது.

அதன்பிறகு வந்த அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து யானைகள் தொல்லை இருப்பதாகவும், அதை காட்டுக்குள் விரட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால்தான் தொடர்ந்து உயிர்ப்பலி நடப்பதாகவும், உயிரிழந்த பாலனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், மக்களின் உயிர் உடமைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அதிரடிப்படை போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.

அப்போதும் இரவு பகல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர் மக்கள். மாவட்ட ஆட்சியரே அந்த இடத்திற்கு வந்து பாலனின் மனைவியிடம் ரூ. 3 லட்சம் காசோலை வழங்கி, மீதி ரூ.7 லட்சம் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று வாக்குறுதி தந்தபிறகே போராட்டம் கைவிடப்பட்டது.

2014 டிசம்பர் 13-ம் தேதி கூடலூர் தாலுக்கா பார்வுட் பகுதியில் ரேஷன் கடைக்குச் சென்ற வெங்கடாசலம் என்ற 52 வயது தோட்டத்தொழிலாளி ஒருவரை காட்டு யானை தாக்கிக் கொன்றது. பல நாட்களாக அப்பகுதியையே சுற்றி வந்த ஒற்றை ஆண் யானை தந்தத்தால் அவரை குத்திக்குடல் சரிந்து இறந்திருக்கிறார் என்பதை அறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறையின் மெத்தனத்தை கண்டித்து ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இதே காலகட்டத்தில் பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி கண்ணம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மரியம்மாள் யானை தாக்கி இறந்தார். 50 வயதான இவர் இங்குள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் நிரந்தரத் தொழிலாளியாக பணிபுரிந்தவர்.

டிசம்பர் 14-ம்தேதி காலை 7.30 மணிக்கு மற்ற பெண் தொழிலாளர்களுடன் தேயிலை பறிப்பில் ஈடுபட்டிருந்தபோதுதான் யானை தாக்கி உயிரிழந்தார் இவர். இதற்கும் மக்கள் போராட்டம் வெடித்தது. இதில் இவர்களை மிரட்டிய காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்தனர்.

இதனால் இவர்கள் நீதிமன்றத்திற்கு நடையாய் நடக்க, யானைகளோ தொடர்ந்து இவர்கள் வீடுகளை முற்றுகையிட்டுக் கொண்டும், சேதப்படுத்திக் கொண்டும் இருந்தன. எனவே யானைகளை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்ற கோரிக்கையோடு, தங்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் செய்ய ஆரம்பித்தனர் இப்பகுதி மக்கள். பிறகுதான் காட்டு யானைகளை விரட்டும் பணியை ஆரம்பித்தனர் வனத்துறையினர். என்றாலும் இன்னமும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

2015 ஜூலை 23-ம் தேதி ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை கிராமத்தில் புகுந்த யானைகள் இந்திராணி என்பவரது வீட்டை இடித்து சேதப்படுத்தியது. அந்த சமயம் இந்திராணி தன் மகனுடன் ஓடி அருகில் உள்ள வீட்டில் புகந்ததால் அவர்கள் தப்பினர்.

மசினக்குடி பொக்காபுரத்தை சேர்ந்த 50 வயது பாலன், தன் மனைவி மாசியுடன் 2015 மே மாதம் 1-ம் தேதி தன் வீட்டின் அருகில் உள்ள எஸ்டேட்டில் விறகு பொறுக்கச் சென்றுள்ளார். அங்கே வந்த ஆண் யானை பாலனை துரத்திக் கொல்ல, மாசி ஓடி தப்பினார். தன் கண்ணெதிரே தன் கணவன் யானை தன் கொம்பால் குத்திக் கொன்றதை பார்த்து மனநிலை பாதிக்கப்பட்டார்.

ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஜீபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த மாதவன் (வயது 53) மே 2015-ம் தேதி யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவர் உயிரிழந்தார். 2015 ஜனவரி 14-ம்தேதி பந்தலூர் படச்சேரி கிராமத்தைச் சேர்ந்த அனிஷ் என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். அத்தோடு அந்த பகுதியில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் தம் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பில்லை; காட்டு யானைகள் வனத்திற்குள் விரட்ட வேண்டும் என்று போராட ஆரம்பித்தனர் மக்கள்.

