Published : 25 Nov 2017 03:17 PM
Last Updated : 25 Nov 2017 03:17 PM

யானைகளின் வருகை 87: காணாமல் போன புல்வெளிக்காடுகள்!

 

இந்த அந்நிய நாட்டு மர வளர்ப்புக்கு நீலகிரியின் அழகிய பசும்புல்வெளிகளும், புதர்காடுகளும் கூட இரையாகின. இது சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் உலை வைத்து, நீலகிரியின் சூழலையே திசை மாறச் செய்தன. இந்த சமூகக் காடுகள் வளர்ப்பின் மூலம் இதனூடே உண்ணிச் செடி, பார்த்தீனியம் போன்ற விஷ செடிகளை வனத்துக்குள் வளரச் செய்தனர்.

சுற்றுச்சூழலில் சிறிதும் அக்கறையில்லாதவர்கள் வர்த்தக லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அந்நிய நாட்டு மரங்களை, தாவரங்களை நமது பசுமையான காடுகளிலும், வேளாண் நிலங்களிலும் கூட பயிரிட ஆரம்பித்தனர். இத்தகைய மரங்கள் அவுஸ்டேலியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா தென் அமெரிக்கா, கரிபீயன் தீவுகள் போன்ற நாடுகளிலிருந்து 1870, 1875, 1940, 1978-ம் ஆண்டு காலகட்டங்களில் கொண்டு வரப்பட்டதாகத் தெரிகிறது. இந்த வகை மரங்களும், செடிகளும் இயற்கையின் சமன்பாட்டை தவிடுபொடியாக்கியும் விட்டது. இந்த வகை அந்நிய மரங்களும், செடிகளும் இதன் உயரத்தை விட வேர்கள் நான்கைந்து மடங்கு பூமிக்கு அடியில் சென்று அனைத்து சத்துகளையும், நிலத்தடி நீரையும் உறிஞ்சி எடுத்து விடும். இதன்கீழ் எந்த தாவரத்தையும் வளரவிடாது என்பதும் அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மை.

யூகாலிப்ட்ஸ் மரம் மண்ணுக்கு அடியில் இருக்கும் நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுத்து ஆவியாக்கிவிடும் தன்மை கொண்டது. இந்த மரம் நாளொன்றுக்கு பல லிட்டர் தண்ணீரை உறிஞ்சி ஆவியாக்கும். இதனால் நிலம் வறண்டு போவதோடு, மழை பெய்யும் அளவையும் குறைக்கும். இதேபோல் தேக்கு மரத்திற்கு கீழ் எதுவும் முளைக்காது. இது வளமான மண்ணை மணலாக மாற்றும். இன்றைக்கு மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் நீக்கமற நிறைந்திருக்கும் உயரமான தேக்கு மரக்காடுகளை பார்த்து, 'காடுகள் பெருகியுள்ளது, வளமாக உள்ளது!' என்றெல்லாம் தப்புக் கணக்கு போடுகிறார்கள்.

உண்மையில் தேக்கு மரக்காடுகள் என்பது வணிகத்திற்கானதே ஒழிய, எந்த இடத்திலும் மண் மற்றும் உயிரினங்கள் வளர்ச்சிக்கும், வளத்துக்குமானது அல்ல. இன்னும் சொல்லப்போனால் இதன் இலை, தழைகளை யானைகள் முகர்ந்து கூடப் பார்க்காது. இதே குணம்தான் பார்த்தீனியம் மற்றும் உண்ணிச் செடிகளுக்கும். இதில் பறவைகளும், பட்டாம்பூச்சிகளும் கூட இதைத் தொட்டுப் பார்க்காது.

மேலும் யூகாலிப்ட்ஸ், தேக்கு, ஹக்கேசியா, உண்ணிச் செடி, பார்த்தீனியம் போன்றவைகள் வன உயிரினங்களுக்கு பெரிதும் பயன்படும் ஆயிரக்கணக்கான மூலிகைச் செடிகளை வளரவிடாமல் தடுத்தது. அவற்றை அழித்தும் வந்துள்ளது.