இதன் பின்னணியில் படச்சேரி, சின்கோனா பகுதியில் குடியிருப்புக்குள் நுழையும் யானைகளை முதுமலையில் இருந்து இரண்டு வளர்ப்பு (கும்கி) யானைகளை வைத்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதில் தொந்தரவுக்குள்ளான யானைகள் சேரம்பாடி பத்தேரி சாலையில் பயணிக்க, அதில் ஒரு காட்டு யானை அந்த வழியே வரும் வாகனங்களையெல்லாம் மறித்து நின்றது. அத்தோடு நில்லாமல் அத்தனை பேரின் கண்ணெதிரே அவ்வழியே வந்த ஒரு லாரியை தன் தும்பிக்கையால் அடித்து உடைத்து நொறுக்க ஆரம்பித்தது.

தேவர் சோலை பஞ்சாயத்துக்குட்பட்ட செம்மகொள்ளி பழங்குடியின கிராமத்தில் 2017 மே 5-ம் தேதி மாறன், அவர் மனைவி பிடிச்சி மற்றும் அவர் குழந்தைகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இரவில் இங்கு வந்த 3 காட்டு யானைகள் இவர்களது வீட்டுக்கூரையை உடைத்து, தும்பிக்கையை அதற்குள் விட்டு, உப்பு, அரிசி, புளி போன்ற அனைத்துப் பொருட்களையும் சாப்பிட்டது. மாறன், பிடிச்சி தம் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி தப்பித்தனர். அதற்குப் பிறகும் உப்பு, புளி, அரிசி சாப்பிட்ட யானைகள் அந்த பகுதியையே சுற்றி, சுற்றி வந்தது. பல வீடுகளை கடைகளை பதம் பார்த்தது.

இன்னமும் இந்த அவலம் இந்த சுற்றுவட்டார கிராமங்களில் தீராத தொடர்கதையாக நடந்து கொண்டு வருகிறது. இப்படி கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மட்டும் 2016-ம் ஆண்டில் 31 நபர்களுக்கு மேல் யானைகள் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கிறார்கள் சூழலியாளர்கள். அதோபோல் யானைகள் இறப்பும் இப்பகுதியில் 84-ஐ தொட்டுள்ளதாக சொல்லுகிறார்கள்.

ஆசிய யானைகளைப் பொறுத்தவரையில் இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன. குறிப்பாக கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு பகுதிகளில்தான் இது அதிகம். இந்த மூன்று மாநிலங்களின் இயற்கை வள உயிர்முடிச்சு சந்திப்பான நீலகிரி காடுகளில் மட்டும் இவ்வளவு யானைகள் இறந்தால் நிலைமை என்னாகும்?

''இன்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வந்ததேயில்லை. அப்படியே வந்தாலும் மக்களைத் தாக்கும் அளவுக்கு சென்றதேயில்லை. இப்போதுதான் ஆட்களைப் பார்த்தாலே துரத்துகிறது கொல்கிறது. அந்த அளவுக்கு அதன் வாழ்விடம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அதன் உளப்போக்கும் மாறுதலுக்குள்ளாகியுள்ளது!'' என்பதே சூழலியாளர்கள் தெரிவிக்கும் கருத்து.

''யானைகளால் மனிதர்கள், மனிதர்களால் யானைகள் மட்டுமல்ல காட்டுப்பன்றி, காட்டு மாடுகள், கரடி, மயில், குரங்குகள், சிறுத்தைகள், மான்கள் போன்ற வனவிலங்குகளுக்கும், வனவிலங்குளால் மனிதர்களுக்கும் நடக்கும் சேதங்கள் நீலகிரி காடுகள் போல் வேறு எங்கும் நடக்குமா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு இந்த சேதங்கள் இருப்பதற்கு காரணமே வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளின் அலட்சியமே.

இங்கே பலவிதமான பாதிப்புகளை மலைவாழ் மக்களும், காடு சார்ந்து வாழும் மக்களும் அனுபவித்து வருகின்றனர். நெல், வாழை, கரும்பு, பாக்கு, காய்கறிகள் பெரும் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். இதற்கான இழப்பீடும் பெரும்பாலும் கிடைப்பது இல்லை. அப்படியே பெறுவதென்றாலும் சுலபமானதாக இருப்பதில்லை. பாதிக்கப்படும் மக்கள் தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் போராடி பல விதமான ஒடுக்கு முறைக்கு உள்ளாகியே வருகின்றனர். உண்மையான நிலைகளை மறைத்து மக்கள் மீதே பழிபோட்டு வனக் கொள்ளையர்களையும், வனத்துறையினரை காப்பாற்றும் வேலைகளையும் தொடர்ந்து மீடியாக்கள் மூலம் செய்வதை பல்வேறு சுற்றுச்சூழல் என்ஜிஓக்களும் செய்கின்றனர்!'' என ஆவேசப்படுகிறார் கூடலூர் செல்வராஜ். எப்படி? 

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x