தற்போதுள்ள முதுமலையில் 321 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் உண்ணிச்செடியும், பார்த்தீனியமும் மூலைக்கு மூலை மண்டிக் கிடக்கிறது. உண்ணிச் செடிகளுக்குள் யானைகள் கூட புகுந்து வெளியே வரமுடியாது. பசுமையான தாவரங்களும், புற்களும் செழித்து வளர்ந்தால்தான் மான், காட்டெருமை, முயல் போன்ற தாவர உண்ணி விலங்குகளின் உணவுத் தேவை பூர்த்தியாகும். அவை இனவிருத்தியும் அடையும். இந்த பசுந்தீவனங்கள் இல்லாத இடங்களில் இத்தகைய விலங்குகள் அரிதாகி விடும்.

இதே போல் யானைகளுக்கும், இதர வனவிலங்குகளுக்கும் உயிர் நாடியாக விளங்கும் தாவரம் மூங்கில். இங்கே திரும்பின இடங்களிலெல்லாம் அடர்ந்து வளர்ந்து கிடந்த மூங்கில் காடுகள் அனைத்தும் தற்போது அழிந்தே போய் விட்டது. நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் 5520 சதுர கிலோமீட்டர் தூரத்தில் பசுமையான பல இன மூங்கில் காடுகள் இருந்தன. இந்தக் காடுகளை பழங்குடியின மக்கள், இதர காடு சார்ந்த வாழும் மக்களும், பல்லின சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்தினர்.

காய்ந்த, முற்றிய மூங்கில்களை வெட்டிக்கொண்டு வந்து வீடுகள் அமைத்தனர். தானியங்கள் போட, குதிர்கள் கட்ட என இதர வேலைகளுக்கும் இவற்றையே பயன்படுத்தினர். முற்றிய மூங்கில்களை வெட்ட, வெட்டத்தான் புதிய இலைகள் வளரும். இதனால் மூங்கில் காடுகளும் அழியாமல் இருக்கும். ஆனால் இதனைச் செய்யவிடாமல் மக்களைத் தடுத்ததோடு, மூங்கில் காடுகளில் முற்றிய மூங்கில்களோடு, தளிர், பிஞ்சு என சகலத்தையும் அழித்து, அதில் கிடைத்த கோடிக்கணக்கான வருவாயில் குளிர் காய்ந்தனர் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும். இதனால் எஞ்சிய மூங்கில் புதர்காடுகள் 90 சதவீதம் அழிந்தே போய்விட்டது.

ஒரு மூங்கிலின் வயது 40 முதல் 45 வருடங்கள்தான். அதன் பிறகு அது காய்ந்து போய்விடும். அதற்கேற்ப, அதன் முற்றிய கிளைகளை வெட்டிவெட்டி புதிய துளிர்களை வளர இடம் தர வேண்டும். அந்த வேலையை வாழ்நிலை இயல்பாகவே பழங்குடியினர் செய்து வந்தனர். அதற்கு தடை விதித்து கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததால் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளில் பெரும் பேரழிவைச் சந்தித்தது மூங்கில். இதுபோன்ற நிலை ஏற்பட்டால் தாவர உண்ணிகளான மான்கள், முயல், காட்டு மாடு, காட்டு யானைகள் போன்ற தாவர உண்ணிகள் குறைந்தன. மான், காட்டு மாடு என அடித்துச் சாப்பிடும் ஊன் உண்ணிகளான புலி, சிறுத்தைகளுக்கு உணவு கிடைக்காது போனது. இந்த உணவுச்சங்கிலி துண்டுபடல் முதுமலை, முத்தங்கா, பந்திப்பூர் போன்ற பகுதிகளில் நீக்கமற தற்போது நிறைந்திருக்கிறது.

1986-ம் ஆண்டு வரை முதுமலையை ஒட்டியிருக்கும் மசினக்குடி, மாயார், சிங்காரா, பொக்காபுரம், மாவனல்லா, சிரியூர் போன்ற பகுதிகளில் 22 ஆயிரம் மாடுகளுக்கு மேல் இருந்தன. அத்துடன் 36 ஆயிரம் ஆடுகளும் இருந்தன. இந்த கால்நடைகள் முதுமலை மற்றும் சுற்றுவட்டாரக் காடுகளுக்குள் சென்று மேய்ச்சலில் ஈடுபட்டதால் பல்வேறு நன்மைகளை காடுகளுக்கு செய்தது.

கறிவேப்பிலை, முருங்கை கிளைகளை ஒடிக்க ஒடிக்கத்தான் கிளைகள் வெடித்து வளரும் என்பார்கள். அதுபோல ஆடு, மாடுகள் மேய, மேயத்தான் புல் பூண்டுகள் கிளை வெடித்து, அடர்த்தி கூடி உற்பத்தி பெருகும். காடுகளும் செழிக்கும். இயற்கையான கால்நடை கழிக்கும் மேல் வேறு எந்த எருவும் அதற்குத் தேவையில்லை. இதை சற்றும் உணராத வனத்துறையினரும், அதற்கு ஆதரவாக குரல் கொடுத்த தன்னலமே மறைமுகமாக பொருள் கொண்ட சில சூழலியல் பேசுபவர்களும் கால்நடைகள் மேய்வதையே இங்கு தடுத்து விட்டனர்.

இதன் விளைவு. காடுகளுக்குள் உண்ணிச் செடி, பார்த்தீனியம் பெருக்கெடுத்து விட்டன. பசுமைப்புல்வெளி காணாமலே போய்விட்டது.

காங்கயம், புளியங்குளம் போன்ற மசினக்குடி பாரம்பரிய நாட்டு மாட்டு இனம் அழிக்கப்பட்டு இருக்கிறது. கால்நடைகள், காட்டுக்குள் சென்ற போது தாவர உண்ணி, காட்டு விலங்குகள் கிடைக்கவில்லை என்றால் புலி, சிறுத்தை போன்றவைகள், அடிமாடுகளையே அடித்துத் தின்றது. தற்போது காட்டுக்குள் உணவுகள், தண்ணீர் கிடைக்காததால் புலி, சிறுத்தை, யானை, காட்டு எருமைகள், கரடிகள் மக்கள் வாழும் பகுதிகளுக்கு வந்து உயிர், உடமைகளுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்துகின்றன.

இப்படி தொடர்ந்து நடப்பதற்குக் காரணம் பலவாறாக மறைக்கப்படுகிறது. காடுகள் நிறைந்த பகுதியில் அங்கு வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு அந்தக் காடுகளை பராமரிப்பது, நிறுவனப்பொருட்கள் மூலமே நல்ல வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கலாம். ஆனால் அதை செய்ய மறுக்கின்றனர். மழைக்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கும்போது காடுகள் தீப் பிடிக்காமல் இருக்க தீத் தடுப்புக் கோடுகள் அமைக்கப்பட வேண்டும். கடுமையான வெயில் தொடங்கியவுடன் தீ தடுப்பு என்ற பெயரில் சாலை ஓரங்களில் வனத்துறையினர் தீ வைத்து சருகுளை எரிக்கின்றனர். சில சமயங்களில் இந்த தீ மொத்த காடுகளுக்கும் பரவி, ஒட்டுமொத்த தாவரங்களையும், மரங்களையும் சாம்பலாக்குகிறது. பல உயிரினங்களும் அழிந்து விடுகிறது. அதை மறைக்கக் கிடைத்த கருவியாக அப்பாவி மக்கள் அதிகாரிகளுக்கு பயன்படுகிறார்கள். இவர்கள் தலையில் பழியைப் போட்டு விடுவது சுலபம். அதைத்தான் வனத்துறையினரும், வன ஆராய்ச்சி, வன நலன் என்று சொல்லிக் கொண்டு அலையும் பல தன்னார்வத்தொண்டர்களும் செய்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த நீலகிரி காடுகளில் இது நடந்து வந்த இதே காலகட்டத்தில் கடைக்கோடியில் உள்ள தாழ்நிலப்பகுதிளான வயநாட்டுப் பகுதி காடுகளில் (தற்போதைய தமிழகத்தின் கூடலூர், பந்தலூர் கேரளாவில் வயநாடு அடங்கிய பகுதிகள்) பணியர், இருளர், குரும்பர், சோழ நாயக்கர் எனும் காட்டு நாயக்கர், முள்ளுக்குரும்பர் போன்ற பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

வயநாடு அன்றைக்கு வயல்நாடாகவே பரிணமித்ததாக சொல்கிறார்கள். அதுவே வேய் நாடாக இருந்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள். வேய் என்றால் மூங்கில். இங்கு ஏராளமான மூங்கிற் காடுகள் இருந்ததால் இதனை வேய் நாடு என்றிருந்திருக்கக் கூடும் என்பதும் வரலாற்று ஆசிரியர்கள் கருத்து.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x